தொழிலாளர் புனித யோசேப்பு திருவுருவம்
வெள்ளி காலை ஏழு மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றியவேளை, பலிபீடத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளர் புனித யோசேப்பு திருவுருவம், 1956ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் ஆசீர்வதித்தது என்று திருப்பீடம் கூறியுள்ளது.
1955ம் ஆண்டில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், தொழிலாளர் உலக நாளன்று, தொழிலாளர் புனித யோசேப்பு திருவிழாவை உருவாக்கியதற்கு, அடுத்த ஆண்டிலிருந்து, தொழிலாளர் புனித யோசேப்பு திருவுருவத்தை அவர் ஆசீர்வதித்தார்.
கோவிட்-19 பரவலால் உருவாகியுள்ள நெருக்கடியால் மக்கள் கூட்டமாக இருப்பது குறைந்திருக்கும் சூழல், 64 ஆண்டுகளுக்கு முன்னும் நிலவியது என்றும், அச்சமயத்திலும், இதே தொழிலாளர் புனித யோசேப்பு திருவுருவம் வத்திக்கானில் வைக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
மிலானிலிருந்து உரோம் நகருக்கு
மிலான் பேராயர் ஜொவான்னி பத்திஸ்த்தா மொந்தினி அவர்கள், இந்த தொழிலாளர் புனித யோசேப்பு திருவுருவத்தை, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், ஆசீர்வதிக்குமாறு, 1956ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி, ஹெலிகாப்டரில் மிலானிலிருந்து உரோம் நகருக்கு எடுத்து வந்தார். அதே நாளில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இத்தாலிய கிறிஸ்தவ தொழிலாளர் அமைப்பினரைச் (ACLI ) சந்தித்தார்.
Enrico Nell Breuning என்ற சிற்பியால் செய்யப்பட்ட, 150 மீட்டர் உயரமுடைய வெண்கலத்தாலான இந்த புனித யோசேப்பு திருவுருவம், உரோம் நகரில், அந்த அமைப்பின் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு மே 23ம் தேதி, அந்த அமைப்பினர், இந்த புனித யோசேப்பு திருவுருவத்தை, புனித ஆறாம் பவுல் அரங்கில் திருத்தந்தையைச் சந்தித்தவேளை, பவனியாக எடுத்து வந்தனர்.
மே 01, இவ்வெள்ளியன்று சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலி நிறைவேற்றும்போது, அங்கு வைப்பதற்கென, ஏப்ரல் 30 இவ்வியாழன் மாலையில் இது வத்திக்கானுக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த காலம் முதல், இக்காலம் வரை, தொழிலாளர்கள் எண்ணற்ற நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும்வேளை அவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதற்காக, தொழிலாளர் புனித யோசேப்பு திருவுருவம் இவ்வெள்ளியன்று இந்த சிற்றாலயத்தில் வைக்கப்பட்டது. திருத்தந்தையும் இப்புனிதரிடம் உலகத் தொழிலாளர்களுக்காகச் செபித்தார்.
புனித யோசேப்பு பக்தி முயற்சி
புனித யோசேப்பு பக்தி முயற்சி முதலில் எகிப்தில் தொடங்கப்பட்டது. 14ம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஐரோப்பாவில் மரியின் ஊழியர் சபையினர், புனித யோசேப்பு இறைவனடி சேர்ந்ததாக நம்பப்படும், மார்ச் 19ம் நாளன்று, இவ்விழாவைச் சிறப்பித்து வந்தனர். அதிலிருந்து அப்பக்தி மேற்குலகில் பரவ ஆரம்பித்தது. இப்பக்தியை திருத்தந்தை 4ம் சிக்துஸ் அவர்கள், ஏறத்தாழ 1479ம் ஆண்டில் உரோம் நகரில் ஆரம்பித்தார். 16ம் நூற்றாண்டு புனிதர் அவிலா தெரஸ் அவர்களும் இப்பக்தியைப் பரப்பினார். 1870ம் ஆண்டில் திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், புனித யோசேப்பு அவர்களை, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவித்தார். 1955ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், கம்யூனிச மே தினக் கொண்டாட்டங்களுக்கு மாற்றாக, மே முதல் தேதி, தொழிலாளர் புனித யோசேப்பு விழாவை உருவாக்கினார்.
Comments are closed.