முதல் வாசக மறையுரை (மே 13)
பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் புதன்கிழமை
திருத்தூதர் பணிகள் 15: 1-6
விருத்தசேதனம் செய்துகொள்ளவிட்டால் மீட்படைய முடியாதா?
நிகழ்வு
தென்னாப்பிரிக்காவில் இருந்த கிறிஸ்தவக் கோயில் அது. ஒருநாள் அந்தக் கோயிலுக்குப் கறுப்பினத்தைச் சார்ந்த ஒருவர் சென்றார். இவரைப் பாத்ததும் அங்கிருந்த காவலாளி, “இந்தக் கோயிலுக்குக் கறுப்பினத்தைச் சார்ந்தவரெல்லாம் வரக்கூடாது” என்று அதட்டினார்.
“ஐயா! நான் ஒரு தூய்மைப் பணியாளர் (துப்புரவுப் பணியாளர்); இந்தக் கோயிலைத் தூய்மைப் படுத்துவதற்காக வந்திருக்கின்றேன்” என்றார் கறுப்பினத்தைச் சார்ந்த மனிதர். “அப்படியா?” என்று ஒருவினாடி அமைதியாக இருந்த அந்த வெள்ளை இனத்தைச் சார்ந்த காவலாளி, “சரி, கோயிலைத் தூய்மைப்படுத்துவிட்டு அப்படியே போய்விடுங்கள். கோயிலுக்குள் அமர்ந்துகொண்டு இறைவனிடம் வேண்டுகின்ற எண்ணம் இருந்தால், அதை அடியோடு விட்டுவிடுங்கள். காரணம், இது வெள்ளை இனத்தைச் சார்ந்தவர்களுக்கான கோயில்” என்றார் அந்தக் காவலாளி.
இந்த நிகழ்வில் வருகின்ற வெள்ளைச் சார்ந்த காவலாளி எப்படி கறுப்பினத்தைச் சார்ந்தவரிடம், இந்தக் கோயிலில் கறுப்பினத்தைச் சார்ந்தவர் இறைவனிடம் வேண்டக் கூடாது என்று சொன்னாரோ, அப்படி இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற யூதேயாவைச் சார்ந்த யூதர்கள், “…விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால், மீட்படைய முடியாது” என்கிறார்கள். யூதர்கள் இவ்வாறு சொன்னது எத்தகைய அதிர்வலையை ஏற்படுத்தியது… இதற்கு எப்படித் தீர்வு காணப்பட்டது… என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்திப்போம்.
விருத்தசேதனம் உணர்த்துவது என்ன?
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், யூதேயாவிலிருந்து வந்த யூதக் கிறிஸ்தவர்கள், பிற இனத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்களிடம், “நீங்கள் மோசேயின் முறைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால், மீட்படைய முடியாது?” என்கின்றார்கள். இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், விருத்தசேதனத்தைக் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
ஆண்டவராகிய கடவுள் முதுபெரும் தந்தை ஆபிரகாமைச் சந்திக்கின்றபொழுது, அவரோடு உடன்படிக்கை செய்துகொள்வார் (தொநூ 17) இந்த உடன்படிக்கையின் சாரம், ஆபிரகாமும் அவருக்குப் பின்வரும் வழிமரபினரும் ஆண்டவருக்குப் பணிந்து நடந்து, மாசாற்றவராய் இருக்கவேண்டும். அப்படி இருந்தால், கடவுள் ஆபிரகாமின் ஆபிரகாமின் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வார். அடுத்ததாக, இந்த உடன்படிக்கையின் அடையாளமாக ஒவ்வோர் ஆணும் தன்னுடைய உடலில் விருத்தசேதனம் செய்துசெய்துகொள்ளவேண்டும் (தொநூ 17: 11-12) என்று ஆண்டவர் ஆபிரகாமிடம் கூறினார். இதைத் தொடர்ந்துதான் ஒவ்வொரு யூதரும் விருத்தசேதனம் செய்துகொள்ளும் வழக்கம் வந்தது.
