நற்செய்தி வாசக மறையுரை (மே 07)
பாஸ்கா காலம் நான்காம் வாரம் வியாழக்கிழமை
யோவான் 13: 16-20
“இவற்றை நீங்கள் அறிந்துகொண்டு நடப்பீர்கள் என்றால் பேறுபெற்றவர்கள்”
நிகழ்வு
பிரான்சிஸ் சவேரியார் ஜப்பானில் கடவுளின் வார்த்தையை அறிவித்துக் கொண்டிருந்த நேரம் அது. ஒருநாள் இவர் தனக்கு முன் திரண்டிருந்த மக்களுக்கு கடவுளின் வார்த்தையை அறிவித்துக்கொண்டிருக்கும்பொழுது, ஒருவர் இவரிடம் வந்து, “உங்களிடம் ஒருசில வார்த்தைகள் பேசவேண்டும்” என்றார். இவரும் அந்த மனிதர் தன்னிடத்தில் ஏதோ முக்கியமான செய்தியைச் சொல்லப் போகிறார் என்று நினைத்துக்கொண்டு கூட்டத்தை விட்டுவிலகி, அவரைப் பின்தொடர்ந்தார்.
சிறிதுதூரம் தள்ளிச் சென்றபிறகு அந்த மனிதர், பிரான்சிஸ் சவேரியாரின் முகத்தில் காறி உமிழ்ந்தார். இதைப் பார்த்துவிட்டுக் கூட்டம் அதிர்ந்துபோனது; ஆனால், சவேரியார் அந்த மனிதரிடம் எந்தவோர் எதிர்வினையும் ஆற்றாமல், தன்னிடம் இருந்த துண்டை எடுத்துத் துடைத்துக்கொண்டு, மீண்டுமாக மக்கள் கூட்டத்திற்கு முன்பாக வந்து, முன்புபோல் கடவுளின் வார்த்தையை மிகவும் உற்சாகத்தோடு அறிவிக்கத் தொடங்கினார்.
இதைப் பார்த்துவிட்டு, அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு முக்கியமான நபர், ‘தன்மீது ஒருவர் காறி உமிழ்ந்திருக்கின்றார்; அதற்காக அந்த மனிதரை எதுவும் செய்யாமல், இவர் இப்படிப் பொறுமையாக இருக்கின்றார் எனில், இவரிடம் தாழ்ச்சி மிகுதியாக இருக்கவேண்டும். அதனால்தான் இவரால் தன்னை இழிவுபடுத்தியவனையும் பொறுமையாக ஏற்றுக்கொள்ள முடிகின்றது’ என்று நினைத்துகொண்டு, அவர் நேராகச் சவரியாரிடம் வந்தார்.
அவர் சவேரியாரிடம், “உங்களை காறி உமிழ்ந்தவனைக் கூட, நீங்கள் பொறுமையாக ஏற்றுக்கொண்டீர்கள் என்றால், உங்களிடத்தில் மிகுந்த தாழ்ச்சி இருக்கவேண்டும் என்பது தெரிய வருகின்றது. இப்படிப்பட்ட தாழ்ச்சியை, நிச்சயம் நீங்கள் பின்பற்றும் கிறிஸ்துவ மதம்தான் உங்களுக்குக் கற்றுத் தந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அப்படிப்பட்ட மதத்தில் நானும் சேர்ந்து தாழ்ச்சியோடு வாழலாம் என்று ஆசைப்படுகின்றேன். அதனால் நீங்கள் எனக்கு இப்பொழுதே திருமுழுக்குக் கொடுத்து, என்னை உங்களுடைய மதத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்“ என்றார். சவேரியாரும் அவர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். அவரைப் பார்த்துவிட்டு, பலரும் அந்நாளில் திருமுழுக்குப் பெற்றார்கள்.
ஆம், புனித பிரான்சிஸ் சவேரியாரின் உள்ளத்தில் இருந்த தாழ்ச்சி, பலரையும் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தது. நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்கள் தாழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்று கற்பிக்கின்றார். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சீடர்களின் காலடிகளைக் கழுவி, முன்மாதிரி காட்டிய இயேசு
யோவான் எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம், இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவியபின், அவரிடம் பேசக்கூடிய வார்த்தைகளாக இருக்கின்றன. சீடர்கள் நடுவில் யார் பெரியவர் (லூக் 22:24) என்ற விவாதம் நடைபெற்றது. இதை அறிந்த இயேசு அவர்களுக்குப் பாடம் புகட்ட, அவர்களுடைய காலடிகளைக் கழுவிகின்றார். பின்னர் “பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல” என்று சொல்லிவிட்டு, “இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால், நீங்கள் பேறுபெற்றவர்கள்” என்கின்றார்.
ஆம், இயேசு தன்னுடைய சீடர்கள் தாழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்று தன்னுடைய வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்வாலும் போதித்தார். இத்தகைய போதனையை, அவருடைய சீடர்களாக நாம், நம்முடைய வாழ்வில் வாழ்ந்து காட்டினோம் என்றால், நாமும் பேறுபெற்றவர்கள் ஆவோம்.
இயேசுவை ஏற்றுக்கொள்பவர் தந்தையை ஏற்றுக்கொள்பவர் ஆவார்
இயேசு தன்னுடைய சீடர்களிடம் தொடர்ந்து பேசுகின்றபொழுது, “என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கின்றார்” என்கின்றார்.
இயேசுவை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் என்ன என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசுவை ஏற்றுக்கொள்ளுதல் என்றால், அவருடைய விழுமியங்களான தாழ்ச்சி, இரக்கம், மன்னிப்பு, அன்பு… ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழ்தல், அப்படி நாம் இயேசுவின் விழுமியங்களை ஏற்றுக்கொண்டு வாழ்வதன் வழியாக அவரை ஏற்றுக்கொள்கின்றோம். அவரை ஏற்றுக்கொள்வதன் வழியாக அவரை அனுப்பிய தந்தைக் கடவுளையே ஏற்றுக்கொள்பவர்களாக ஆகின்றோம்.
Comments are closed.