நற்செய்தி வாசக மறையுரை (மார்ச் 31)
தவக்காலம் ஐந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை
யோவான் 8: 21-30
நம்பாவிட்டால் பாவிகளாகவே சாவீர்கள்
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்திரேலியா சென்றார்கள். அங்கு அவர்கள் ஒரு வித்தியாசமான உயிரினத்தைக் கண்டார்கள். வாத்தைப் போன்று இருந்த அந்த உயிரினம் முட்டையிட்டும், அதேநேரத்தில் பாலூட்டியாகவும் இருந்தது.
இந்த அரியவகை உயிரினத்தைப் பார்த்த இங்கிலாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் மிகவும் வியந்து நின்றார்கள். இதை அவர்கள் தங்களுடைய நாட்டிற்குச் திரும்பிச் சென்று, அங்கிருந்த மக்களிடம் சொன்னபோது, யாரும் நம்பவில்லை; மாறாக, ‘அது எப்படி ஓர் உயிரினம் முட்டை இட்டு, பாலும் ஊட்டும்’ என்று நகைத்தார்கள்.
இது நடந்து சில மாதங்கள் கழித்து, மீண்டுமாக அந்த இங்கிலாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியா சென்றார்கள். இந்த முறையும் அவர்கள் முன்பு கண்ட அந்த அரியவகை உயிரினத்தைக் கண்டார்கள். இது குறித்து அவர்கள் தங்களுடைய நாட்டில் உள்ள மக்களிடம் சொல்லவேண்டும் என்பதற்காக அந்த உயிரினத்தின் உடலிலிருந்து விழுந்த ஓர் இறகை எடுத்து வைத்துக்கொண்டார்கள். ஆஸ்திரேலியாவில் வந்த வேலை முடிந்ததும், தங்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று, அங்கிருந்தவர்களிடம் அந்த அரியவகை உயிரினத்தின் உடலிலிருந்து விழுந்த இறகைக் காட்டி, அது குறித்துப் பேசினார்கள். அப்பொழுதும்கூட அந்த மக்கள் அவர்கள் சொன்னதை நம்பவேவில்லை. இதை நினைத்து ஆராய்ச்சியாளர்கள் மிகவும் நொந்துகொண்டார்கள்.
ஆம், சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் எதையும் நம்புவதே கிடையாது. இப்படிப்பட்டவர்கள் நிலை மிகவும் பரிதாபமானது என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்! நற்செய்தியில் இயேசுவுக்கும் அவரை நம்பாத பரிசேயர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாத பரிசேயர்கள்
நற்செய்தி இயேசு, “நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர முடியாது…” என்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதைக் கேட்ட பரிசேயர்கள், “…ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ” என்று பேசுகின்றார்கள். இயேசு அவர்களிடத்தில் சொன்னதை அவர்கள் புரிந்திருப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்விகுறிதான். ஏனென்றால், அவர்கள் இயேசு சொன்னதைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. புனித பவுல் உரோமையருக்கு எழுதிய மடலில் இவ்வாறு சொல்வார்: “அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்.” (உரோ 10: 17). இயேசு அறிவித்த வார்த்தைகளைப் பரிசேயர்கள் செவிகொடுத்துக் கேட்கவே இல்லை. அதனாலேயே அவர்களுக்கு இயேசுவின்மீது நம்பிக்கை ஏற்படாமல், அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள்.
இயேசுவை நம்பாவிட்டால் பாவிகளாகவே சாகவேண்டும்
பரிசேயர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாமல் போனதால், அவர்கள் பாவிகளாகவே சாகவேண்டும் என்று இயேசு கூறுகின்றார். இயேசுவை நம்பாவிட்டால் பாவிகளாகத் தான் சாகவேண்டுமா? என்ற கேள்வி நமக்கு எழலாம். ஆம், இயேசு வாழ்வின் ஊற்றாக இருந்தார் (யோவா 5:26); அவருடைய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுப்பனவாக இருந்தன. அப்படியிருக்கின்ற பட்சத்தையும் அவரையும் அவருடைய வார்த்தைகளையும் நம்பாமல் போகிறபொழுது நாம் பாவிகளாகத்தானே சாகவேண்டும்! இதைத்தான் இயேசு பரிசேயர்களைப் பார்த்துக் கூறுகின்றார். அப்படியானால் இயேசு தருகின்ற வாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கு அவரிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்வது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.
நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொள்வதற்கும் அதன்மூலம் அவர் தருகின்ற வாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கும் எவையெல்லாம் தடையாக இருக்கின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயர்களைப் பார்த்து, “நீங்கள் கீழிலிருந்து வந்தவர்கள்; நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள்” என்று குறிப்பிடுவார். ஆம், நம்முடைய ஊனியல்புகள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் அவரிடத்தில் நம்பிக்கை கொள்ளவும் தடைகளாக இருக்கின்றன. இதைத்தான் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், “மனித இயல்பை உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை” (1கொரி 2: 14) என்று கூறுகின்றார்.
ஆகையால், நாம் நம்மிடம் இருக்கின்ற ஊனியல்புகளைக் களையவேண்டும். அது மட்டுமல்லாமல், ஆண்டவர் இயேசுவிடத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் நாம் அவர் தருகின்ற வாழ்வைப் பெற முடியும். இயேசுவின் நம்பிக்கை கொண்டு வாழத் தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்’ (யோவா 3:15) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.