தேவமாதாவின் வணக்கமாதம் மே 19

தேவமாதா தமது திருமைந்தனிடம் அடைந்த சந்தோஷத்தின் பேரில்!
தேவமாதா தமது மைந்தனைப் பார்த்த பொழுது அடைந்த சந்தோஷம்.
மிகுந்த நேசமுள்ள கன்னிமாமரி அளவில்லாத அன்புக்குரிய தமது மைந்தனாகிய சேசுவைப் பார்த்த பொழுது ஆத்துமமானது மிகுதியான சந்தோஷத்தால் நிரப்பப்பட்டது. எல்லா மனிதரிலும் செளந்தரியமுள்ளவராய் இருக்கிற சேசுநாதரிடத்தில் சகல இஷ்டப்பிரசாதங்களும், ஞானத்திரவியங்களும், தேவ இலட்சணங்களும், அடங்கியிருக்கிறதென்றும், அவர் உலகத்தை இரட்சிக்கிறதற்கு அனுப்பப்பட்டவரென்றும், எண்ணிக்கையில்லாத ஆத்துமங்களை மோட்சத்துக்குக் கூட்டிக்கொண்டு போவாரென்றும், அவர் மெய்யான சர்வேசுரனாகையால் மனுக்குலத்தார் எல்லோரும் அவரை ஆராதிப்பார்களென்றும் கன்னிமாமரி அறிந்து, மகிமையை அவர் அடைந்ததினால் சொல்லிலடங்காத மகிழ்ச்சி வணக்கத்துடன் சேசுநாதருக்கு ஊழியம் செய்து வந்தார்கள். இவ்வாறு நாமும் திவ்விய நன்மை வாங்கும் பொழுது தேவமாதாவின் திருமைந்தனாகிய சேசுசுநாதர் நமது அத்துமத்தில் வருகிறாரென்பது நிச்சயமாகையால், மிகுந்த பக்தி வணக்கத்தோடும் சிநேகத்தோடும் அவரை உட்கொள்ளக்கடவோம்.
தம் திருமகனோடு பேசினபொழுது அடைந்த சந்தோஷம்.
கன்னிமாமரி தமது திருக்குமாரனோடு சல்லாபித்த பொழுது மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். வேதத்துக்கடுத்த சத்தியங்கள் திருச்சபையில் ஸ்தாபிக்கப்படும் ஒழுங்குகள், அதில் நடக்கப்போகும் அதிசயமான வர்த்தமானங்கள், வேதசாட்சிகள் தங்கள் பிராணனைக் கொடுக்கப்போகும் அதிசயத் துணிவு, உலக முடிவு பரியந்தம் எண்ணிக்கையில்லாத மகாத்துமாக்கள் செய்யும் புண்ணியங்கள் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் சேசுநாதர் தமது அன்னைக்கு வெளிப்படுத்தினார். கன்னிமாமரியோ அவருடைய வார்த்தைகளை மிகுந்த வணக்கத்தோடு கேட்டு, அவர் திருவுளம் பற்றினவைகளை எல்லாம் இடைவிடாது தியானித்து மிகவும் மகிழ்ந்தார்கள்.
வேதத்திலுண்டான சத்தியங்களைக் கிறிஸ்தவர்கள் அடிக்கடி தியானித்தால் ஞான சந்தோஷத்தை அடைவார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. ஆனால் அழிந்துபோகிற உலக காரியங்களின் மேல் கவலை வைத்து அழிவில்லாத வேத காரியங்களின் மட்டில் அசட்டையாக இருந்தால் பிரயோசனமென்ன? அழிந்து போகிற சரீரத்துக்காக வெகு பிரயாசைப்பட்டு முடிவில்லாத நித்திய வாழ்விற்கு வழியாயிருக்கிற வேதத்தை அறியாதிருந்தால் பலனேது? ஆகையால் வேத ஒழுங்கின்படி நடக்கும்படிக்கும், வேதகாரியங்களைப் பக்தியோடு தியானித்து அறியவும், அவைகளை உறுதியாய் விசுவசிக்கவும், வேண்டிய உதவிகளைத் தேவதாயாரிடம் கேட்கக்கடவீர்களாக.
சேசுநாதர் தம்முடைய வேதம் போதிக்கிறதைக் கேட்ட பொழுது தேவமாதா அடைந்த சந்தோஷம்.
சேசுநாதர் வேதத்தைப் போதிக்கும் பொழுது கன்னிமாமரி சந்தோஷமடைந்து தமது குமாரன் எண்ணிலடங்காத அற்புதங்களைச் செய்கிறதையும், அவரைப் பின் செல்லத் திரளான சனங்கள் வருகிறதையும் ஆரோக்கியத்தை அடைவதற்காக அவரை பிணியாளர் தேடுகிறதையும், எங்கும் உள்ள மனிதர் அவருக்கு புகழ்ச்சி, நமஸ்காரம், ஆராதனை செய்கிறதையும், தேவமாதா கண்டு மிகுந்த சந்தோஷமடைந்தார்கள் அன்றியும் சேசுநாதருடைய சீஷர்களும், அவருடைய திருவாக்கியங்களை அதிசயத்தோடு கேட்டவர்களும், அவரால் பிணி தீர்க்கப்பட்டவர்களும், ஏன் உயிர் பெற்றவர்களும் தேவமாதாவிடத்தில் வந்து வணங்கி அப்பேர்ப்பட்ட குமாரனைப் பெற்றதினால் தோத்திரம் சொல்லி, பேறுபெற்றவர்களென்றும், ஆசீர்வதிக்கப் பட்டவர்களென்றும், புகழ்ந்து வருகையில் அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்கும்! நாமும் கன்னிமரியாயிக்கு மகிழ்ச்சி வருவிக்க வேண்டுமென்ற ஆசையோடு நமக்காகப் பெற்ற குமாரனைக் குறித்து அன்னைக்குத் தகுதியான மங்கள வார்த்தையைச் ( ஜெபமாலை) சொல்லக்கடவோம்.
செபம்.
என் திவ்விய தாயாரே! என் பேரில் மிகுந்த அன்புவைத்து எனக்கு எண்ணிக்கையில்லாத உபகாரங்களைச் செய்து, இஷ்டப்பிரசாதத்தால் வருகிற மன அக்களிப்பை என் ஆத்துமத்தில் விளைவிக்கும்படிக்கு எவ்வளவு பிரயாசைப்பட்டீர்கள்! நான் உங்களுக்கு சந்தோஷம் வருவிக்கத் தக்கதாக இன்றுவரையில் எதிலும் பிரயாசைப்பட்டவனல்ல. ஆகையால் உமது திருமைந்தனாகிய சேசுநாதர் வெளிப்படுத்தின வேத சத்தியங்களை இனியேனும் அறிந்து விசுவசிக்கவும், அதன்படி நடக்கவும் ஆசையாயிருக்கிறேன். சேசுநாதரிடத்தில் நீர் அடைந்த சந்தோஷத்தைப் பார்த்து என் ஆசை நிறைவேறும்படி என்பேரில் தயவாயிருந்து எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.

Comments are closed.