தேவமாதாவின் வணக்கமாதம் மே 17

தேவமாதா சுத்திகரத்தின் பேரில்!
கீழ்ப்படிதல்!
பிள்ளையைப் பெற்ற சில பெண்களும் சுத்திகரம் பண்ணவேண்டுமென்ற வேதகற்பனையை தேவமாதா அனுசரிக்கிற வேளையில் கீழ்ப்படிதல் என்ற புண்ணியத்தின் சுகிர்த மாதிரிகளை அனைவருக்கும் காட்டினார்கள். சர்வேசுரனுடைய திருமாதாவும் சகல கன்னியர்களிலும் பரிசுத்த கன்னிகையுமாகி, மற்ற பெண்களைப்போல், தமது குமாரனைப் பெறாமல் பரிசுத்தாவியின் கிருபையால் அற்புதமாக பெற்றது சத்தியமானதால், அவர்கள் சுத்திகரம் செய்ய கடமையும் தேவையும் இல்லாதிருந்தது. ஆகிலும் வேதத்தில் கற்பித்திருந்த சடங்குகளெல்லாவற்றையும் ஒன்றும் தவறாமல் நிறைவேற்றி, சர்வேசுரன் கட்டளையிட்ட படியே தமது கடமைக்குமேல் அதிகமாய்ச் செய்தார்கள். நீங்களோவெனில், உங்கள் கடமையைச் செய்யாமல் சர்வேசுரன் கற்பித்ததை புறக்கணித்து, கீழ்ப்படிய வேண்டிய சமயத்தில் கட்டாயத்தோடும் கீழ்ப்படிகிறதினால், ஞானப் பிரயோசனம் அடையாதிருக்கிறீர்கள். ஆனால் தேவமாதா கீழ்ப்படிந்த விதத்தை மனதில் எண்ணி அன்னையைப் பின்பற்றி பிரியமான புண்ணியத்தை அனுசரிக்கக்கடவீர்கள்.
தாழ்ச்சி!
தேவமாதா காட்டின தாழ்ச்சியாவது: கன்னிமாமரியாள் தாம் பரிசுத்த கன்னிகையும் தேவமாதாவும் என்று காண்பியாமல், சகல வணக்கத்துக்கும் பாத்திரமாயிருந்தாலும் மற்றப் பெண்களைப்போல் சுத்திகரம் செய்ய தம்மைத் தாழ்த்திக்கொண்டார்கள். மேலும் தமது வறுமையைக் காண்பிக்கச் சம்மதித்து தாம் அரச வம்சத்தில் பிறந்தவர்களுமாய், பரலோக பூலோக இராக்கினியுமாயிருந்தாலும், எளிய மக்கள் வழக்கமாய் கோவிலுக்குக் கொடுக்கிற காணிக்கையைத் தாமும் கொடுத்து, உலக மகிமையைத் தேடாமல், தமக்குக் கீர்த்தி வருவிக்கக்கூடிய அனைத்தையும் விலக்கினார்கள்.
மனிதரோவெனில் பாவிகளாயிருந்தாலும் உலக கீர்த்தியைப் பெற ஆவலுடன் நாடி தாங்கள் குற்றமில்லாதவர்களும் புண்ணியவான்களுமென்று பிறரால் எண்ணப்படுவதற்குப் பிரயாசைப்பட்டு தாழ்ச்சியுள்ள கிரிகை எல்லாவற்றையும் அருவருத்து மகிமை பெருமைகளை அடைந்து தங்களைப் பெரியவர்களாக எண்ணி, மற்றவர்களை மேற்கொள்ள ஆசைப்படுகிறார்கள், அத்தகைய ஆங்காரமுள்ள மனிதர் தாழ்ச்சியுள்ள தேவமாதாவுக்கு உகந்த பிள்ளைகளாய் இருப்பதெங்ஙனம்?
பிறர் சிநேகம் ஆகிய இம்மூன்று புண்ணியங்களும் தேவமாதாவிடத்தில் விளங்கின.
தேவமாதா காண்பித்த பிறர் சிநேகமாவது: பரிசுத்த கன்னிமாமரியாள் சுத்திகரம் செய்த பின்னர், தமது திரு மைந்தனான இயேசுநாதரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்கள். அப்படிக் காணிக்கையாகக் கொடுத்ததினால் மனிதர் பேரில் தமக்கு உண்டான அளவுகடந்த அன்பை காண்பித்தார்கள். இயேசுநாதர் சிலுவையில் மரணித்து தமது இரத்தமெல்லாம் சிந்தினால்தான் மனிதர்கள் மீட்கப்படுவார்கள் என்ற தேவ ஆலோசனையைக் தேவமாதா அறிந்து, அந்த ஏற்பாட்டுக்கு முழுவதும் சம்மதித்து, மனிதர்மேல் இரக்கப்பட்டு அவர்களை மீட்க வேண்டுமென்ற மிகுந்த ஆசையோடு தேவ சித்தத்துக்கும் தேவ நீதிக்கும் தமது மைந்தனை பலியாக ஈந்தார்கள். அத்தகைய பலியைக் கொடுக்கும் வேளையில் தேவமாதா மனிதர் மட்டில் காண்பித்த சிநேகம் எவ்வளவென்று ஒருவராலும் சொல்ல முடியாது. இத்தகைய நேசத்தை நமக்குக் காட்டின தாயை சிநேகியாமல் இருக்கலாமோ? இத்தகைய நேசம் கொண்ட மாதாவின் மட்டில் சிநேகமில்லாதவன், நன்றி கெட்டவனும் துஷ்டனும் ஆவான்.
செபம்.
மிகவும் இரக்கமுள்ள கன்னிமரியாயே, உம்மை மகா அன்புக்குப் பாத்திரமான தேவமாதா என்னும் பெயரால் கிறிஸ்தவர்கள் கூப்பிடுகிறதை நான் கேட்கும் பொழுதெல்லாம் மகிழ்ச்சியுறுகிறேன். எங்கும், எல்லா மனிதராலும் நேசிக்கப்படத்தக்க தேவமாதாவே! இராஜாதி இராஜாவாகிய சர்வேசுரன் உமக்குண்டான சவுந்தரியத்தையும் நற்குணங்களையும் அளவில்லாத விதமாய் நேசிக்கும் பொழுது எண்ணப்படாத உபகாரங்களை எனக்குச் செய்த தாயை நான் சிநேகியாதிருப்பேனோ? அப்படியல்ல, மற்றவர்களைவிட அதிகமாய் உம்மை சிநேகிக்க, என்னால் கூடாததால், கஸ்திப்பட்டு நான் உமக்கு கொடுக்கிற என் இருதயத்தையும் உமது சித்தத்தின்படியே நடந்து, அதில் தாழ்ச்சி, கீழ்ப்படிதல் பிறர் சிநேகம் என்ற இம்மூன்று புண்ணியங்களையும் விளைவிக்க வேண்டுமென்று மன்றாடுகிறேன்.

Comments are closed.