பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு (மே 10)
I திருத்தூதர் பணிகள் 6: 1-7
II 1பேதுரு 2: 4-9
III யோவான் 14: 1-12
வாழ்வுக்கு இட்டுச்செல்லும் உண்மையான வழியாகிய இயேசு
நிகழ்வு
செல்வந்தர் ஒருவர் இருந்தார். ஒருநாள் இவர் பணி நிமித்தமாக நகரில் இருந்த ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லவேண்டி இருந்தது. அதனால் இவர் தன்னிடமிருந்த நான்கு சக்கர ஊர்தியை எடுத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்றார். இப்படி இவர் சென்றுகொண்டிருக்கும்பொழுது, ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. எந்தப் பாதையில் செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டதால், இவர் சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சாலைப் பணியாளரிடம், தாம் போகவிருந்த இடத்தைச் சொல்லி, “இந்த இடத்திற்கு எந்த வழியில் செல்வது?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சாலைப் பணியாளர், தன்னுடைய கையை நீட்டி, “இந்த வழியில் சென்றால், நீங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு எளிதாகச் சென்றுவிடலாம்” என்றார்.
தனக்கு வழி சொன்ன அந்தச் சாலைப் பணியாளருக்கு நன்றி சொல்லிவிட்டுச் செல்வந்தர் தன்னுடைய ஊர்தியை எடுக்கத் தொடங்கினார். அப்பொழுது சாலைப் பணியாளர் அவரை நிறுத்தி, “நீங்கள் இப்பொழுது செல்லவேண்டிய இடத்திற்கான வழியைத் தெரிந்துகொண்டீர்கள்; விண்ணகம் செல்வதற்கான வழி உங்களுக்குத் தெரியுமா…?” என்றார். செல்வந்தர் தெரியாது என்பதுபோல் தலையாட்டினார். உடனே அந்தச் சாலைப் பணியாளர், “திருவிவிலியத்தில் ‘நானே வழி’ என இயேசு சொல்லியிருக்கின்றார். நீங்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். விண்ணகத்திற்கு மிக எளிதாகச் சென்றுவிடலாம்” என்றார்.
சாலைப் பணியாளர் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த செல்வந்தர், அவருக்கு நன்றி செல்ல்லிவிட்டு, தான் போகவேண்டிய இடத்திற்குச் சென்றார். வழியெங்கும் அந்தச் சாலைப் பணியாளர் சொன்ன வார்த்தைகளே செல்வந்தரின் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தன; அவ்வார்த்தைகளை இவர் அசைபோட்டுக்கொண்டே நாள் முழுவதும் இருந்தார். வேலையை முடித்துவிட்டு செல்வந்தர் இரவில் வீட்டுக்குத் திரும்பும்பொழுது, எதிரே வந்த பேருந்து ஒன்று இவருடைய ஊர்தியில் மோத இவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன. விரைவிலேயே செய்தி இவருடைய வீட்டில் உள்ளவர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்கள்.
மருத்துவர் இவரைச் சோதித்துப் பார்த்துவிட்டு, இவருடைய மகனைத் தனியாக அழைத்து, “உங்களுடைய தந்தை பிழைப்பது மிகவும் கடினம். கடைசியாக அவர் உங்களிடம் பேசவேண்டும் என்று விரும்புகின்றார். போய்ப்பாருங்கள்” என்றார். உடனே செல்வந்தரின் மகன் தன்னுடைய தந்தையின் அருகில் சென்றார். செல்வந்தரோ, காலையில் தான் சந்தித்த சாலைப் பணியாளரையும் அவர் தனக்கு விண்ணகத்திற்கு செல்வதற்கு வழி சொன்னதையும், இறுதியாக அவருடைய வழிகாட்டலில், தான் இயேசுவில் நம்பிக்கை கொண்டதையும் சொல்லிவிட்டு, தன் ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தார்.
தன்னுடைய தந்தை தன்னையும் எல்லாரையும் விட்டுப் பிரிந்துசென்றதை நினைத்து செல்வந்தரின் மகன் வருந்தினாலும், தந்தை விண்ணகம் செல்வதற்கான வழியைக் கண்டுகொண்டுவிட்டார் என்ற மனநிறைவில் ஆறுதலடைந்தார். இது நடந்து ஓரிரு வாரங்கள் கழித்து, செல்வந்தரின் மகன், தன்னுடைய தந்தைக்கு விண்ணகம் செல்வதற்கான வழியைச் சொன்ன, அந்தச் சாலைப் பணியாளரைத் தேடிக் கண்டுபிடித்து, நன்றிப் பெருக்கின் அடையாளமாக அவருக்குப் பழங்களையும் கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டு திரும்பினார்.
