நற்செய்தி வாசக மறையுரை (மே 26)

பாஸ்கா காலம் ஏழாம் வாரம் செவ்வாய்க்கிழமை
யோவான் 17: 1-11a
மாட்சிப்படுத்திய இயேசு; மாட்சிப்படுத்தும் கடவுள்
நிகழ்வு
பெரியவர் ஒருவர், ஒருநாள் மாலைவேளையில் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். வழியில் கோயில் திருப்பணி நடந்துகொண்டிருந்தது. அதற்கு முன்பு சிற்பி ஒருவர் ஆறடி உயரத்தில் சிற்பம் ஒன்றைச் செதுக்கிக்கொண்டிருந்தார்.
அவர் மிகுந்த ஈடுபாட்டோடு சிற்பத்தைச் செதுக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த பெரியவர் அவரிடத்தில் பேச்சுக் கொடுத்தார். இடையில், அந்தச் சிற்பி செதுக்கிக் கொண்டிருந்த சிற்பத்திற்கு அருகில், அதைப் போன்றே இன்னொரு சிற்பம் இருப்பதைக் கண்டு பெரியவர் அவரிடம், “நீங்கள் ஏன் ஒன்றுபோல் இரண்டு சிற்பங்களைச் செதுக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்…? இரண்டையும் வேறுவேறு இடத்தில் வைக்கப் போகிறீர்களா என்ன…?” என்று கேட்டார். அதற்குச் சிற்பி, “அப்படியெல்லாம் இல்லை, பக்கத்தில் உள்ள சிற்பத்தில், மூக்கில் ஒரு சிறிய விரிசல் விழுந்துவிட்டது. அதனால்தான் இந்தச் சிற்பத்தைச் செதுக்கிக்கொண்டிருக்கின்றேன்” என்றான்.
சிற்பி இவ்வாறு சொன்னதும் பெரியவர், பக்கத்தில் இருந்த சிற்பத்தினுடைய மூக்கில் ஏதாவது விரிசல் தெரிகின்றதா? என்று பார்த்தார். மிகச் சிறிய அளவில்தான் அதில் விரிசல் இருந்தது. அதுவும் உன்னிப்பாகக் கவனித்ததால் தெரிந்தது. உடனே பெரியவர் சிற்பியிடம், “இந்தச் சிற்பத்தில் தெரிகின்ற விரிசல் ஒன்றும் பெரிதாக இல்லை. பிறகு எதற்கு இதைப் போன்று இன்னொரு சிற்பத்தைச் செய்துகொண்டிருக்கின்றீர்கள்…? ஒருவேளை இந்தச் சிற்பத்தை மக்கள் தொட்டுவிடக்கூடிய உயரத்தில் வைக்கப் போகிறீர்களா என்ன?” என்றார்.
“அப்படியெல்லாம் இல்லை. இந்தச் சிற்பத்தை கோபுரத்தின் உச்சியில் வைக்கப்போகிறார்கள்” என்றார் சிற்பி. இதைக்கேட்டு மிகவும் வியப்படைந்த பெரியவர், “இந்தச் சிற்பத்தில் மிகச் சிறிதாகத்தான் விரிசில் இருக்கின்றது. மேலும், இதைக் கோபுரத்தின் உச்சியில் வைக்கப்போகிறார்கள் என்று வேறு சொல்கின்றீர்கள். கோபுரத்தின் உச்சி, கீழிலிருந்து எப்படியும் இருபது அடி உயரம் இருக்கும்! இங்கிருந்து பார்த்தால், சிற்பத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது யாருக்கும் தெரியாது. பிறகு எதற்கு இன்னொரு சிற்பத்தைச் செய்துகொண்டிருக்கின்றீர்கள்?” என்றார். அப்பொழுது சிற்பி மிகவும் பொறுமையாக, “அந்தச் சிற்பத்தில் உள்ள விரிசல், அதை பார்க்கக்கூடிய மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், கடவுளுக்கும் எனக்கும் தெரியும்” என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டுச் சிற்பி அந்தப் பெரியவரிடம் தொடர்ந்து பேசினார்: “இத்தனை ஆண்டுகளும் இந்தச் சிற்ப வேலையை என்னுடைய மனநிறைவுக்காகவும் கடவுளின் மாட்சிக்காகவும்தான் செய்கின்றேன். இதில் எனக்கு மனநிறைவு இல்லையென்றால், என்னால் கடவுளை மாட்சிப்படுத்த முடியவில்லையே என்ற உணர்வு ஏற்படும். அதனால்தான் புதிதாக ஒரு சிற்பத்தைச் செய்துகொண்டிருக்கின்றேன்.”
இந்த நிகழ்வில் வருகின்ற சிற்பி, தன்னுடைய மனநிறைவிற்காகவும் கடவுளை மாட்சிப்படுத்துவதற்காகவும் சிற்ப வேலையைச் செய்தது போல, ஆண்டவர் இயேசு, தான் செய்த ஒவ்வொன்றும் கடவுளின் மாட்சிக்காகவே செய்தார். இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு எப்படிக் கடவுளை மாட்சிப்படுத்தினர் என்பதையும் பதிலுக்குக் கடவுள் எப்படி இயேசுவை மாட்சிப்படுத்தினார் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தந்தையை மாட்சிப்படுத்திய இயேசு
இன்றைய நற்செய்தி வாசகம், பெரிய குருவாம் இயேசுவினுடைய இறைவேண்டலின் முதற்பகுதியாக இருக்கின்றது. இதில் இயேசு தந்தைக் கடவுளை நோக்கி, “தந்தையே, நேரம் வந்துவிட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்தியவாறு, நீர் மகனை மாட்சிப்படுத்தும்” என்கின்றார்.
இங்கு இயேசு குறிப்பிடுகின்ற ‘நேரம்’ என்பது அவர் பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்படுவதைக் குறிக்கின்றது. இதற்கு முன்னதாக ‘அவருடைய நேரம் இன்னும் வரவில்லை’ என்பது பற்றிப் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது (யோவா 2: 4, 7: 6,8,30). இன்றைய நற்செய்தியில் அவருடைய நேரம் வந்துவிட்டது என்று சொல்லப்படுவது, இயேசுவின் சிலுவைச்சாவிற்கான நேரம் என்பதைக் குறிப்பிடுவதாக இருக்கின்றது. இயேசு தன்னுடைய இறுதி மூச்சு வரை தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரை மாட்சிப்படுத்தினார்.
இயேசுவை மாட்சிப்படுத்திய கடவுள்
இயேசு தந்தையின் திருவுளத்தை இறுதிவரை நிறைவேற்றி அவரை மாட்சிப்படுத்தியதால், தந்தை இயேசுவை மாட்சிப்படுத்துகின்றார். கடவுள் இயேசுவை எப்படி மாட்சிப்படுத்தினார் என்பதைப் பவுல், “கடவுள் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்” (பிலி 2:9) என்கின்றார். இவ்வாறு தன்னை மாட்சிப்படுத்திய இயேசுவை தந்தைக் கடவுள் மாட்சிப்படுத்துகின்றார்.
நாமும் இவ்வுலகில் தந்தைக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, இயேசுவைப் போன்று கடவுளை மாட்சிப்படுத்தவே இருக்கின்றோம். எனவே, நாம் இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் இயேசுவைப் போன்று நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் தந்தையை மாட்சிப்படுத்துவோம்.
சிந்தனை
‘உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’ (மத் 5: 16) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசு எப்படித் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரை மாட்சிப்படுத்தினாரோ, அப்படி நாம் நமது நற்செயல்களால் தந்தையை மாட்சிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.