தேவமாதாவின் வணக்கமாதம் மே 16

கர்த்தர் பிறப்பு!
கர்த்தர் பிறப்புக்கு அடுத்த விசேஷங்கள்.
பெத்லகேம் ஊரில் இருக்கும் அந்த எளிய கொட்டிலில் பிரவேசித்து அதில் நடக்கிற சம்பவங்களை பக்தியுடன் உற்று நோக்குவோம். அவ்விடத்தில் பரமநாயகி பிரவேசித்து சர்வேசுரன் மீது மட்டற்ற அன்பினாலும், தம்முடைய குமாரனை பார்க்க வேண்டுமென்ற தீராத ஆசையாலும் நிறைந்தவர்களாய் ஓர் அற்பக் கஸ்தி வருத்தப்படாமலும், தம்முடைய கன்னி மகிமை கெடாமலும், பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராஜாவான உலக மீட்பரை பெற்றார்கள். நாம் அந்தத் திருப்பாலன் முன்பாகத் தெண்டனிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து அவரை நம்மை படைத்தவராகவும், இரட்சகராகவும், பரம கர்த்தராகவும், மெய்யான தேவனாகவும் வணங்கி ஆராதிக்கக்கடவோம். ஆனால் அவருக்கு நம்முடைய விசுவாசம், பக்தி, சிநேகம், நன்றியறிந்த மனதின் உணர்ச்சிகளைச் செலுத்தின பின்பு அவருடைய திருத்தாயாரை நோக்கி அன்னைக்குக் கிடைத்த பாக்கியத்தைக் குறித்து கொண்டாடி மீட்பரின் தாயாராக வாழ்த்தி அன்னையிடம் நமது நம்பிக்கையை வைக்கக் கடவோம்.
கர்த்தர் பிறப்பின் சரித்திரம்.
அப்பொழுது அந்தப் பரம நாயகியின் உள்ளத்தைப் பூரிப்பித்த மகிழ்ச்சியும், பக்தியும், தேவவணக்கமும், எவராலும் சொல்லுந்தரமன்று, தம்முடைய திருமடியில் அத்திருப்பாலனை முதல் முறையாக வைத்து அவரைத் தம்முடைய கர்த்தராகப் பணிந்து வணங்கி தம்முடைய குமாரனாக மிகுந்த பட்சத்துடன் அணைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இரட்சகருடைய தரித்திரத்தைப் பாருங்கள். விண்ணுலகையும் அதை அலங்கரிக்கும் எண்ணிறந்த விண்மீன்களையும் உண்டாக்கியவர் தமக்கு ஓர் அற்ப வீடு முதலாய் இல்லாதிருக்கிறார். அரசர்களும் அரச பரம்பரையினரும் உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது, அரசர்க்கெல்லாம் அரசராகிய சேசுபாலன் வைக்கோலின் மீது படுத்திருக்கிறார். பொன், வைர, முத்துக்களை விளைவிக்கிறவர் கிழிசலான வஸ்திரங்களால் மூடப்பட்டிருக்கிறார். எந்நேரமும் விண்ணுலகில் எண்ணிக்கையில்லாத சம்மனசுக்கள் அவர் ஏவலுக்கு காத்துக்கொண்டிருந்த போதிலும் அவர் மிருகங்கள் நடுவில் பிறக்க திருவுளம் கொண்டார். நீங்கள் தங்களின் மீட்பர் அப்படியே எளிமையாய்ப் பிறந்ததைக் கண்டு உலக வாழ்வைப் புறக்கணித்துத் தள்ளாமல் இருக்கக்கூடுமோ? இப்பொழுது, இந்தத் திருப்பாலகன் உங்களை நோக்கி, மனத்தரித்திரர் பாக்கியவான்கள் என்று அறிவிப்பதைக் கவனியுங்கள்
அப்பொழுது தேவமாதா, அர்ச்.சூசையப்பர் இவர்களிடம் உண்டான உணர்வுகள்.
தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் இயேசுக்கிறிஸ்துநாதர் பிறந்த மாட்டுக் கொட்டிலினருகில் தியானம் செய்கிறதைப் பார்க்கக்கடவோம். பூலோக செல்வ பாக்கியங்களை எல்லாம் சிறிதும் நினையாமல் அவதரித்த உலக மீட்பருடைய சுகிர்த குணங்களை அவர்கள் ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மோட்ச பாக்கியத்துக்கு நிகரான பாக்கியத்தை அடைந்து, சர்வேசுரன் வழங்கிய மேன்மையான வரங்களைக் கண்டு அவருக்கு மிகுந்த பக்தியோடு ஸ்தோத்திரம் சொல்லி தங்களை அவருக்கு நேச வாஞ்சையுடன், ஒப்புக் கொடுக்கின்றனர். மீளவும் அந்த எளிமைக் கோலத்தில் இறங்க திருவுளம் கொண்ட தேவ பாலனைக் கண்டு, அவர் காண்பித்த நன்மாதிரிகளை தங்களிடத்தில் பதியச் செய்து அதன்படி நடக்கின்றனர். ஓ! மரியாயே, அர்ச். சூசையப்பரே, நீங்கள் அச்சமயத்தில் கொண்டுள்ள உணர்ச்சிகளை நானும் எப்படியாகிலும் உணரும்படிக்குக் கிருபை செய்தருள வேண்டுமென்று உங்களை மன்றாடுகிறேன்.
செபம்.
என் ஆத்துமமே, சம்மனசுகளுக்கும் மனுமக்களுக்கும் மேலாக விளங்கும் தேவ திருப்பாலனைப் பார். இதோ உலகத்துக்கு இராக்கினி, எல்லா மக்களிலும் அதிக அழகு சோபனமுள்ள பாலனாக ஆராதனைக்குரிய சேசுநாதரைத் தமது திருமடியில் வைத்து மிகுந்த பட்சத்துடன் அணைத்துக் கொள்கிறார்கள். எல்லாவித ஆனந்தமும் நிறைந்த தாயாரே! நான் உம்முடைய திருவடியில் என்னுடைய மீட்பரை காணுகின்ற பொழுது பயம் நீங்கி அவரையும் உம்மையும் மகா உருக்கத்துடன் சிநேகிக்கிறேன். பரிசுத்தர் எனக்காகச் சிறு பிள்ளையாய்ப் பிறந்து மாட்டுக் கொட்டிலில் இருக்கும் பொழுது என்னைத் தண்டிப்பாரென்று நான் பயப்படக்கூடுமோ? அவர் என் பாவங்களை நிவிர்த்திப்பதற்கு எத்தகைய துன்ப வாதனைகள் அனுபவிக்கும்பொழுது என்னைப் புறக்கணித்துத் தள்ளுவாரோ? நான் அவரை முழுமனதோடு அணைத்துக் கொண்டு நேசிப்பேனாகில் மீட்புப் பெறுவேன் என்பது குன்றாத சத்தியம். ஆனால் அவருடைய இஷ்டப்பிரசாதத்தை நான் இழந்து போகாதபடிக்கு உலகம், பசாசு சரீரம் என்ற மூன்று சத்துருக்களையும் நான் ஜெயிக்கும் பொருட்டு உதவி செய்தருளும் தாயே.
அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.

Comments are closed.