இயேசுவே விண்ணகத்திற்கு அதாவது, தந்தையிடம் செல்வதற்கான வழி என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, இயேசுவே வழி, உண்மை, வாழ்வு என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவே வழி
இறுதி இரவு உணவில், இயேசு தன்னுடைய சீடர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, தோமா அவரிடம், “….நீர் போகுமிடத்திற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்று கேட்கின்றபொழுது, இயேசு, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்கிறார்.
வழக்கமாக ஒருவர் நம்மிடம் வழி கேட்கின்றார் என்றால், ‘இப்படிச் செல்க’ ‘அப்படிச் செல்க’ என்று வழி சொல்வோம். ஆனால், இயேசு, ‘நானே வழி’ என்று சொல்கின்றார். அப்படியானால் இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால், நாம் விண்ணகத்திற்கும் அல்லது தந்தையிட,ம் மிகவும் எளிதாகச் செல்லலாம் என்று என்பது உறுதி. இந்த இடத்தில் திருப்பாடல் 119: 105 இல் வருகின்ற இறைவார்த்தையை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு; என் பாதைக்கு ஒளியும் அதுவே” என்று இங்கு நாம் வாசிக்கின்றோம். கடவுளின் அல்லது இயேசுவின் வார்த்தை பாதைக்கு ஒளியாக இருப்பதால், அந்த வாரத்தின்படி நாம் நடக்கின்றபொழுது, வாழ்வின் வழியான இயேசுவின் மூலம் தந்தையிடம் செல்லமுடியும்.
இயேசுவே உண்மை
இன்றைக்கு ஒருசிலர் இருக்கின்றார்கள், இவர்கள் பொய்யைக் கூட உண்மை போல் பேசுவார்கள். வேறு சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் பிலாத்துவைப் போன்று, “உண்மையா? அது என்?” (யோவா 18: 38) என்று கேட்பார்கள். இப்படிப்பட்டவர்களெல்லாம் உண்மையிலிருந்து வெகுதொலைவில் இருக்கின்றார் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். இப்படிப் பொய்யும் புரட்டும் போலித்தனமும் மிகுந்த இவ்வுலகில், இயேசு ‘நானே உண்மை’ என்று சொல்வது நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. இயேசு, ‘(உண்மையைப் பேசுவேன்…) உண்மைக்குச் சான்றுபகர்வேன் என்று மட்டும் சொல்லவில்லை (யோவா 18: 37). மாறாக, ‘நானே உண்மை’ என்று சொல்கின்றார். அப்படியானால், இயேசு உண்மையின் மறுவுருவம் என்று சொல்லலாம். ஆதலால், உண்மையான இயேசுவின் வழி நடந்தால், நாம் தந்தையிடம் செல்லலாம் என்பது உறுதி.
இயேசுவே வாழ்வு
இயேசு வழியாக, உண்மையாக மட்டுமல்ல, வாழ்வாகவும் இருக்கின்றார். அவர் எப்படி வாழ்வாக இருக்கின்றார் என்று சிந்திப்போம். நற்செய்தியாளர் யோவான் இயேசுவைக் குறித்துக் குறிப்பிடும்பொழுது, “அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது” என்று குறிப்பிடுவார் (யோவா 1:4). இயேசு யூதர்களிடம் பேசும்பொழுது, “தந்தை வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்” (யோவா 5: 26) என்று கூறுவார். அதே போன்று இயேசு மார்த்தாவிடம் பேசுகின்றபொழுது, “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” (யோவா 11: 25). என்று கூறுவார். இவ்வாறு இயேசு தன்னுடைய சொல்லாலும் செயலாலும் வாழ்வாய், வாழ்வின் ஊற்றாய் இருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இயேசு வாழ்வாய் இருக்கின்றார் எனில், அந்த வாழ்வைப் பெற நாம் அவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. ஏனெனில் இயேசுவிடம் நம்பிக்கை கொள்பவரால் மட்டுமே நிலைவாழ்வைப் பெறமுடியும் (யோவா 3:15) தந்தையிடமும் செல்லமுடியும். எனவே, நாம் வழியாக, உண்மையாக, வாழ்வாக இருக்கும் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம் அதன்வழியாக நாம் விண்ணகத்தில் இருக்கின்ற தந்தையிடம் செல்வோம்.
சிந்தனை
‘இவ்வுலகில் உண்மையைக் கண்டுபிடிப்பது கடினமான செயல் அல்ல, உண்மையைக் கண்டுபிடித்த பின், அதை விட்டு விலகாமல் இருப்பதே கடினமான செயல்’ என்பார் எடின் கில்சன் என்ற அறிஞர். நாம் இயேசுவே வழி, உண்மை, வாழ்வு என்ற எனக் கண்டுகொண்டோம். எனவே, நாம் வாழ்வுக்கு இட்டுக்குச் உண்மையான வழியாம் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.