கடவுளின்முன் நாம் எல்லாரும் பிள்ளைகள்
கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடிநிலை குறித்து, La Stampa எனப்படும் இத்தாலிய தினத்தாளுக்குப் பேட்டியளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள், இந்நெருக்கடியிலிருந்து வெளிவர, நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
கோவிட்-19 தொற்றுக்கிருமி தாக்கம் குறித்த தன் வேதனையைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, நம் வீடுகளில் புகுந்துள்ள இருள் மறையும் என்றும், இந்நெருக்கடியால் இதயத்தில் உருவாகியுள்ள காயங்கள் மறைந்து, ஒன்றிணைந்த மனித சமுதாயம் மீண்டும் உருவாகும் என்றும் கூறினார்.
இப்போது நடக்கும் இந்த நெருக்கடிக்கு தவக்கலாம் உதவும் என்று கூறினீர்கள், அது எவ்வாறு? இவ்வேளையில் செபிப்பது மிக முக்கியமா? கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எங்கே ஆறுதலையும், ஊக்கத்தையும் தேடுவார்கள்? போன்ற கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை, நாம் எல்லாரும் கதறுகிறோம், துன்புறுகிறோம், இந்தச் சூழலைவிட்டு, முழு மனித சமுதாயமாகவே நாம் வெளிவர இயலும் என்று தெரிவித்தார்.
இதனால் நாம் ஒருவர் ஒருவரை தோழமையுணர்வுடன் நோக்கி அதன்படி செயல்பட வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, ஒளி வரும், அது, ஒவ்வொரு வீட்டிலும் வேதனை மற்றும் கவலையின் வடிவில் நுழைந்துள்ள இருளை ஒளிரச் செய்யும் என்றும் கூறினார்.,
எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இக்காலம், போருக்குப் பின்னான காலம் போன்று கொஞ்சம் தோன்றுகிறது என்றும், தாத்தா பாட்டிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் கற்றுத்தந்துள்ள பாடங்கள், இந்நாள்கள் உருவாக்கியுள்ள கடினமான சூழலின் நினைவு, மனிதர் மத்தியில் உடன்பிறந்தநிலை, ஒருபோதும் ஏமாற்றாத நம்பிக்கை ஆகிய தூண்களுடன் நாம் மனித சமுதாயத்தின் மீள்கட்டமைப்பில் ஈடுபட வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
இயேசுவின் பாஸ்கா பேருண்மை கொண்டாட்டங்கள் இணையதளம், தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியாகவே இடம்பெறவுள்ளவேளை, பக்தர்கள் பலர், இரட்டிப்பு துன்பங்களைக் கொண்டிருப்பார்களே, இந்த தொற்றுக்கிருமி பரவலுக்கு மத்தியில், இயேசுவின் உயிர்ப்பை எவ்வாறு வாழ்வது? என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, தவம், பரிவன்பு மற்றும் நம்பிக்கையில் வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.
வாழ்வில் இருளான பக்கங்களும், நேரங்களும் உண்டு என்பதை நாம் பலநேரங்களில் மறந்துவிடுகின்றோம், அத்தகைய நிலை யாருக்காவது நடக்கும் என நினைக்கின்றோம், ஆனால் தற்போதைய இருள்சூழ்ந்த காலம், எவரையும் ஒதுக்கவில்லை எனவும் திருத்தந்தை கூறினார்.
உலக அளவில் உருவாகியுள்ள இந்த நெருக்கடிநிலை, மனிதர் அனைவரும் ஒரே குழுமம் என்பதையும், உலகளாவிய மனித உடன்பிறந்தநிலை எவ்வளவு முக்கியம் என்பதையும், நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து இந்த சூழலிலிருந்து வெளிவர வேண்டும் என்பதையும் மனிதர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
Comments are closed.