தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கைதுசெய்யும் வகையில், பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம்
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளைகளில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கைதுசெய்யும் வகையில், பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்கவால், இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தெரிவித்தார்.
இதற்கமைவாக, ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற மாவட்டங்களில், தனிமைப்படுத்தல் சட்டங்களுக்குக் கீழ், சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் கைதுசெய்யப்படுவதுடன் அவர்களுக்கு ஆறு மாத சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கத்தின் மட்டத்தில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது பொதுமக்களின் கைகளிலேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அரச, தனியார் ஊழியர்கள், பொதுபோக்குவரத்தில் ஈடுபடுவர்களுக்கு, கடும் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
அரச, தனியார் அலுவலகங்களில் பணிகளை முன்னெடுக்கும்போது, சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவது உறுதிபடுத்தப்பட வேண்டும் என்றும் அரச, தனியார் அலுவலகங்களின் உயர் அதிகாரிகளுக்கு, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களுடன் பணிகளை முன்னெடுப்பதை அலுவலகங்களின் உயர் அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக அலுவலகங்களுக்கு வருகைதரும் பொலிஸார், சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமைவாக பணியாற்றுமாறும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், அலுவலகங்களில் உடலின் வெப்பநிலையை அறிந்துக்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் இருப்பதை உறுதிபடுத்துமாறு வலியுறுத்தியுள்ள அவர் அடிக்கடி ஊழியர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்குமாறும் யாரேனும் ஒரு ஊழியருக்கு, உடலில் அதிக வெப்பநிலை காணப்பட்டால் அது குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அல்லது சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்குச் சட்;டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களிலுள்ள அரச, தனியார் அலுவலகங்களின் உயரதிகாரிகள், பகல் வேளைகளில், ஊழியர்களின் வெப்பநிலையை பரிசோதிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட மற்றும் தளர்த்தப்படாத மாவட்டங்களில், பொதுமக்களின் பயணங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக, சுமார் 500க்கும் மேற்பட்ட வீதி சோதனைச்சவாடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கமைவாக இலங்கை முழுவதிலுமுள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு அமைவாக, 944 வீதிச்சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் மாவட்டங்களுக்கு இடையில், 262 வீதி சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
பொதுமக்களின் பாதுகப்பைக் கருத்திற்கொண்டே, பொலிஸாரும் முப்படையினர் இணைந்து வீதிச் சோதனை பணிகளில் ஈடுபடுகின்றனர் என்றும் எனவே அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கோரினார்.
அத்துடன், பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுகின்ற இ.போ.ச ஊழியர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஏனைய போக்குவரத்துச் சேவையாளர்கள், வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தினார்.
பஸ்களில், ஏனைய பொது வாகனங்களில், 50 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளை ஏற்றுமாறும் அவர் அறிவுறுத்தினார். தரிவித்தார்.
அதிகமான பயணிகள் ஒரே தடவையில் பயணிக்க முற்பாட்டால் சுகாதார நடைமுறைகள் குறித்த அவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்குப் பயணிப்பதற்கு தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Comments are closed.