நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 29)

பாஸ்கா காலம் மூன்றாம் வாரம் புதன்கிழமை
யோவான் 6: 35-40
தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவரை அழிய விடாமல், உயிர்த்தெழச் செய்யும் இயேசு
நிகழ்வு
போலந்து நாட்டில் பாரம்பரியமாகச் சொல்லப்படுகின்ற கதை இது. ஒருகாலத்தில் நாயும் பூனையும் எலியும் நட்பாகவே இருந்தன. இப்படியிருக்கையில் ஒருநாள், நாயானது வெளியூர் செல்லவேண்டிய சூழ்நிலை வந்தது. இதனால் அது தன்னிடம் இருந்த முக்கியமான ஆவணங்களைத் தன்னுடைய நண்பன் பூனையிடம் கொடுத்து, “நான் வெளியூர் செல்லவேண்டி இருப்பதால், என்னிடமுள்ள முக்கியமான ஆவணங்களை உன்னிடம் கொடுத்துவிட்டுப் போகிறேன். நான் வரும் வரைக்கும் இவற்றைப் பத்திரமாக வைத்திரு. நான் திரும்பி வந்தபிறகு உன்னிடமிருந்து வாங்கிக்கொள்கின்றேன்” என்றது. பூனையும் சரியென்று ஒப்புக்கொண்டு, நாய் கொடுத்த ஆவணங்களைப் வாங்கிக்கொண்டது.
பூனையால் ஓரிடத்தில் நிலையாய் இருக்க முடியாதல்லவா! அதனால் அது நாய் கொடுத்த முக்கியமான ஆவணங்களை கொண்டு சென்று நண்பன் எலியிடம் கொடுத்து, “இவை மிகவும் முக்கியமான ஆவணங்கள்; இவற்றைப் பத்திரமாக வைத்திரு. நான் திரும்பி வந்து கேட்கின்றபொழுது, அவற்றை என்னிடம் கொடு” என்றது. எலியும் அந்த ஆவணங்களை வாங்கித் தான் இருந்த பொந்தினுள் வைத்துக்கொண்டது.
நாள்கள் சென்றன. எல்லாம் நல்லபடியாய்ப் போய்க்கொண்டிருந்தது. மழைக்காலம் வந்தது. அதனால் எலியால் முன்புபோல் வெளியே சென்று இரை தேட முடியவில்லை. அதனால் அது தன் நண்பன் பூனை தன்னிடம் ஒப்படைத்திருந்த முக்கியமான ஆவணங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொரித்துக் கொரித்துச் சாப்பிடத் தொடங்கி, ஒருகட்டத்தில் அவற்றை முற்றிலுமாகக் காலியாக்கிவிட்டது.
இது நடந்து சிலநாள்கள் கழித்து, வெளியூர் சென்றிருந்த நாய் திரும்பி வந்து, தன்னுடைய நண்பன் பூனையிடம் சென்று, தான் கொடுத்த முக்கியமான ஆவணங்களைத் திருப்பித் தரக்கேட்டது. பூனையோ, “நீ கொடுத்த முக்கியமான ஆவணங்களை நம் நண்பன் எலியிடம் கொடுத்துப் பத்திரமாக வைக்கச் சொல்லியிருக்கின்றேன். வா நாம் இருவரும் சேர்ந்து, வாங்கிவிட்டு வருவோம்” என்று சொல்லி, பூனை நாயைத் தன்னோடு அழைத்துக்கொண்டு, எலி இருந்த பொந்துக்குள் சென்றது. உள்ளே சென்றதும், பூனை எலியிடம், “நான் கொடுத்த முக்கியமான ஆவணங்களைத் திருப்பிக் கொடு” என்று கேட்டபொழுது, அது, “எல்லாவற்றையும் நான் உணவாகச் சாப்பிட்டேன்” என்று பாவம் போல் சொன்னது.
இதைக் கேட்ட நாய்க்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அதனால் அது, “நான் உன்னை நம்பிக் கொடுத்த முக்கியமான ஆவணங்களை நீ ஏன் எலியிடம் கொடுத்தாய்?” என்று பூனைமீது பாய்ந்தது. பூனையோ எலியிடம், “நான் உன்னிடம், ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லித்தானே ஒப்படைத்தேன்; நீ ஏன் இப்படிச் செய்தாய்?” என்று சொல்லி எலியின்மீது பாய்ந்தது. எலியோ தன்னைத் தற்காத்துக்கொண்டு வெளியே தப்பித்து ஓடியது. இப்படித்தான் நட்பாய் இருந்த நாயும் பூனையும் எலியும் எதிரிகளாக மாறின.
கதை வேடிக்கையாக இருந்தாலும், இந்த பூனையையும் எலியையும் போன்றுதான் பலர் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை, ஒப்படைக்கப்பட்ட மனிதர்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது கிடையாது; ஆனால், ஆண்டவர் இயேசு, இதற்கு முற்றிலும் மாறாக, தந்தைக் கடவுள் தன்னிடம் ஒப்படைத்தவர்களை அழியவிடாமல், உயிர்த்தெழச் செய்பவராக இருக்கின்றார். அதைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
தந்தை தன்னிடம் ஒப்படைத்த பணியைச் சிறப்பாய்ச் செய்யும்-செய்த இயேசு
நற்செய்தியில், இயேசு தன்னைத் தேடிவந்த மக்களிடம், “அவர் (தந்தை) என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல், இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்யவேண்டும்…” என்று கூறுகின்றார்.
இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகளில் மூன்று செய்திகள் இருக்கின்றன. ஒன்று, அனைவரும் உயிர்த்தெழ வேண்டும் அல்லது மீட்படையவேண்டும் என்பது இறைவனின் திருவுளம் (1திமொ 2:4). இரண்டு, எல்லாரும் உயிர்த்தெழவேண்டும் அல்லது மீட்படையவேண்டும் என்றாலும், யாரெல்லாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, அவர்களை அவர் உயிர்த்தெழச் செய்கின்றார். மூன்று, தந்தைக் கடவுள், தன் மகன் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்ற பொறுப்பினை அவரிடம் ஒப்படைத்தார். அப்பொறுப்பினை இயேசு மிகச் சிறப்பாகவே செய்தார் (யோவா 17:11); அதன்மூலம் தன்மீது அவர் தன்மீது நம்பிக்கை கொண்டோருக்கு வாழ்வளித்தார்.
அப்படியானால் இயேசு ஒரு பொறுப்புள்ள ஊழியராக இருந்து பணியாற்றியிருக்கின்றார் என்பது உண்மையாகின்றது. இப்படிப்பட்டவரிடம் நாம் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், நிலைவாழ்வைப் பெறுவோம். ஆகையால், நாம் இயேசுவைப் போன்று பொறுப்புள்ளவர்களாக வாழ்வோம். இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு நிலைவாழ்வைப் பெறுவோம்.
சிந்தனை
‘நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர், எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்’ (மத் 25: 21) என்பார் இயேசு சொல்லும் தாலந்து உவமையில் வரும் தலைவர். ஆகையால், நாம் இயேசுவைப் போன்று பொறுப்புள்ள ஊழியர்களாய் வாழ்வோம்; இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.