யூதர்களைக் கடவுள் தங்களைச் சிறப்பாகச் தேர்ந்துகொண்டதாலும் கடவுள் தங்களுக்குச் சொன்னதுபோன்று தாங்கள் விருத்தசேதனம் செய்துவருவதாலும், தாங்கள் மட்டுமே மீட்புப் மீட்புபெற முடியும் என்று நினைத்து வந்தார்கள். இதை இயேசுவிடம் வருகின்ற ஒருவர் கேட்கின்ற, “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” (லூக் 13: 23) என்ற கேள்வியிலிருந்து இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில், யூதேயாவிலிருந்து வருகின்ற யூதர்கள் அல்லது யூதக் கிறிஸ்தவர், கிறிஸ்துவைப் புதிதாக ஏற்றுக்கொண்டவர்களை “விருத்த சேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது” என்று சொன்னதற்கு மேலும் ஒரு முக்கியமான காரணம் இருக்கின்றது. கிறிஸ்துவின்மீது நம்பிக்கைகொண்ட யூதர்கள்தான் கிறிஸ்துவை முதலில் ஏற்றுக்கொண்டார்கள். அதன்பின்னர்தான் பிற இனத்தைச் சார்ந்தவர்கள் கிறிஸ்துவின் நம்பிக்கைகொண்டு அவரை ஏற்றுக்கொண்டார்கள். இப்படியிருக்கையில் விருத்தசேதனம் செய்துகொள்ளாத இன்னும் பல பிறஇனத்தைச் சார்ந்தவர்கள் கிறிஸ்துவின் நம்பிக்கைகொண்டு, அவரை ஏற்றுக்கொண்டால், அவர்களுடைய எண்ணிக்கை தங்களுடைய எண்ணிக்கையைவிட மிகுதியாகிவிடும்; பின் அவர்களுடைய கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் எல்லாம் உள்ளே புகுந்துவிடும் என்ற அச்சத்தினாலேயே, யூதர்கள், பிற இனத்தாரிடம், விருத்தசெய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது என்கின்றார்கள்.
யூதர்கள் மட்டுமா? எல்லாரும் மீட்படைய முடியுமா?
யூதேயாவிலிருந்து வந்த யூதர்கள் இப்படியொரு கருத்தை முன்வைக்கும்பொழுது, பவுலும் பர்னபாவும் அதை எதிர்த்து விவாதம் செய்கின்றார்கள். மேலும் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வுகாண்பதற்கு அவர்கள் இருவரும் எருசலேமில் இருந்த திருத்தூதர்களிடம் வருகின்றார்கள். அங்கு இந்தப் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காணப்படுகின்றது (நாளைய முதல் வாசகம் இதைப் பற்றி இன்னும் விரிவாகப் பேசுகின்றது). எருசலேமில் இருந்த திருத்தூதர்கள், மூப்பர்கள் ஆகியோர் முன்னிலையில் விருத்தசேதனம் பற்றிய பிரச்சனை விவாதிக்கப்படுகின்றது. அங்கு, மீட்புப்பெறுவதற்கு விருத்தசேதனம் செய்யத் தேவை இல்லை. மாறாக, கடவுள்மீது நம்பிக்கைகொண்டு வாழ்வது தேவையானது என்ற முடிவு எடுக்கப்படுகின்றது.
தொடக்கத் திருஅவையில் ஏற்பட்ட இப்பிரச்சனைக்கு பவுலும் பர்னபாவும் தலையிட்டு ஒரு நல்ல தீர்வு கண்டது மிகவும் பாராட்டுக்குரியது. ஆகையால், நாம் கடவுள்தரும் மீட்பு ‘அவருக்கு கிடையாது’, ‘இவருக்குக் கிடையாது’ என்று சொல்லி மனிதர்களைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்காமல், நாம் மீட்புப் பெற இறைவனிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.
சிந்தனை
‘அவர்கள் தன்னடக்கத்தோடு நம்பிக்கை, துணிவு, தூய வாழ்வு ஆகியவற்றில் நிலைத்திருந்தால்… மீட்புப் பெறுவார்கள் (1 திமொ 2:15) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் தன்னடக்கம், நம்பிக்கை, துணிவு, தூய வாழ்வு ஆகியவற்றில் நிலைத்திருப்போம். அதன்வழியாக இறைவன் தருகின்ற மீட்பையும் அருளையும் நிறைவாகப் பெறுவோம்.
– மறைத்திரு.
Comments are closed.