இயேசு நம் அனைவர் பாவங்களையும் தன்மீது சுமந்தார்

கோவிட்-19 நெருக்கடியால், வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நாம், வீடுகளின்றி வாழ்வோரை எண்ணி, அவர்களுக்காக வேண்டிக்கொள்வோம். வீடற்றவர்களைக் குறித்த உண்மை நிலையை, சமுதாயமும், ஆண்களும், பெண்களும், உணர்ந்து, அவர்களுக்கு உதவி செய்வார்களாக. திருஅவை அவர்களை வரவேற்பதாக என்று, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தவக்காலத்தின் ஐந்தாம் செவ்வாய்க்கிழமையாகிய இன்றைய திருப்பலி வாசகங்களில்  (எண்.21:4-9; யோவா.8:21-30) குறிப்பிடப்பட்டுள்ள பாம்பின் அடையாளத்தை வைத்து மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தொடக்கத்தில் தோன்றிய பாம்பு

நிச்சயமாக, பாம்பு, ஒரு நட்பு விலங்கு அல்ல என்று மறையுரையைத் துவக்கிய திருத்தந்தை, பாம்பு எப்போதும் தீமையோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்றும், திருவெளிப்பாடு நூலில், சாத்தான், தொடக்கத்தில் தோன்றிய பாம்பு என்று அழைக்கப்பட்டுள்ளது என்றும், இது, தொடக்கத்திலிருந்தே கடிக்கின்றது, நஞ்சூட்டுகின்றது, அழிக்கின்றது மற்றும், கொலை செய்கின்றது என்றும் கூறினார்.

தீமையின் அடையாளம்

மோசே தலைமையில் எகிப்திலிருந்து தப்பித்து வந்த இஸ்ரயேல் மக்கள், எங்களுக்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த மன்னாவை உண்டு வெறுத்துப்போய் விட்டோம், இந்த பாலைநிலத்தில் மாளும்படியாகவா எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர், நாங்கள் அங்கே நன்றாக இருந்தோமே என்று முறையிட்டனர், அம்மக்கள் தங்கள் கற்பனையில் எகிப்திலேயே தொடர்ந்து வாழ்ந்துவந்தனர் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

அவ்வேளையில் கடவுளும் தம் மக்கள் மீது சினங்கொண்டு கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பினார், அவைக் கடித்து பலர் இறந்தனர் என்றுரைத்த திருத்தந்தை, அந்நேரத்தில், பாம்பு எப்போதும் தீமையின் அடையாளமாக நோக்கப்பட்டது, பாம்புகளைப் பார்த்த மக்கள், தங்கள் பாவங்களைப் பார்த்தனர், தாங்கள் செய்தது தவறு என உணர்ந்து மனம் வருந்தினர் என்று கூறினார்.

இறைவாக்கு

அக்கட்டத்தில் மோசேயும் ஆண்டவர் கட்டளைப்படி, வெண்கலத்தில் கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதைக் கம்பத்தில் பொருத்தியது பற்றி நினைக்கும்போது இது சிலைவழிபாடோ என்று வியக்கத் தோன்றுகின்றது, ஆனால், அது வருங்காலத்தில் நிகழப்போவதை அறிவித்த ஓர் இறைவாக்கு என்று மறையுரையில் கூறியத் திருத்தந்தை ,அந்தக் கம்பத்தில் பொருத்தப்பட்ட பாம்பு, இயேசுவையே நினைவுக்குக் கொணர்கிறது, அது இயேசுவுக்கே ஒப்புமைப்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வதற்கு, இயேசு பற்றி உரைக்கப்பட்ட இறைவாக்கை நாம் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், இயேசு நமக்காக, தன்னையே பாவமாக்கினார், புனித பேதுரு தனது மடலில் (1பேதுரு 2,24) கூறியுள்ளது போன்று, இயேசு, தம் உடலில், நம் பாவங்களை அவரே சுமந்தார் என்றும் திருத்தந்தை கூறினார்.

எனவே நாம் திருச்சிலுவையை நோக்கும்போது, நம் ஆண்டவர் அனுபவித்த துன்பங்கள் பற்றி நினைத்துப் பார்ப்போம், இயேசுவை விரும்பாத திருச்சட்ட அறிஞர்கள் அவர்மீது பழி சுமத்தினார்கள், ஆனால் கடவுள், தன்னையே பாவி என்ற நிலைக்கு உள்ளாக்கினார்,  நம் பாவங்களை அவரே சுமந்தார் என்றும், திருத்தந்தை கூறினார்.

தியானம், செபம், நன்றி

கிறிஸ்தவர்கள், மீட்பின் ஒளியில் திருச்சிலுவையை நோக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், இயேசு, நம் பாவச் சுமையோடு முழுவதும் தனிமையாய் இருந்தார், தன் இறைத்தந்தையே தன்னை முழுவதும் கைவிட்டுவிட்டதாக உணர்ந்தார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனை எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது எனினும், இயேசுவின் சிலுவையைத் தியானித்து செபித்து, நன்றி செலுத்துவோம் என்று மறையுரையை நிறைவு செய்தார்.

Comments are closed.