இல்லங்களில் செபமாலை செபிக்க திருத்தந்தை அழைப்பு

அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள மே மாதத்தில், இல்லங்களில் செபமாலை செபிப்பதன் அழகைக் கண்டுணருமாறு அனைத்து கத்தோலிக்கருக்கும் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மே மாதம் அண்மித்து வருவதை முன்னிட்டு, உலகின் அனைத்து விசுவாசிகளுக்குமென, ஏப்ரல் 25, இச்சனிக்கிழமையன்று மடல் ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரோனா தொற்றுக் கிருமி பரவல் விதிமுறைகளால், வீடுகளிலேயே தங்கியிருக்கும் நாம், கிடைக்கின்ற வாய்ப்பை அதிகம் பயன்படுத்தி, வருகின்ற மே மாதத்தில் இல்லங்களில் செபமாலை செபிப்பதன் அழகை மீண்டும் கண்டுணர்வோம் என்று கூறியுள்ளார்.

மே மாதத்தில் இறைமக்கள் அனைவரும், அன்னை மரியா மீது தங்களுக்குள்ள ஆழ்ந்த அன்பையும் பக்தியையும், சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாக செபமாலை செபித்து வருகின்றனர் என்று கூறியுள்ள திருத்தந்தை, இந்த கொள்ளை நோய் காலத்தில், சூழ்நிலைக்கேற்ப, தனியாக அல்லது சேர்ந்து செபமாலை செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

செபமாலை செபிப்பதற்கு வலைத்தளத்திலும்கூட நல்ல வழிமுறைகள் உள்ளன என்று கூறியுள்ள திருத்தந்தை, செபமாலையின் முடிவில் அன்னை மரியாவை நோக்கிச் செபிப்பதற்கு உதவியாக இரு செபங்களையும் விசுவாசிகளுக்கென வழங்கியுள்ளேன் என்றும், நானும் வருகிற மே மாதத்தில் உங்களோடு ஆன்மீக முறையில் இணைந்து இச்செபங்களை செபிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

நம் அன்னையாம் மரியாவின் இதயத்தோடு இணைந்து கிறிஸ்துவின் திருமுகத்தை தியானிக்கும்போது, அது, ஒரே ஆன்மீகக் குடும்பமாக, இன்னும் அதிகமாக நம்மை ஒன்றிணைக்கும் மற்றும், இப்போது நாம் எதிர்கொள்ளும் சோதனையை வெல்வதற்கு உதவும் என்றும், திருத்தந்தை தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

நானும் உங்களுக்காக, குறிப்பாக, மிகவும் துன்புறும் மக்களுக்காக சிறப்பாகச் செபிக்கின்றேன், எனக்காகவும் செபியுங்கள், உங்கள் எல்லாருக்கும் நன்றியும், ஆசீரும் என்று, இம்மடலை நிறைவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முதல் செபம்

மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும்.

கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம்.

பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம்.

அவதரித்த வார்த்தையின் தாயே, எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே ஆமென்

Comments are closed.