ஆண்டவர் கடுஞ்சிவப்பையும் வெண்மையாக்குகிறார்
காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரோனா தொற்றுக்கிருமித் தாக்கத்தால் துன்புறும் நோயாளிகளுக்காகச் செபித்ததோடு, அருள்பணியாளர்கள், நோயாளிகளைச் சந்திக்க துணிச்சலைக் கொண்டிருக்குமாறு வலியுறுத்தினார்.
கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுக்கு உதவுகின்ற நலவாழ்வுப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் போன்ற அனைவருக்காகவும் இத்திருப்பலியை ஒப்புக்கொடுப்போம் என்று கூறி, திருப்பலியைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குறிப்பாக, அருள்பணியாளர்கள் வெளியே செல்லவும், நோயாளிகளைச் சந்திக்கவும், இறைவார்த்தை மற்றும், திருநற்கருணையின் வல்லமையை எடுத்துச்செல்லவும், நலவாழ்வுப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆற்றும் பணிகளில் உடன் இருக்கவும் துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டுமென்று செபிப்போம் என்றும் கூறினார்.
இத்திங்கள்கிழமை திருப்பலியின் இறைவார்த்தை, நாம் நம் பாவங்களை ஏற்று, அவற்றை அறிக்கையிட வேண்டுமென்று நமக்குக் கற்றுக்கொடுத்தது என்று, இச்செவ்வாயன்று தன் மறையுரை ஆரம்பித்த திருத்தந்தை, பாவிகளாகிய நாம் அனைவரும், தன்னோடு உரையாட வேண்டுமென்று, இன்று, ஆண்டவர் நம்மிடம் கேட்கிறார் என்று கூறினார்.
“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம், “உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்” என்கிறார் ஆண்டவர் என்ற, இத்திருப்பலியின் முதல் வாசகமான இறைவாக்கினர் எசாயா நூல் பகுதியை மையப்படுத்தி, தன் மறையுரை சிந்தனைகளைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பாவம் நம்மை மறைந்துகொள்ளச் செய்கின்றது
நாம் செய்த காரியங்களை நினைத்து நாம் வெட்கப்படுவதால், ஆதாம், ஏவாளைப் போன்று, நம்மையே நாம் மறைத்துக்கொள்ள தூண்டப்படுகிறோம், பாவம், நமக்குள்ளே நம்மை முடங்கச் செய்கின்றது, அதற்கு மாறாக, கடவுள், அது பற்றி தன்னோடு பேசுவதற்கு, நம்மை அழைக்கிறார் என்று, திருத்தந்தை கூறினார்.
வாருங்கள் அது பற்றிப் பேசுவோம் என்று நம்மை அழைக்கும் ஆண்டவர், உன் பாவம், உனது சூழல் பற்றிப் பேசுவோம், அஞ்ச வேண்டாம், எல்லாவற்றையும் என்னால் மாற்ற இயலும், உன் வேதனைகள் முன்பாக துணிச்சல் கொள் என்று, நம் ஒவ்வொருவரிடமும் சொல்கிறார் என்றும், திருத்தந்தை கூறினார்.
சோர்ந்திருந்த ஒரு புனிதர் பற்றிய கதையையும் மறையுரையில் கூறிய திருத்தந்தை, ஆண்டவர் அவரிடம், உன் பாவங்களை என்னிடம் கொடு என்று கேட்டது பற்றியும் விளக்கினார்.
கடுஞ்சிவப்பை வெண்மையாக்குவார்
நாம் பாவிகள் இல்லை என்று பாசாங்கு செய்துகொண்டு, ஆண்டவரோடு பேசாமல் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம் என்றும் கூறியத் திருத்தந்தை, தற்பெருமையால் நம் இதயத்தின் உண்மையை மறைப்பது, ஒருநாளும் நம்மைக் குணப்படுத்தாது என்றும் விளக்கினார்.
நாம் யார் என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார், நம் செபம் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதை ஆண்டவரின் வார்த்தை நமக்கு காட்டுகிறது, நம் பாவங்களின் எதார்த்தம் பற்றியும் நாம் செபிக்கலாம், இதற்கு ஆண்டவர் உதவுவார் என்றும், அவர் கடுஞ்சிவப்பையும் வெண்மையாக்குவார் என்றும், திருத்தந்தை தன் மறையுரையில் கூறினார்.
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலி, மார்ச் 09, இத்திங்கள் முதல் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது. இச்செவ்வாயன்றும் திருத்தந்தையின் திருப்பலி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
Comments are closed.