நற்செய்தி வாசக மறையுரை (மே 30)

பாஸ்கா காலம் ஏழாம் வாரம்
சனிக்கிழமை
யோவான் 21: 20-25
“நான் விரும்பினால் உனக்கு என்ன?”
நிகழ்வு
ஒரு காட்டில் மயிலும் நாரையும் (Crane) அருகருகே வாழ்ந்து வந்தன. மயிலுக்குத் தன் தோகையைக் குறித்து மிகுந்த கர்வம் இருந்தது. இதுகூடப் பரவாயில்லை. அது தன்னோடு இருந்த நாரையின் நிறத்தைக் குறித்தும் அதன் தோற்றத்தைக் குறித்தும் மிகத் தரக்குறைவாக நினைத்து வந்தது. ஒருநாள் மயில் நாரையைப் பார்த்து, “நாரையே! என்னுடைய தோகையைப் பார். எவ்வளவு அருமையாக தோகைகள்; பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றன அல்லவா! ஆனால், உனக்குத் தோகை என்ற ஒன்று கிடையாது; உன்னுடைய நிறம்கூட வெளிறிப்போய் போய்ப் பார்ப்பதற்குச் சகிக்க முடியாதவாறு இருக்கின்றது. எப்படி நீ இதை வைத்துக்கொண்டு வெளியே திரிகிறாய்?” என்றது.
மயில் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த நாரை, அது பேசி முடித்ததும் இவ்வாறு சொல்லி அதனுடைய வாயை அடைத்தது: “மயிலே! எனக்கு உன்னிடம் இருக்கின்ற தோகை இல்லாமல் இருக்கலாம்; என்னுடைய நிறம்கூட வெளிறிப்போய்ப் பார்ப்பதற்குச் சகிக்க முடியாதவாறு இருக்கலாம்; ஆனால், என்னால் உயரமாகப் பறக்க முடியும். உனால் உயரமாகப் பறக்க முடியுமா…? நீ தரையை ஒட்டிப் பறப்பதால்தான் மனிதர்கள் உன்னை எளிதாகப் பிடித்துவிடுகின்றார்கள்.”
இதற்குப் பின்பு மயில் நாரையிடம் பேச்சுக் கொடுப்பதே இல்லை. (Melody of the Heart – Joji Valli) கடவுள் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி, தனித்தன்மையோடு படைத்திருக்கின்றார். அப்படி இருக்கும்பொழுது ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டுப் பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இன்றைய நற்செய்தி வாசகம் பேதுரு, யோவானைக் குறித்து இயேசுவிடம் கேட்கிறபொழுது, அதற்கு இயேசு தரும் பதிலாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இவருக்கு என்ன ஆகும் என்று இயேசுவிடம் கேட்ட பேதுரு
பேதுரு இயேசுவிடம் பேசிவிட்டு, அல்லது அவரிடம் தன்னுடைய குற்றத்தை அறிக்கையிட்டுவிட்டு திரும்பிப் பார்க்கின்றபொழுது, யோவான் தங்களைப் பின்தொடர்வதைப் பார்க்கின்றார். உடனே பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?” என்று கேட்கின்றார். இதற்கு இயேசு அவரிடம், “நான் வரும்வரை இவன் இருக்கவேண்டும் என நான் விரும்பினால் உமக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்கின்றார். இயேசு பேதுருவிடம் சொல்லக்கூடிய வார்த்தைகள் நமக்கு இரண்டு முதன்மையான செய்திகளை எடுத்துச் சொல்கின்றன. அதில் முதலாவது செய்தி, ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள் என்பதாகும்.
ஆண்டவர் இயேசு பேதுருவைத் திருஅவையின் நியமித்தார் (மத் 16: 18-19). அவருடைய விண்ணேற்றத்திற்குப் பிறகு பேதுரு திருஅவையின் தலைவராக இருந்து எப்படிப்பட்ட பணிகளைச் செய்தார் என்பதை திருத்தூதர் பணிகளின் முதல் பகுதியில் வாசிக்கின்றோம். இதற்கு முற்றிலும் மாறாக, யோவான் நீண்ட நாள்கள் வாழ்ந்து, தன்னுடைய எழுத்துகளின் மூலமாகவும் வாழ்வின் மூலமாகவும் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வந்தார். இப்படிப் பேதுருவும் யோவானும் வெவ்வேறு பணிகளைச் செய்ய இருந்தார்கள்; செய்தார்கள். இதனால்தான் இயேசு பேதுருவிடம், “…நான் விரும்பினால் உமக்கு என்ன?” என்று கேட்கின்றார். இயேசு பேதுருவிடம் இவ்வாறு சொல்வதன்மூலம், ஒவ்வொருவரும் தனித்தன்மையோடு படைக்கப்பட்டிருக்கின்றார்கள்; ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பணி கொடுக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தியை நமக்கு எடுத்துச் கூறுகின்றார்.
ஒவ்வொருவரும் அவருடைய நிலையிலிருந்து பணிசெய்வோம்
இயேசு பேதுருவிடம் சொல்லக்கூடிய வார்த்தைகள் நமக்கு எடுத்துரைக்கும் இரண்டாவது செய்தி, நாம் எந்த நிலையில் இருக்கின்றோமோ, அந்த நிலையில் இருந்து பணிசெய்வோம் என்பதாகும். கடவுள் நம்மைத் தனித்தன்மையோடு படைத்திருப்பதால், நம்மிடம் என்ன திறமை இருக்கின்றதோ, நமக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றனவோ அவற்றைக் கொண்டு நாம் இறைப்பணியைச் சிறப்புடன் செய்வதே நல்லது. அதை விடுத்து, அவரைப் போன்று நான் இல்லை, என்னைப் போன்று அவரில்லை என்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தால் நிம்மதியாக இருக்க முடியாது.
இயேசு பேதுருவிடம் சொல்லக்கூடிய, “நான் விரும்பினால் உனக்கு என்ன?’ என்ற வார்த்தைகள், ‘யோவான் அவர் வேலைப் பார்க்கட்டும், நீர் உம் வேலையைப் பாரும்’ என்று இயேசு சொல்வதுபோல் இருக்கின்றன. ஆகையால், நாம் யாரோடும் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்காமல், நாம் இருக்கின்ற நிலையிலயே இறைப்பணியைச் செய்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனை
‘நம்முடைய மகிழ்ச்சியைக் களவாடுகின்ற ஒரு பண்பு இவ்வுலகில் உண்டெனில், அது நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் மனப்பான்மைதான்’ என்பார் தியோடர் ரூஸ்வெல்ட் என்ற அறிஞர். ஆகையால், நாம், மற்றவரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்காமல், கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் படைத்திருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், தனிதன்மையாய் இருந்து, ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.