இல்லங்களில் திருச்சிலுவையின் முன் நின்று தியானிப்போம்

இஞ்ஞாயிறு உரோம் நேரம் பகல் 11 மணிக்கு, ஏறத்தாழ காலியாக இருந்த, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், குருத்து ஞாயிறு பவனி மற்றும், திருப்பலியைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் மிகவும் முக்கியமான, கடவுளை அன்புகூர்தல் மற்றும், பிறருக்குத் தொண்டாற்றுதலை நினைவில் இருத்துமாறு, உலக கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டார்.

பெரிய அளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற, கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றும் விதமாக, வரலாற்றில் முதன் முறையாக, வெகுசில விசுவாசிகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய, பாடுகளின் ஞாயிறாகிய குருத்து ஞாயிறு திருப்பலியில், தொலைக்காட்சி, வலைத்தளம் மற்றும் வானொலி வழியாக, இலட்சக்கணக்கான விசுவாசிகள் பங்கு கொண்டனர்.

“கடவுள் வடிவில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்” (பிலி.2:7) என்று புனித பவுல், இயேசு பற்றி, பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் விளக்கியிருப்பதை மையப்படுத்தி, மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவார்த்தையான இயேசு, தம்மையே வெறுமையாக்கி, அடிமையாக தம்மை வழங்கினார் என்ற திருத்தூதர் பவுல் அவர்களின் இச்சொற்கள், இந்தப் புனித நாள்களுக்குள் நம்மை அழைத்துச் செல்ல அனுமதிப்போம் என்று மறையுரையைத் தொடர்ந்தார், திருத்தந்தை.

கடவுள் நமக்குப் பணியாற்றுகிறார்

நாம்தான் கடவுளுக்குத் தொண்டாற்றுகிறோம் என்று பல நேரங்களில் நினைக்கின்றோம், உண்மையில், கடவுள் நம்மை முதலில் அன்புகூர்ந்ததால், அவர்தான் நமக்குப் பணியாற்ற முன்வந்தார் என்று கூறிய திருத்தந்தை, ஆண்டவர், நமக்காகத் தம் வாழ்வை அளித்து நமக்குப் பணியாற்றினார் என்றும் கூறினார்.

ஆண்டவர் இதனை, தாழ்ச்சி, பொறுமை, ஊழியரின் கீழ்ப்படிதல், மற்றும், தூய்மையான அன்பால் ஆற்றினார் என்றும், தம்மை அன்புகூர்ந்தவர்களின் மறுதலிப்பு, கைவிடல் ஆகிய மிக வேதனை நிறைந்த சூழல்களை அனுபவிக்கும் அளவுக்கு, அவர் நமக்குத் தொண்டாற்றினார் என்றும், திருத்தந்தை கூறினார்.

மறுதலிப்பு

இயேசு தம்மை விற்ற சீடராலும், தம்மை மறுதலித்த சீடராலும் துன்புற்றார், தனக்கு ஓசன்னா பாடியவர்கள், பின்னர், “அவரை சிலுவையில் அறையும்” என்று கத்திய மக்களால் மறுதலிக்கப்பட்டார் என்று விளக்கிய திருத்தந்தை, நாம் எல்லாருமே வாழ்வில் மறுதலிப்பால் துன்புற்றுள்ளோம் என்று கூறினார்.

மறுதலிப்பு, வாழ்வில் ஏமாற்றத்தையும், ஏன், வாழ்வை அர்த்தமற்றதாகக்கூட ஆக்கும் நிலையையும் உருவாக்கும், ஏனெனில் நாம் அனைவரும் அன்புகூரவும், அன்புகூரப்படவும் பிறந்தவர்கள் என்று விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

குணப்படுத்தல்

நமக்கு நாமே உண்மையாயிருந்தால், போலித்தனங்கள், வெளிவேடங்கள், இருவேறு முகங்கள் போன்ற நம் பிரமாணிக்கமின்மைகளைப் பார்ப்போம், எத்தனை முறை நாம் வீழ்கின்றோம், வீழ்ச்சியிலிருந்து எழும்புவது எவ்வளவு கடினமாக உள்ளது, சில காயங்களிலிருந்து குணமாவது எவ்வளவு கடினமாக உள்ளது, இந்த நம் பலவீனங்களை ஆண்டவர் அறிந்துள்ளார் என்று கூறினார், திருத்தந்தை.

