ஏப்ரல் 1 : புதன்கிழமை. நற்செய்தி வாசகம்.

மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால், நீங்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றவர்கள்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 31-42
அக்காலத்தில்
இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்றார். யூதர்கள் அவரைப் பார்த்து, “ ‘உங்களுக்கு விடுதலை கிடைக்கும்’ என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!” என்றார்கள். அதற்கு இயேசு, “பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்” என்றார்.
அவர்கள் அவரைப் பார்த்து, “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள். ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! நீங்கள் உங்கள் தந்தையைப்போலச் செயல்படுகிறீர்கள்” என்றார். அவர்கள், “நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்” என்றார்கள்.
இயேசு அவர்களிடம் கூறியது: “கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
“உண்மை விடுதலையளிக்கும்”
ஹாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக வலம்வந்தவர் மாக்ரெடி (Macready). ஒருநாள் இவரைச் சந்திக்கப் போதகர் ஒருவர் வந்தார். அவர் இவரிடம், “எனக்கு உங்களிடமிருந்து ஒரு விளக்கத்தைப் பெறவேண்டும்” என்றார். இதைக் கேட்டதும் மாக்ரெடி, “என்ன! ஒரு போதகருக்கு என்னிடமிருந்து விளக்கம் வேண்டுமா?” என்று வியப்போடு கேட்டார்.
“ஆமாம். எனக்கு உங்களிடமிருந்து ஒரு விளக்கம் வேண்டும்” என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு, “உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் புனைகதைகளைத்தான் பேசுகின்றீர்கள்; ஆனால், மக்கள் நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் பேச்சைக்கேட்க கூட்டம் கூட்டமாக வருகின்றார்கள். நானோ உண்மையைத்தான் பேசுகின்றேன். அப்படியிருந்தும், என்னுடைய போதனையைக் கேட்பதற்கு மக்கள் அவ்வளவாக வருவதில்லையே!” என்று வருத்தத்தோடு சொன்னார் போதகர்.
அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த மாக்ரெடி, “நீங்கள் உண்மையைச் சொன்னாலும், அதைப் புனைகதையைப் போன்று சொல்கின்றீர்கள். நானே புனைகதையைச் சொன்னாலும், உண்மையைப் போன்று சொல்கின்றேன். அதனால் நான் எங்கு சென்றாலும், மக்கள் கூட்டம் கூட்டமாய் வருகின்றார்கள்” என்றார். அப்போதுதான் போதகர் தன்னுடைய தவற்றை உணர்ந்தார். அதன்பிறகு அவர் உண்மையை உரக்கச் சொன்னார். இதனால் அவருடைய போதனையைக் கேட்க, மக்கள் கூட்டம் கூட்டமாய் வரத் தொடங்கினர்.
உண்மைக்கு இருக்கும் மதிப்பே தனிதான். அது ஒருவருக்கு விடுதலையும் எல்லாவிதமான ஆசிகளையும் அளிக்கும். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, உண்மை உங்களுக்கு விடுதலையளிக்கும் என்று கூறுகின்றார். இயேசு இவ்வாறு கூறுவதன் பொருளென்ன என்பதைக் குறித்து சிந்திப்போம்.
இயேசுவின் சீடர் அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கவேண்டும்
இன்றைய நற்செய்தி வாசகம், தன்மீது நம்பிக்கை கொண்டவர்களிடம் இயேசு பேசுவதைப் போன்று தொடங்குகின்றது. இயேசு தன்மீது நம்பிக்கை கொண்டவர்களிடம், “என் வார்த்தையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்” என்கின்றார். நற்செய்தியில் வரும் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டவர்கள், அவருடைய வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதும் என்று நினைத்திருக்கக்கூடும். இப்படிப்பட்ட சூழலில் சீடர் என்பவர், இறைவார்த்தையைக் கேட்பவராக மட்டுமல்லாமல், அதைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று இயேசு சொன்னது, அவர்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்குச் சற்று அதிர்ச்சியை அளித்திருக்கும்.
புனித யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில்கூட, “இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகவும் இருங்கள்” (யாக் 1: 22) என்றுதான் இதே கருத்தைத்தான் கூறுவார். ஆகையால், இயேசுவின் சீடராக இருக்க விரும்புகிறவர், அவருடைய வார்த்தையைக் கேட்பவராக மட்டும் இல்லாமல், அதைக் கடைப்பிடிக்கின்றவராகவும் இருக்கவேண்டும்.
இயேசுவின் சீடர் உண்மையை அறிந்தவராக, உண்மையின் படி நடப்பவராக இருப்பர்
தன்மீது நம்பிக்கை கொண்டவர்களைப் பார்த்து, இயேசு தொடர்ந்து சொல்லக் கூடிய வார்த்தைகள், “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், உண்மையை அறிந்தவர்களாய் இருப்பீர்கள்; உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்பதாகும்.
இங்கு இயேசு சொல்லக்கூடிய ‘உண்மை’ என்பதை இரண்டு விதங்களில் புரிந்து கொள்ளலாம். ஒன்று, எல்லாரையும் போன்று புரிந்துகொள்ளுதல். ஒருவர் தொடர்ந்து உண்மையைப் பேசிவந்தால், அவர்மீது எல்லாருக்கும் மதிப்பு உண்டாகும். அதனாலேயே அவர் மேன்மையை அடைவார். இது ஒரு வகையான புரிதல்; ஆனால் ஆண்டவர் இயேசு சொல்ல வருவது, அதைவிட மேலானது. ஆண்டவர் இயேசு உண்மை என்று தன்னைக் குறிப்பிடுகின்றார் (யோவா 14:6). அப்படியானால், இயேசுவின் சீடர் உண்மையாம் அவரை முழுமையாய் அறிந்தவராகவும் அவருடைய விழுமியங்களுக்கு ஏற்ப வாழ்கின்றவராகவும் இருப்பர். அப்படி வாழ்கின்றபோது, உண்மையான இயேசு அவர்களுக்கு விடுதலையளிப்பார். இது இரண்டாவது விதமான புரிதல்.
இயேசுவின் சீடர் அவரை அன்பு செய்பவராக இருக்கவேண்டும்
இயேசு தன்னிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது பேசிய ‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ என்ற வார்த்தைகளைக் கேட்ட யூதர்கள், நாங்கள் யாருக்கும் அடிமையில்லை என்று அவருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு அவர்களிடம், பாவம் செய்யும் அனைவரும் பாவத்திற்கு அடிமை என்று கூறுகின்றார்.
இயேசு கூறுவதிலிருந்து இரண்டு செய்திகளை நாம் அறிந்துகொள்ளலாம். ஒன்று, உண்மையாம் இயேசுவின் வழியில் நடந்தால் நாம் பாவத்திலிருந்து விடுதலை பெறுவோம் என்பதாகும். இரண்டு, பாவ வழியில் நடக்கின்ற ஒருவர் பாவத்திற்கு அடிமையாவார் என்பதாகும். நாம் இயேசுவின் வழியில் நடந்து பாவத்திலிருந்து விடுதலையடைந்த மக்களாக இருக்கின்றோமா? அல்லது பாவ வழியில் நடந்து, அதற்கு அடிமையாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை.
‘ஒவ்வொரு மனிதரும் இயல்பிலேயே உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தோடு இருக்கின்றார்’ என்பார் சிசரோ. ஆகையால், நாம் உண்மையாம் இயேசுவை அறிந்து, அவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.