புனித சனிக்கிழமையன்று, இயேசுவின் புனிதத் துணி திறப்பு
இயேசுவின் அடக்கத்தின்போது, அவரது உடலைப் போர்த்தியிருந்த புனிதத் துணி, ஏப்ரல் 11, புனித சனிக்கிழமையன்று, தொலைக்காட்சி மற்றும் சமூகத் தளங்கள் வழியே மக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் தூரின் நகரில், புனித சனிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு, அதாவது, இந்திய, இலங்கை நேரம் இரவு 8.30 மணிக்கு, புனிதத்துணி வைக்கப்பட்டுள்ள பேராலயத்தில் நடைபெறும் ஒரு சிறப்பு வழிபாட்டின்போது, இந்தப் புனிதத்துணி திறக்கப்பட்டு, மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்படும்.
தூரின் பெருமறைமாவட்டத்தின் பேராயர் Cesare Nosiglia அவர்கள் தலைமையேற்று நடத்தும் ஒரு சிறப்பு காட்சி தியானம், மற்றும், செப வழிபாடு, மக்களின் பங்கேற்பின்றி, ஊடகங்களில், நேரடி ஒளிபரப்பின் வழியே, மக்களின் இல்லங்களை அடையும் என்றும், இந்த வழிபாட்டு நேரத்தில், புனிதத்துணி திறந்து வைக்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
தீமைகளை வெல்வதற்கு, இறைமகன், சிலுவையில் இறந்ததையும், அன்பினால் அனைத்தையும் வெல்லமுடியும் என்பதையும், நமக்கு தொடர்ந்து நினைவுறுத்தி வரும் புனிதத் துணி, தொற்றுக்கிருமியின் நெருக்கடி நேரத்தில், மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்க உதவும் என்ற நோக்கத்துடன், இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று பேராயர் Nosiglia அவர்கள் கூறினார்.
இந்த வழிபாட்டின் இறுதியில், புனிதத் துணியைக் குறித்து, பல்வேறு அறிஞர்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.