உயிர்த்த இயேசுவில், வாழ்வு, மரணத்தை வென்றது
கடவுளின் எல்லையற்ற அன்பாகிய, நற்செய்தியின் தூதுரையை தொகுத்து வெளிப்படுத்தும் புனித வாரத்தை, இவ்வாண்டு நாம் வழக்கத்திற்கு மாறான முறையில் கொண்டாடவுள்ளோம், நம் நகரங்களின் மௌனத்தில், உயிர்ப்பு நற்செய்தி முழங்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி மாலையில், ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியில், ஏப்ரல் 05, இஞ்ஞாயிறன்று புனித வாரத்தைத் தொடங்கும் உலக கத்தோலிக்கர் எல்லாரிடமும், ஏப்ரல் 3, இவ்வெள்ளி மாலையில், காணொளிச் செய்தி வழியாகப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்த இயேசுவில், வாழ்வு, மரணத்தை வென்றது என்று கூறினார்.
“வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்” (2 கொரி. 5:15) என்ற புனித பவுலடிகளாரின் சொற்களையும் குறிப்பிட்ட திருத்தந்தை, பாஸ்கா விசுவாசம், நம் நம்பிக்கையை ஊட்டம் பெறச் செய்துள்ளது, இதை இன்று மாலையில் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.
இது ஒரு சிறந்த நேரத்தின் நம்பிக்கை, அதில், தீமையிலிருந்தும், இந்த கொள்ளை நோயிலிருந்தும் நாம் விடுதலை பெறுவோம், இந்த நம்பிக்கை நம்மை ஏமாற்றாது, இது மாயை அல்ல, இது ஒரு நம்பிக்கை என்று மீண்டும் திருத்தந்தை கூறினார்.
உங்கள் இல்லங்களில் நுழைவதற்கு
அன்பு நண்பர்களே, உங்கள் எல்லாருக்கும் மாலை வணக்கம் என்று செய்தியைத் தொடங்கிய திருத்தந்தை, வழக்கமானதைவிட, வித்தியாசமான முறையில், இன்று மாலையில் உங்கள் இல்லங்களில் நுழைவதற்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது, நீங்கள் என்னை அனுமதித்தால், துன்பமும் வேதனையும் நிறைந்த இந்தக் காலத்தில் உங்களோடு சிறிது நேரம் உரையாட விரும்புகிறேன் என்று கூறினார்.
கோவிட்-19 தொற்றுக்கிருமியிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக நீங்கள் உங்கள் குடும்பங்களில் வித்தியாசமான ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள், வெளியேயும், பள்ளிக்கும் செல்லவும் இயலாமல், வாழும் சிறார் மற்றும், இளைஞர்களை நினைக்கின்றேன், அனைத்துக் குடும்பங்களையும், குறிப்பாக, இக்கிருமியால் உறவுகளை இழந்துள்ள மற்றும், நோயாளிகளாக இருக்கும் குடும்பங்களையும் என் இதயத்தில் இருத்தியுள்ளேன் என்று, திருத்தந்தை கூறினார்.
இந்நாள்களில் தனிமையாய் இருப்பவர்களை, இந்நாள்களை எதிர்கொள்ள மிகவும் கஷ்டப்படுகிறவர்களை, எல்லாவற்றுக்கும் மேலாக, எனது மிகவும் அன்புக்குரிய வயது முதிர்ந்தோரை நினைக்கின்றேன் என்று காணொளிச் செய்தியில் கூறிய திருத்தந்தை, மருத்துவமனைகளில் உள்ள கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகளை என்னால் மறக்க இயலாது என்று கூறினார்.
இத்தொற்றுக் கிருமி நோயாளிகளுக்குத் தொண்டாற்றுபவர்களின் மனத்தாராளம் பற்றி அறிந்தே இருக்கின்றேன், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் எத்தனையோ ஹீரோக்கள், நிதிப்பற்றாக்குறை, வேலை, மற்றும், வருங்காலம் பற்றி கவலையடைபவர்கள், இத்தொற்றுக் கிருமியின் அச்சத்தில் வாழும் சிறைக் கைதிகள், அவர்களின் உறவுகள், வீடற்றவர் போன்ற எல்லாரையும் நினைக்கின்றேன் என்றும் திருத்தந்தை கூறினார்.
துன்புறுவோரோடு திருத்தந்தை
எல்லாருக்குமே துன்பமாக இருக்கும் இந்நேரம் பற்றி திருத்தந்தை அறிந்துள்ளார், அவர், உங்கள் அனைவருடனும் தனது நெருக்கத்தையும், பாசத்தையும் தெரிவிக்க விரும்புகிறார், தேவையில் இருக்கும் அயலவருக்கு தாராள மனதைக் காட்டுங்கள், தனிமையில் இருப்போரிடம் தொலைபேசி அல்லது சமுதாய வலைத்தளம் வழியாகத் தொடர்பு கொள்ளுங்கள், இத்தாலியிலும், உலகிலும் இன்னலான நிலையிலுள்ள மக்களுக்காகச் செபியுங்கள், நாம் தனிமையில் இருந்தாலும், அன்பின் படைப்பாற்றல் திறனால், எண்ணமும், உணர்வும் வெகு தூரம் செல்ல முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.
அன்பிலும் பொறுமையிலும் இந்நாள்களில் சிறந்த காலத்திற்கு நம்மைத் தயார்படுத்தலாம், உங்கள் வீடுகளில் என்னை அனுமதித்ததற்கு நன்றி, துன்புறுவோர், சிறார், வயதானவர்கள் மீது கனிவு காட்டுங்கள், திருத்தந்தை அவர்களுக்கு நெருக்கமாக இருந்து செபிக்கிறார் என்று அவர்களிடம் சொல்லுங்கள், நம் ஆண்டவர் விரைவில் நம்மைத் தீமையிலிருந்து விடுவிப்பார், எனக்காகச் செபியுங்கள், விரைவில் சந்திப்போம் என்று காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.