தேவமாதாவின் வணக்கமாதம் 15- ஆம் தேதி
தேவமாதா உலக மீட்பர் வருகைக்கு காத்திருக்கிறார்கள்
1 வது : தேவமாதா மிகுந்த ஆவலுடன் மீட்பர் பிறக்க வேண்டுமென்று என்று காத்திருக்கிறார்கள்
2 வது : அதற்கு தம்மை ஆயத்தப் படுத்துகிறார்கள்
3 வது : தமது திரு உதரத்தில் இருக்கிற சேசு கிறிஸ்து நாதர் தமக்கு கொடுத்த நன்மைகளால் பூரிக்கப்படுகிறார்கள்
1-வது : தேவமாதா மிகுந்த ஆவலுடன் மீட்பர் பிறக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்
உலக மீட்பர் எப்பொழுது வருவாரோ என 4000 ஆண்டுகளாக பிதாப் பிதாக்களும்,
தீர்க்கத்தரிசிகளும் புண்ணியவான்கள் எல்லோரும் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருந்தது போல அவர்களைப் போலவே இராக்கினியாகிய தேவமாதாவும் அதிக ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். தமது திருமைந்தன் ஜோதியுள்ள சூரியனைப்போல பாவ இருள் நீக்கிச் சுகிர்த புண்ணியங்களை விளைவிக்க வரவேண்டுமென ஆசித்திருந்தார்கள். நீங்களும், தினந்தோறும் சர்வேசுரனைப் பார்த்து, உமது இராச்சியம் வருகவென்று சொல்லுகிறீர்களே! ஆனால் இந்த மன்றாட்டைத் தக்க பக்தியோடும் மிகுந்த ஆசையோடும் கேட்கிறீர்களா? உங்களிடத்திலும் மற்ற மனிதர்களிடத்திலும் இந்தப் பரம இராச்சியம் வரவேண்டுமென அதிக ஆசையோடு விரும்பகடவீர்கள்
2 வது : தேவமாதா மீட்பரின் வருகைக்கு தம்மை ஆயத்தப் படுத்துகிறார்கள்
தேவமாதா எவ்வித புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர்களாய் இருந்தபோதிலும் தமது திரு மைந்தன் சீக்கிரத்தில் பிறப்பார் என்று அறிந்து அதிக சுறுசுறுப்புடன் அந்தப் புண்ணியங்களெல்லாம் தம்மிடத்தில் பெருகச் செய்தார்கள். அதனால் தம்மிடத்தில் தேவ மகிமை துலங்கவும், தேவ வல்லமை காணப்படும் மனோவாக்குக் கெட்டாத முயற்சியை அடையவும் பேறுபெற்றவர்களாய் இருந்தார்கள். நாமும் சாங்கோபாங்கத்தை அடைய வேண்டும் என்று ஆசையுள்ளவர்களாய் இருப்போமாகில், புண்ணிய நெறியில் சலிப்பில்லாமலும் அசட்டை இல்லாமலும் நாளுக்கு நாள் அதிக சுறுசுறுப்போடு தீவிரித்து நடக்கக்கடவோம். நாம் நம்மை தேவ ஊழியத்துக்கு முழுமையும் அர்ப்பணிப்போமானால் சர்வேசுரன் நமக்கு அளவு கடந்த நன்மை உபகாரங்களை கொடுப்பார் என்பது குன்றாத சத்தியம்.
3-வது : தேவமாதா தமது திருவுதரத்தில் இருக்கிற சேசுநாதர் தமக்குக் கொடுத்த பேருபலன்களால் பூரிப்படைகிறார்கள்
தேவமாதா ஒன்பது மாதம் தம்முடைய திருமைந்தனை தமது உதரத்தில் தரித்து அற்ப வருத்தம் இல்லாமலும் கஸ்தி இல்லாமலும் அவர் பிறப்பிற்காகக் காத்திருந்ததுடன் மிகுந்த பாக்கியமுள்ள சந்தோஷத்தையும் அடைந்திருந்தார்கள். நெருப்பைத் தன்னருகில் வைத்திருப்பவன் உஷ்ணமடைகிறது போலவும், பரிமள தைலத்தை தன் கையில் கொண்டிருப்பவன் அதன் மணத்தை நுகருவது போலவும், பொக்கிஷங்களைப் பெற்றிருக்கிறவன் திரவியங்களை அடைந்திருப்பதுபோலவும், தேவமாதா தேவ சிநேகமானவருமாய்த் தேவ பரிமளமுமாய். தெய்வீகத்தின் திரவியங்கள் எல்லாம் உடையவருமாய் இருக்கிற தமது திரு மைந்தனை ஒன்பது மாதமளவும் தமது திருஉதரத்தில் தரித்திருக்கும் பொழுது எவ்வளவு ஞான நன்மைகளை அடைந்தார்களென்று சொல்லவும் வேண்டுமோ? திவ்விய நற்கருணை ஸ்தாபித்திருக்கிற கோவில்களில் வாசம் செய்கிற சேசுக்கிறிஸ்துநாதர் நம்மிடத்தில் திவ்விய நற்கருணை வழியாக அடிக்கடி வரும்போது ஞான நன்மைகளை நாம் அடையாமல் போவோமா? தேவமாதாவின் பக்தி நமக்கிருந்தால் நாம் இந்த ஞான நன்மைகளை அடைவோம் என்பது நிச்சயம்.
செபம்
மீட்பரின் மகிமைநிறை அன்னையே! எங்களுக்கு அன்னையாகவும், அடைக்கலமாகவும், ஆதரவாகவும் இருக்க சித்தமானீரே. நீர் மீட்பருடைய அன்னையாக இருப்பதால் அவர் உமது மன்றாட்டைப் புறக்கணிக்கமாட்டார். நீர் எங்களின் அன்னையாய் இருப்பதால் எங்களிடம் மிகுந்த தயையும் பட்சமும் வைத்திருக்கிறீர். அதிசயத்துக்குரிய மாதாவே! ஏக சர்வேசுரனை அதிக பக்தியோடு சேவிக்கும் பொருட்டு தங்களை முழுதும் அர்ப்பணிக்கிறவர்கள் எவர்களோ அவர்கள் அத்தியந்த பாக்கியவான்களாம். தான் செய்த பாவங்களை வெறுத்து இஷ்டப்பிரசாதத்தை அடையும்படிக்கு உம்முடைய அடைக்கலத்தில் ஓடிவருகிற பாவி எவனோ, அவனும் பாக்கியவானாம் பரிசுத்த கன்னிகையே உம்முடைய தயாளத்தினால் ஏவப்பட்டு உமது அண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து நான் செய்த குற்றங்களுக்கு மனஸ்தாபப்பட்டு பிரலாபத்தோடு அழுகிறேன். என் நிர்ப்பாக்கியமான ஆத்துமத்தின் பேரில் இரக்கமாயிரும். என் பாவங்களுடைய கட்டுகளை அவிழ்த்தருளும். என்னுடைய துர்க்குணங்களையும் ஆசாபாசங்களையும் அடக்கியருளும். நான் உம்மோடு கூட சர்வேசுரன் அண்டையில் எப்பொழுதும் வாழ்ந்திருக்க எனக்கு வேண்டிய உபகாரங்களைச் செய்தருளும் தாயே.
அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
Comments are closed.