மே 31 : நற்செய்தி வாசகம்
மே 31 : நற்செய்தி வாசகம்
தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
தூய ஆவியார் பெருவிழா
I திருத்தூதர் பணிகள் 2: 1-11
II 1 கொரிந்தியர் 12: 3b-7, 12-13
III யோவான் 20: 19-23
தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘Joyful News Magazine’ என்ற சஞ்சிகையில் வந்த ஒரு நிகழ்வு. நார்வேயைச் சார்ந்த நான்சென் (Nansen 1861- 1930) என்ற ஆய்வாளர், பனி படர்ந்த ஆர்ட்டிக் பகுதியில், மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழல் இருக்கின்றதா என்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப் புறப்பட்டுச் சென்றார். அப்படிப் புறப்படும்பொழுது நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு புறாவையும் தன்னோடு கொண்டுசென்றார்.
பல நாள்கள் பயணத்திற்குப் பின்பு, ஆர்ட்டிக் பகுதியை வந்தடைந்த நான்சென், மிகப் பொறுமையாகத் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினார். எங்கு பார்த்தாலும் பனி படர்ந்திருந்த அந்தப் பகுதியில் இருப்பது இவருக்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும், வந்த வேலையை முடிக்காமல் பாதியில் செல்வது நல்லதல்ல என்பதை உணர்ந்த இவர், தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். இப்படி இவர் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டதால், நாள்கள் போனதே தெரியவில்லை; கண்மூடி முழிப்பதற்குள் இரண்டு ஆண்டுகள் ஓடியிருந்தது இவருக்குத் தெரிந்தது.
இதனால் இவர், தன்னுடைய வீட்டில் இருப்பவர்களுக்குத் தான் பத்திரமாகத்தான் இருக்கின்றேன் என்ற செய்தியைச் சொல்ல விரும்பினார். அதனால் இவர் ஒரு காகிதத்தில், தான் மேற்கொண்டு வரும் ஆய்வு, நன்றாகப் போய்க்கொண்டிருப்பது பற்றியும் தான் பாதுகாப்பாக இருப்பது பற்றியும் எழுதி, தன்னோடு இருந்த புறாவின் காலில் கட்டி, அதனைத் தன்னுடைய வீட்டாருக்கு அனுப்பி வைத்தார். நான்சென் இருந்த இடத்திற்கும் இவருடைய வீடு இருந்த இடத்திற்கும் இடையே இரண்டாயிரம் கிலோ மீட்டர்கள். ஆனாலும், நான்சென் அனுப்பி வைத்த அந்தப் புறா, பாதுகாப்பாக, இவருடைய வீட்டிற்குச் சென்றது. புறாவையும் அதன்காலில் இருந்த காகித்தத்தில் பார்த்த இவருடைய மனைவியும் பிள்ளையும், நான்சென் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றார் என்று மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.
எப்படி ஆய்வாளர் நான்சென் அனுப்பி வைத்த புறாவைக் கண்டதும், அவருடைய குடும்பத்தார், நான்சென் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றார் என்ற மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தார்களோ, அப்படி விண்ணகப் புறாவான, தூய ஆவியார் சீடர்களிடம் வந்ததும், அவர்கள் விண்ணகத்திற்குச் சென்ற இயேசு, தந்தையின் வலப்பக்கத்தில்தான் இருக்கின்றார் என்றும் தங்களுக்குத் துணையாகத் தூய ஆவியார் இருக்கப்போகிறார் என்றும் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
ஆம், இன்று நாம் தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் சொன்னதுபோன்றே தூய ஆவியார் அவர்கள்மீது இறங்கி வருகின்றார். தூய ஆவியாரின் வருகை சீடர்கள் நடுவில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் அவர் நமக்கு விடுக்கும் அழைப்பு எத்தகையது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
துணிவைத் தரும் தூய ஆவியார்
யூதர்கள், இயேசுவைச் சிலுவையில் அறைந்துகொன்ற பிறகு, அவருடைய சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சித் தாங்கள் இருந்த இடத்தின் கதவை அடைத்தே வைத்திருந்தார்கள் (யோவா 20: 19). இத்தனைக்கும் உயிர்த்த ஆண்டவரைக் கண்ட மகதலா மரியாவும் (யோவா 20: 18) எம்மாவு நோக்கிச் சென்ற இரண்டு சீடர்களும் (லூக் 24: 15-16) சீமோன் பேதுருவும் (லூக் 24:34) உயிர்த்த ஆண்டவரைப் பற்றி மற்ற சீடர்களிடம் சொன்னபொழுதுகூட, அவர்கள் அதை நம்பாமல், அச்சத்தோடே இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று இரண்டு சொல்லி, தன் கைகளையும் விலாவையும் அவர்களுக்கு காட்டுகின்றார். மட்டுமல்லாமல், அவர் அவர்கள் மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்கிறார்.
Comments are closed.