நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 08)
புனித வாரம் புதன்கிழமை
மத்தேயு 26: 14-25
யூதாசின் துரோகம்
நிகழ்வு
ஓரூரில் ஷீலா, கலா என்று இரண்டு நெருகிய தோழிகள் இருந்தனர். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்தார்கள்.
இருவருடைய வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று ஒரு நாள் ஷீலாவின் தாயாருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகவும் அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யாவிட்டால் பிழைப்பது மிகவும் கடினம் என்றும் செய்தி வந்தது. இச்செய்தியை அறிந்து ஷீலா மிகவும் உடைந்துபோனாள்.
இப்படிப்பட்ட சூழலில், ஷீலாவின் நெருங்கிய தோழியான கலாதான் அவளைத் தேற்றி, ஆறுதல்சொல்லி, “பணத்தை நான் ஏற்பாடு செய்து தருகின்றேன்; நீ கவலைப்படாமல், உன்னுடைய தாயாருக்கு அறுவைச் சிகிச்சை நடக்க ஏற்பாடு செய்” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு, கலா தனக்குத் தெரிந்த நண்பர்கள், நலம்விரும்பிகள்… யாவரிடமும் உண்மையைச் சொல்லி, ஒரு பெரிய தொகையை சேகரித்து, அதை ஷீலாவிடம் கொடுத்தார். இதனால் ஷீலாவின் தாயாருக்கு நடந்த அறுவைச் சிகிச்சை நல்லமுறையில் நடந்தது.
இது நடந்து சில நாள்கள் கழித்து, ஷீலா கலாவிடம் சரியாகப் பேசாமல் இருந்தார். “என்ன காரணம்?” என்று கலாவிற்குப் புரியாமல் இருந்தது. அப்பொழுது கலாவிற்குத் தெரிந்த ஒருவர் அவளிடம், “நீ ஷீலாவின் தாயாருடைய பெயரைச் சொல்லி, பலரிடமும் பணம் வாங்கி, அதை அவளிடம் தராமல் மோசடி செய்துவிட்டதாக அவள் எல்லாரிடமும் உன்னைப் பற்றி அவதூறு பரப்பிக்கொண்டு திரிகின்றாள்” என்றார். இதைக் கேட்டு கலா மிகவும் அதிர்ந்து போனாள்.
உடனே கலா ஷீலாவிடம் சென்று, “உன்னுடைய தாயாருக்கு ஓர் ஆபத்து என்று வந்தபொழுது, அதற்கு உதவிசெய்ய நான் பட்டபாடு எனக்குத் தெரியும். அதைக்கூட விட்டுவிடலாம். உன்னுடைய தாயாரின் பெயரைச் சொல்லி, நான் மோசடி செய்ததாக எல்லாரிடமும் என்னைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றாயே! இதெல்லாம் மிகப்பெரிய துரோகம்! எனக்குப் பணத்தை மோசடி செய்யவேண்டும் என்ற தேவையுமில்லை; யாருடைய பணத்திற்கும் ஆசைபடுகின்றவள் நான் இல்லை” என்று அவளுடைய முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
இந்த நிகழ்வில் வருகின்ற ஷீலா, தனக்கு நல்லது செய்த கலாவைப் பற்றி அவதூறைப் பரப்பி, அவருக்கு எதிராகத் துரோகம் செய்தது போன்று, நற்செய்தியில் இயேசுவோடு இருந்து, அவருக்குத் துரோகம் செய்த, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்தைக் குறித்து வாசிக்கின்றோம். யூதாசின் தீச்செயலை நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கு விலை பேசிய யூதாசு
இன்றைய நற்செய்தியில் யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் சென்று, இயேசுவைக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்கின்றார். இயேசுவோடு மூன்று ஆண்டுகள் கூடவே இருந்து, அவரோடு பணிசெய்த யூதாசுக்கு இயேசுவைக் காட்டிக் கொடுக்க என்ன நோக்கம் இருந்தது என்று திருவிவிலியம் நமக்குச் சொல்லவில்லை; ஆனால், அவர் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன் வந்ததை வைத்துப் பார்க்கும், அவர் பணத்தாசை பிடித்தவராக இருந்திருப்பார், அதற்காகத்தான் அவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்திருப்பார் என்று உறுதியாகச் சொல்லலாம்.
முப்பது வெள்ளிக்காசுகள் என்பது ஓர் அடிமையின் விலை (விப 21:32) இந்தப் பணத்திற்காக யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்து, மிகப்பெரிய குற்றம் புரிகின்றார்.
தனக்குத் தீமை செய்த யூதாசுக்கும் நன்மை செய்த இயேசு
யூதாசு தன்னைக் காட்டிக்கொடுக்கப்போகிறார் என்று தெரிந்த பின்பும், இயேசு அவரை அன்பு செய்கின்றார். அந்த அன்பின் அடையாளமாகத்தான் பாத்திரத்தில் தொட்டு உன்ன அனுமதிக்கின்றார். பாத்திரத்தில் தொட்டு உண்ணுதல் நட்பின் அடையாளம். ஆம், யூதாசு இயேசுவுக்குத் துரோகம் செய்தார்; இயேசுவோ பதிலுக்கு அவர் மீது அன்பைப் பொழிந்தார்.
நாம் யூதாசைப் போன்று பணத்திற்கு அடிமையாகி, உடன் இருப்பவர்களுக்குத் துரோகம் செய்யாமல், இயேசுவைப் போன்று தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்வோம். பகைவரையும் அன்பு செய்வோம். அதன்மூலம் இயேசுவின் உண்மையான சீடர்களாவோம்.
சிந்தனை
‘உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்’ (மத் 5: 44) என்பார் இயேசு. ஆகையால், இயேசு எப்படி தன் பகைவரையும் தன்னைத் துன்புறுத்தியவரையும் தனக்குத் துரோகம் செய்தவரையும் மன்னித்து, அன்பு செய்தாரோ, அதுபோன்று நாம் நமக்கு எதிராகச் செயல்படுவரை மன்னித்து, அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.