நற்செய்தி வாசக மறையுரை (மார்ச் 16)

தவக்காலம் மூன்றாம் வாரம் திங்கட்கிழமை
லூக்கா 4: 24-30
எல்லா உயிர்களும் தன்னுயிரென பேசி மகிழ்ந்த இயேசு
நிகழ்வு
ஓர் ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவருக்கு எல்லா மக்களிடத்திலும் நன்மதிப்பும் நற்பெயரும் இருந்தன. அதே ஊரில் தீயவன் ஒருவன் இருந்தான். அவனுக்குத் துறவியைக் கொஞ்சம்கூட பிடிக்கவே இல்லை. அதனால் அவன் துறவியின் பெயருக்குக் கலங்கம் உண்டாக்க நினைத்தான். இதற்காக அவன் தக்க தருணத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தான்.
ஒருநாள் துறவி ஒரு கிராமத்துச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார். தீயவன் அவரைப் பின்தொடர்ந்துகொண்டே சென்றான். வழியில் துறவிக்குத் தாகம் எடுக்கவே, அவர் அருகிலிருந்த ஒரு குடிசைக்குச் சென்று தண்ணீர் கேட்டார். அந்தக் குடிசையோ ஒரு தாழ்த்தப்பட்டவருடைய குடிசை. இதைப் பார்த்த தீயவன், ‘துறவியின் பெயருக்குக் கலங்கம் ஏற்படுத்த இந்த ஒரு செயல் போதும்… துறவி தாழ்த்தப்பட்டவருடைய வீட்டில் தண்ணீர் குடித்தார் என்று சொல்லி அவருடைய பெயருக்குக் கலங்கம் ஏற்படுத்திவிடலாம்’ என்று மனத்திற்குள் நினைத்துக்கொண்டான்.
துறவி தாழ்த்தப்பட்டவருடைய வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு, தொடர்ந்து நடந்து சென்றார். தீயவன் அவரைப் பின்தொடர்ந்துகொண்டே சென்றான். நண்பகல் வேளையானதும், துறவிக்குப் பசிக்கத் தொடங்கிவிட்டது. அதனால் அவர் அருகில் இருந்த ஒரு கொல்லன் பட்டறைக்குள் சென்று, “சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா?” என்று அங்கிருந்த மனிதரிடம் கேட்டார். ‘ஒரு துறவி என்னுடைய வீட்டிற்கு வந்து உணவு கேட்கின்றார்; இது எவ்வளவு மேலான செயல்’ என்று வியந்துபோன அந்த மனிதர், துறவிக்குத் தன்னுடைய வீட்டிலிருந்த உணவை எடுத்துக் கொடுத்தார்.
இதைப் பார்த்துவிட்டு அந்தத் தீயவன், ‘துறவிக்கு எல்லாரும் ஒன்றுதான் போல… இப்படிப்பட்டவருடைய நற்பெயருக்கு ஒருபோதும் கலங்கம் ஏற்படுத்த முடியாது’ என்று தீயவன் தன்னுடைய மனத்தில் நினைத்தவனாய், தோல்வி முகத்தோடு திரும்பிச் சென்றான்.
இந்த நிகழ்வில் வருகின்ற துறவி எல்லாரையும் ஒன்றாய்ப் பார்த்தார்; ஒன்றுபோல் அன்பு செய்தார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எல்லா மக்களுக்கும் பணிசெய்யப் போவதாக அறிவிக்கின்றார். அது மக்கள் நடுவில் எப்படிப்பட்ட சலனத்தை ஏற்படுத்துகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பிற இனத்து மக்கள் நடுவில் பணிசெய்த இறைவாக்கினர்கள்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, நாசரேத்தில் உள்ள தொழுகைக்கூடத்திற்கு வந்து, எசாயாவின் சுருளேட்டை வாசித்து முடித்தபின்பு, இரண்டு இறைவாக்கினர்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறுகின்றார். ஒருவர் சீதோனைச் சார்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்ட இறைவாக்கினர் எலியா (1அர 17: 8-16). இன்னொருவர் சிரியாவைச் சார்ந்த நாமனை நலப்படுத்திய இறைவாக்கினர் எலிசா (2 அர 5). இயேசு சொன்ன இந்த இரண்டு இறைவாக்கினர்களுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கின்றது. அது என்ன ஒற்றுமை எனில், இரண்டுபேருமே பிற இனத்து மக்கள் நடுவில் பணிசெய்ததுதான். யூதர்கள் பிற இனத்து மக்களை நாயினும் கீழாக நினைத்தார்கள். இப்படியிருக்கையில் இயேசு அந்த இரண்டு இறைவாக்கினர்களையும் அவர்களிடம் சொன்னது, தொழுகைக்கூடத்தில் இருந்தவர்கள் நடுவில் சலசலப்பை ஏற்படுத்துகின்றது.
எல்லாருக்கும் பணிசெய்யப் போவதாய் அறிவித்த இயேசு
ஏற்கெனவே பிற இனத்து மக்கள்மீது வெறுப்போடு இருந்தவர்களிடம், பிற இனத்து மக்கள் நடுவில் பணிசெய்த இரண்டு இறைவாக்கினர்களைச் சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களைப் போன்று தானும் பிற இனத்து மக்கள் பணிசெய்யப் போவதாக இயேசு அறிவித்ததால், தொழுகைக்கூடத்தில் இருந்தவர்கள் அவரை பிடித்து, மலை உச்சியிலிருந்து தள்ளிவிடப் பார்க்கின்றார்கள்.
இயேசுவைப் பொருத்தவரையில் எல்லாரும் கடவுளின் சாயலைத் தாங்கியர்கள்; எல்லாரும் கடவுளின் அன்பு மக்கள். ஆதலால், அவர்கள் எல்லாருக்கும் கடவுளின் அன்பைக் காட்டுவதுதான் தன்னுடைய நோக்கம் என்பதை உணர்ந்து செயல்பட்டார். நம்மையும் அவ்வாறு இருக்க அழைக்கின்றார். ஆதலால், நாம் இயேசு எல்லாரையும் தன்னுடைய உயிரென நினைத்து அன்பு செய்து, அவர்களுக்குப் பணிசெய்தது போன்று, நாமும் நம்மோடு வாழ்கின்ர்ட எல்லாரையும் நம்முடைய உயிரென நினைத்து அன்புசெய்து, அவர்களுக்குப் பணிசெய்து, இயேசுவின் உண்மையான சீடர்களாவோம்.
சிந்தனை
‘மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள்’ (யாக் 2: 1) என்பார் புனித யாக்கோபு. ஆகையால் இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், எல்லாரையும் அன்புசெய்து, எல்லாருக்கும் பணிவிடை செய்யக் கற்றுக்கொள்வோம். நம்மிடத்தில் இருக்கின்ற பிரிவினையை, பிளவுகளை வேரறுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.