குடும்பங்கள், அன்பின் வெளிப்பாடுகளைக் கண்டுகொள்ள
துன்பம் நிறைந்த இவ்வேளைகளில், ஒவ்வொரு குடும்பமும், அன்பின் புதிய வெளிப்பாடுகளைக் கண்டுகொள்ள இறைவன் நமக்கு உதவட்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில், சிறப்பாக வேண்டினார்.
கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், கடந்த சில நாள்களாக, திருத்தந்தையின் திருப்பலிகள், வத்திக்கான் ஊடகத்தால் நேரடியாக ஒளிபரப்பாகும் சூழலில், மார்ச் 16, இத்திங்களன்று, திருத்தந்தை வழங்கிய மறையுரையில், இன்றைய இரு வாசகங்களிலும் கோபம், வன்முறைக்கு இட்டுச்செல்வதைக் காண்கிறோம் என்று கூறினார்.
இயேசுவின் குரலுக்கு முதலில் செவிமடுத்த நாசரேத்து மக்கள், பின்னர், அவரை, ஊருக்கு வெளியே இழுத்துச்சென்று, மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயன்றதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யோர்தான் நதியில் ஏழுமுறை மூழ்கி எழுமாறு, எலிசாவால் கூறப்பட்டபோது, நாமானும் இறைவாக்கினர் மீது கோபம் கொண்டதை சுட்டிக்காட்டினார்.
நாசரேத்து மக்களுக்கும், நாமானுக்கும் இடையில் பொதுவாக இருந்தது, அவர்கள், இறைவனைக் குறித்து கொண்டிருந்த கண்ணோட்டம் என்று தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைவன், சாதாரண நிகழ்வுகளில் செயல்படுவதில்லை, மாறாக, அசாதாரண நிகழ்வுகளே இறைவனுக்குரியவை என்று அவர்கள் கொண்டிருந்த எண்ணமே, இக்கோபத்திற்கும், அதைத் தொடர்ந்த வன்முறைக்கும் காரணமானது என்று கூறினார்.
கர்வம் கொண்ட மக்களுக்கே கோபம் பிறக்கிறது, அவர்கள் தங்கள் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளாமல், தங்களைக்குறித்த ஒரு மாயையில் வாழ்கின்றனர் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் எளிமையைப் புரிந்துகொள்ளாதவர்கள் அவர்கள், என்று மேலும் கூறினார்.
Comments are closed.