தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் உரிய மதிப்பு வேண்டும்
தொழிலாளரான புனித யோசேப்பு திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் நிறைவேற்றியத் திருப்பலியை, தொழிலாளர்களுக்காக ஒப்புக்கொடுத்தார்.
தொழிலாளரான புனித யோசேப்பு திருஉருவம்
திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் அமைந்துள்ள, தூய ஆவியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிற்றாலயத்தில், புனித யோசேப்பு திருநாளையொட்டி, தொழிலாளராக உருவமைக்கப்பட்டுள்ள புனித யோசேப்பு திருஉருவம் பீடத்திற்கருகே வைக்கப்பட்டிருந்தது.
தச்சு வேலை செய்பவருக்குரிய கருவிகளை கரங்களில் ஏந்தியிருக்கும் புனித யோசேப்பு திரு உருவத்தை, இத்தாலியத் தொழிலாளர்களின் கிறிஸ்தவக் கழகம், இத்திருநாளன்று, சிற்றாலயத்தில் நிறுவியிருக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருநாள் திருப்பலியின் துவக்கத்தில், தொழிலாளர்கள் உலகை நோக்கி தன் எண்ணங்களைத் திருப்பினார்.
தகுதியான ஊதியம், மதிப்பு, ஓய்வு
தொழிலாளரான புனித யோசேப்பின் திருநாளன்று, தொழிலாளர்கள் அனைவருக்காகவும் செபிக்கிறோம் என்றும், அவர்களில் யாரும் தங்கள் வேலைகளை இழந்துவிடாமல் இருக்கவும், அவர்களுக்கு தகுதியான ஊதியமும், தகுந்த மதிப்பும் ஓய்வும் வழங்கப்படவேண்டும் என்றும் செபிப்போம் என்று திருத்தந்தை இத்திருப்பலியின் துவக்கத்தில் கூறினார்.
கடவுள், தொழில் செய்பவராக…
தொடக்க நூலிலிருந்து வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில், கடவுள் படைப்பனைத்தையும் உருவாக்கினார் என்று கூறப்பட்டுள்ளதை, தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலியத்தில், கடவுள், தொழில் செய்பவராக சித்திரிக்கப்பட்டுள்ளார் என்பதை எடுத்துரைத்தார்.
மனிதர்கள், தொழில் செய்யும்போது, கடவுளின் படைக்கும் தொழிலில் பங்கேற்கின்றனர் என்று கூறிய திருத்தந்தை, “கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன” (தொ.நூ. 1:31) என்ற சொற்களைச் சுட்டிக்காட்டி, தொழில் என்பது, தன்னிலேயே அழகையும், நிறைவையும் தருவது என்று கூறினார்.
தொழில் செய்வது, மனிதருக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பு என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழில் வழியே, கடவுளின் படைப்புத் தொழிலில் மனிதர்கள் பங்கேற்கின்றனர் என்பதையும், அதனால், தொழில்கள் மதிப்பு பெறுகின்றன என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
தொழிலாளர்களின் மதிப்பு பறிபோகும் அவலம்
வேலையை இழந்த ஒருவர், காரித்தாஸ் அமைப்பினரிடம் வந்தபோது, அவர்கள் அவரது குடும்பத்திற்கு ரொட்டிகளை வழங்கினர் என்ற நிகழ்வைப்பற்றி கூறியத் திருத்தந்தை, அந்த ரொட்டிகளைப் பெறுவதற்கு முன், தான் இந்த ரொட்டிகளை இலவசமாக பெறுவதற்குப் பதில், தன் தொழில் வழியே பெற விழைவதாக அவர் சொன்னதை பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய மதிப்பு பறிக்கப்படுகின்றது என்பதற்கு, அமெரிக்கக் கண்டத்திற்கு அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்ட ஆப்ரிக்க மக்கள் எடுத்துக்காட்டுகள் என்ற வரலாற்றுப் பதிவைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றும், தொழிலாளர்களுக்கு உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை என்பதைக் கூற, அண்மையில் ஆசிய நாடு ஒன்றில், மிகக் குறைந்த கூலி பெற்றுவந்த தொழிலாளி ஒருவரை, முதலாளி அடித்த செய்தியை வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
இன்றைய உலகில் ஊதியங்கள் ஒருவேளை கூடுதலாகக் கிடைக்கலாம், ஆனால், தொழிலாளர்கள், 8,12,14 மணி நேரங்கள் உழைக்கவேண்டியுள்ளதையும், அவர்கள் ஆற்றும் தொழிலுக்கு மதிப்பு வழங்கப்படாமல் இருப்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
Comments are closed.