கோவிட்19ன் பின்விளைவுகள் நலிந்த சிறாருக்கு அச்சுறுத்தல்
நெருக்கடியில், அதிகம் பாதிக்கப்படும் சிறாரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்று, இந்திய சமுதாய ஆர்வலர் ஒருவர் உலகத் தலைவர்களை வலியுறுத்தியிருப்பதை வரவேற்றுள்ளது, இந்திய ஆயர் பேரவை.
நொபெல் அமைதி விருது பெற்ற கைலாஷ் சத்யார்த்தி (Kailash Satyarthi) அவர்கள், சிறாரின் பாதுகாப்பிற்காக, நொபெல் அமைதி விருதுபெற்றவர்கள் மற்றும், சிறார் நல ஆர்வலர்கள் 88 பேரைக் கொண்டு உருவாக்கியுள்ள ஓர் அமைப்பு, உலகத் தலைவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அமைப்பினர், நலிவுற்ற சிறாரைப் பாதுகாப்பதற்கென, நூறாயிரம் கோடி டாலர் உதவிக்கும் உலகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த அமைப்பினர், இந்நடவடிக்கைய, தக்க காலத்தில் மேற்கொண்டுள்ளனர் என்றும், இது மிகவும் பாராட்டுக்குரியது என்றும், இந்திய ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழு செயலர் Chetan Machado அவர்கள், யூக்கா செய்தியிடம் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எப்போதும் வலியுறுத்தி வருவதுபோல், கத்தோலிக்கத் திருஅவையும், எப்போதும் சிறார் மற்றும், இளைஞர்களுக்கு சிறப்பு இடத்தைக் கொடுத்து வருகிறது என்று கூறிய அருள்பணி மச்சாடோ அவர்கள், தற்போதைய சமுதாய விலகல் விதிமுறை நீக்கப்பட்டபின், சிறார், மனித வர்த்தகத்திற்குப் பலியாகக்கூடும், மற்றும், அவர்கள் பள்ளிக்குச் செல்வது நிறுத்தப்பட்டு, வேலையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படக்கூடும் என்று எச்சரித்தார்.
கோவிட்-19 நெருக்கடி காலத்திலும், அதற்குப் பின்னும், வயதுவந்தவர்கள் பலர் வேலைகளை இழப்பர், சில அமைப்புகள் வீழ்ச்சியுறக்கூடும், வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகும், இதனால் பல சிறார், குடும்பங்களுக்கு உதவும் நிலைக்கு உட்படுவர் என்றும், அருள்பணி மச்சாடோ அவர்கள் எச்சரித்தார்.
சிறார் தொழில் அமைப்பு, அடிமைமுறை மற்றும், மனித வர்த்தகத்திற்கு எதிராய்ப் போராடிவரும் சத்யார்த்தி அவர்கள், சிறார் எதிர்கொள்ளும் சவால்களைக் குறிப்பிட்டு, தனது அமைப்பின் சார்பில், மே 18, இத்திங்களன்று உலகத் தலைவர்களுக்கென அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த அறிக்கையில், நியூசிலாந்து, ஈக்குவதோர், பல்கேரியா ஆகிய நாடுகளின் முன்னாள் தலைவர்கள், தலாய் லாமா உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டுள்ளனர்.
உலக நலவாழ்வு அமைப்பின் கணிப்பின்படி, 2019ம் ஆண்டில் உலக அளவில், 2 வயதுக்கும் 17 வயதுக்கும் உட்பட்ட ஏறத்தாழ நூறு கோடிச் சிறார், உடலளவிலும், பாலியலிலும், வன்முறைச் சொற்களாலும் துன்பத்தை அனுபவித்துள்ளனர்.
Comments are closed.