இந்த நிலையிலும், இயேசு, நம் பிரமாணிக்கமின்மையை தம்மேல் ஏற்று, அவர் நமக்கு உதவி செய்ய வருகிறார், அவர் நமக்குப் பணியாற்றுகிறார் மற்றும், நம்மைக் குணப்படுத்துகிறார் என்று விளக்கிய திருத்தந்தை, வீழ்வது குறித்த அச்சத்தால் சோர்ந்துவிடாமல், திருச்சிலுவையை நாம் இப்போது நோக்கலாம், அவர் நம்மை அரவணைப்பதாக உணரலாம் என்றும் கூறினார்.

கைவிடுதல்

இந்த குருத்தோலை ஞாயிறு நற்செய்தியில் நாம் வாசிக்கக் கேட்ட, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மத்.27:46) என்று, இயேசு சிலுவையில் உரத்த குரலில் கத்தியது பற்றிய சிந்தனைகளையும் மறையுரையில் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவும், உச்சகட்ட கைவிடப்பட்ட மற்றும், தனிமையை அனுபவித்தார் என்பதை, அவரின் இவ்வார்த்தைகள் நமக்குச் சொல்கின்றன என்று கூறினார்.

ஆறுதல்

எல்லாரும் இயேசுவை விட்டு ஓடிய நிலையில், அவருக்காக இறைத்தந்தை இருந்தார், இவையனைத்தும், நமது நன்மைக்காக, நமக்குத் தொண்டாற்றுவதற்காகவே நிகழ்ந்தன என்றும் மறையுரையில் கூறிய திருத்தந்தை, தற்போதைய கொரோனா தொற்றுக் கிருமி நெருக்கடி நிலை பற்றியும் கூறினார்.

இன்றைய கொள்ளை நோய் துயரத்தில், வாழ்வின் பல நம்பிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், துணிவுகொள், உனது இதயத்தை எனது அன்பிற்குத் திறந்து வை, உன்னைப் பேணிக் காப்பாற்றும் கடவுளின் ஆறுதலை உணர்வாய் என்று, இயேசு நம் ஒவ்வொருவரிடமும் கூறுகிறார் என்றார் திருத்தந்தை.

கோவிட்19-மற்றவர்க்குப் பணியாற்றுவோம்

நாம் இப்போது அனுபவித்துவரும் துன்பநிலை, முக்கியமான காரியங்களில் முக்கியம் செலுத்தவும், முக்கியமற்ற காரியங்களில் சிக்கிவிடாமல் இருக்கவும் அறிவுறுத்துகிறது, இந்த புனித நாள்களில் துன்புறுவோர் மற்றும், அதிகத் தேவையில் இருப்போர் மீது அக்கறை காட்டுவோம், நமக்கு என்ன குறைவுபடுகின்றது என்பதில் கருத்தாய் இருக்காமல், பிறருக்கு என்ன நன்மை புரியலாம் என்பதில் கவனம் செலுத்துவோம், சேவையின் பாதை, வெற்றி மற்றும் வாழ்வை வழங்கும் பாதையாகும், அதனாலே நாம் மீட்கப்பட்டோம் என்றும் திருத்தந்தை கூறினார்.

அன்புக்கு ஆகட்டும் – உலக இளைஞர் நாள்

இக்குருத்தோலை ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக இளைஞர் நாள் பற்றியும், மறையுரையின் இறுதியில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 35 ஆண்டுகளாக இந்நாளைச் சிறப்பித்து வருகிறோம், பிறருக்குத் தொண்டாற்ற தங்களையே வழங்கும் உண்மையான ஹீரோக்களாக வாழ இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இளைஞர்களே, உங்கள் வாழ்வை கடவுளுக்கும், மற்றவர்க்கும் அர்ப்பணிக்க அஞ்ச வேண்டாம், நம் வாழ்வை பிறருக்கு அளிக்கும்போது மட்டுமே, அதை ஒரு கொடையாகப் பெற முடியும், ஆனால், அப்படியிருந்தால் என்று சொல்லாமல், அன்புக்கு ஆகட்டும் என்று சொல்கையிலிருந்தே, நமக்கு உள்ளார்ந்த மகிழ்வு கிடைக்கும், இயேசுவும் இவ்வாறே செய்தார் என்று மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த புனித வாரத்தில், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், உரோம் மக்களுக்கு சுகமளிக்கும் (Salus Populi Romani) அன்னை மரியா திருப்படமும், புனித மர்ச்செல்லோ (San Marcello) ஆலயத்தில் வணங்கப்பட்டுவரும் புதுமை திருச்சிலுவையும் வைக்கப்பட்டுள்ளன.

Comments are closed.