நற்செய்தி வாசக மறையுரை (மே 16)

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் சனிக்கிழமை
யோவான் 15: 18-21
வெறுக்கும் உலகை அன்பு செய்வோம்
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். இவரிடத்தில் பலரும் பல்வேறு இடங்களிலிருந்து ஆலோசனை கேட்க வந்து போனார்கள்.
இந்தத் துறவியிடத்தில் ஒருநாள் பெண்மணி ஒருவர் வந்தார். அவர் துறவியிடம், தன்னுடைய கணவர் தவறான வழியில் சென்றுகொண்டிருப்பதையும், அவரைத் திருத்துவதற்குத் தான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானதையும், அவர் திருந்தி நல்வழிக்கு வர நல்லாலோசனை ஒன்று தனக்குத் தருமாறும் கெஞ்சிக் கேட்டார். சிறிதுநேரம் அமைதியாக இருந்து சிந்தித்துவிட்டு, ஓர் ஆலோசனையை அந்தப் பெண்மணிக்குக் கொடுத்தார் துறவி. அந்த ஆலோசனையைப் பெற்றுக்கொண்ட பெண்மணி மிகவும் உற்சாகமாக தன்னுடைய வீட்டிற்குச் சென்றார்.
இது நடந்து ஓரிரு வாரங்கள் கழித்து, துறவியைச் சந்திக்க ஒருவன் வந்தான். அவன் வேறு யாருமல்ல; தன்னிடம் ஆலோசனை பெற்றுச் சென்ற பெண்மணியின் கணவன்தான். அவன் துறவியை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு, “என்னைத் திருத்துவதற்கு என் மனைவியிடம் ஆலோசனை சொல்வதற்கு நீ யார்…? நான் உன்னை முற்றிலுமாக வெறுகின்றேன்” என்று கத்தினான்.
அவன் இவ்வாறு கத்தியதும், துறவி அவனிடம், “நீ என்னை முற்றிலும் வெறுக்கிறாயா…? பரவாயில்லை; ஆனால், நான் உன்னை முழுவதும் அன்பு செய்கின்றேன்” என்றார். இதைக்கேட்டு அந்த மனிதன் உள்ளம் குத்துண்டு போனான். ‘நானோ இவரை வெறுக்கின்றேன் என்று சொல்கின்றேன்; இவரோ என்னை முழுவதும் அன்பு செய்கின்றேன் என்று சொல்கின்றாரே! என்னை முழுவதும் அன்புசெய்யும் ஒருவர் ஒன்றைச் சொல்கின்றார் எனில், அதை எனது நல்லதுக்குத்தான் சொல்வார்’ என்று நினைத்தவனாய், துறவியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பின்னர் அவன் தன்னுடைய வழியைத் திருத்திக்கொண்டு நல்வழியில் நடக்கத் தொடங்கினான்.
ஆம், இந்த உலகம் நம்மீது வெறுப்பை உமிழத்தான் செய்யும். பதிலுக்கு நாம் வெறுப்பை உமிழாமல், அன்பைப் பொழிந்தால் எல்லாம் அன்பு மயமாகிவிடும். நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம் இந்த உலகம் வெறுப்பதையும், அவ்வாறு வெறுக்கின்றபொழுது, நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பற்றிப் பேசுகின்றார். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் வழியில் நடப்போரை வெறுக்கும் உலகம்
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “உலகு உங்களை வெறுகின்றது என்றால், அது உங்களை வெறுக்குமுன்பே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்” என்கின்றார்.
இயேசு இந்த உலகத்தில் பிறந்த ஓரிரு நாள்களிலேயே அவர்மீதான வெறுப்புத் தொடங்கிவிட்டது. இயேசு பிறந்ததை மூன்று ஞானிகள் வழியாகக் கேள்விப்பட்டுப் பின்னர் அவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்றதாக நினைத்து, பெத்லகேமையும் அதைச் சுற்றிலும் இருந்த ஊர்களில் இருந்த இரண்டு வயதும் அதற்கு உட்பட்ட குழந்தைகளை ஏரோது கொல்லத் தொடங்கியபொழுதே, அவர்மீதான வெறுப்பு தொடங்கியது (மத் 2: 13-16). அந்த வெறுப்பு அவர் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டதுவரை தொடர்ந்தது. இதைத்தான் இயேசு தன்னுடைய சீடர்களிடம், இந்த உலகம் உங்களை வெறுக்கும் முன்பே, என்னை வெறுத்தது என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்கின்றார்.
இயேசுவையும் அவருடைய சீடர்களையும் இந்த உலகம் வெறுக்கக் காரணம், அவர்கள் இந்த உலகைச் சார்ந்தவர்களாக வாழவில்லை. ஒருவேளை அவர்கள் இந்த உலகைச் சார்ந்தவர்களாக வாழ்ந்திருந்தால் இந்த உலகம் அவர்களை அன்பு செய்திருக்கும் (1 பேது 4: 3-4). இப்படி வெறுக்கும் உலகத்தில் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை இயேசு தொடர்ந்து கூறுகின்றார். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
வெறுக்கும் உலகிலிருந்து நம்மைத் தேர்ந்துகொண்ட இயேசு
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம் தொடர்ந்து பேசுகின்றபொழுது, “நான் உங்களை இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன்” என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் நாம் இவ்வுலகைச் சார்ந்தவர்களாக அல்லாமால், மறு உலகைச் சார்ந்தவர்களாக வாழவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. மறுவுலகைச் சார்ந்த வாழ்க்கை என்றால், வெறுப்புப் பதிலாக அன்பையும், பகைமைக்குப் பதிலாக பாசத்தையும் விதைக்கக்கூடிய வாழ்க்கை. இவ்வாறு நாம் இந்த உலகம் காட்டும் வாழ்க்கையிலிருந்து விலகி, மறுவுலகம் காட்டும் வாழ்க்கை வாழ்கின்றபொழுது எங்கும் அன்பும் அமைதியும் மட்டுமே இருக்கும்.
ஆகையால், நாம் இவ்வுலகம் காட்டும் வாழ்க்கை வாழாமல், இயேசு காட்டும் வாழ்க்கை வாழ்ந்து, எங்கும் அன்பை ஆளவிடுவோம்.
சிந்தனை
‘பெரிய சாதனைகளைச் செய்ய விரும்புவோர் அதிகத் துன்பங்களை அனுபவிக்க வேண்டும்’ என்பார் புளூடார்க் (46-119) என்ற சிந்தனையாளர். ஆம், இயேசுவின் வழியில் நடந்து, பல சாதனைகளையும் நன்மைகளையும் செய்ய இருக்கும் நமக்குத் துன்பங்களும் வேதனைகளும் அடுத்தவருடைய வெறுப்பும் வரத்தான் செய்யும். இவற்றையெல்லாம் நாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டு இயேசுவுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.