வாழ்வின் நாள் கொண்டாட்டங்களுக்கு திருத்தந்தையின் செய்தி
தூய ஆவியாரின் வருகையையொட்டி நிகழ்ந்து வரும் நவநாள் முயற்சிகளின் ஒரு பகுதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வரும் டுவிட்டர் செய்திகளில் ஒன்றாக, மே 28, இவ்வியாழன்று தூய ஆவியாரை மையப்படுத்தி மற்றொரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
“நமது காயங்களுக்குள் தூய ஆவியாரை வரவேற்கும்போது, அவர் நம் வேதனை நிறைந்த நினைவுகளில், நம்பிக்கை என்ற மருந்தைப் பொழிகிறார். ஏனெனில், தூய ஆவியார் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டுபவர்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
“வாழ்வின் நற்செய்தி” (Evangelium Vitae) என்ற தலைப்பில் திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், 1995ம் ஆண்டு வெளியிட்ட திருமடலின் 25ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் வேளையில், பிரித்தானியா, ஸ்காட்லாந்து, மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் கத்தோலிக்கர் வாழ்வின் நாளைக் கொண்டாடுவது பொருத்தமாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாடுகளின் ஆயர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.
வெஸ்ட்மின்ஸ்டர் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயரும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவையின் வாழ்வுப்பணிக்குழுவின் தலைவருமான ஆயர் John Sherrington அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செய்தியை அனுப்பியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நெருக்கடி வேளையில், உயிர்களின் மதிப்பை இவ்வுலகம் அதிகம் கண்டு வருகிறது என்று இச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நெருக்கடி காலத்தில் உயிர்களைக் காப்பதற்கு போராடிவரும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தோருக்காக தன் நன்றியையும் வெளியிட்டுள்ளார்.
மனித உயிரின் விலைமதிப்பற்ற பண்பை திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் தன் திருமடல் வழியே வலியுறுத்தியுள்ளார் என்பதை, தன் செய்தியில் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, தொற்றுக்கிருமியின் தாக்கத்திற்குப் பின், உயிர்களைப் போற்றி காப்பதற்கு இவ்வுலகம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
திருத்தந்தையின் செய்திக்கு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் சார்பில், நன்றி தெரிவித்துள்ள ஆயர் Sherrington அவர்கள், மனித வாழ்வு, கருவிலிருந்து கல்லறை வரை மதிப்புடன் நடத்தப்படவேண்டும் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி வருவதையும், தங்கள் நாட்டு ஆயர்கள், மனித வாழ்வுக்கு எதிராக கொண்டுவரப்படும் அனைத்து சட்ட முயற்சிகளுக்கும் எதிராக குரல் கொடுத்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.
“உங்கள் பாதையைத் தெரிவு செய்யுங்கள்” என்ற தலைப்பில், மே 31ம் தேதி ஸ்காட்லாந்திலும், ஜூன் 21ம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸிலும், அக்டோபர் 7ம் தேதி அயர்லாந்திலும், வாழ்வின் நாள் கொண்டாடப்படும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
Comments are closed.