மார்ச் 10 : நற்செய்தி வாசகம்
அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12
அக்காலத்தில், இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள்.
தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப்பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.
ஆனால் நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர் சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்படவேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.
உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
மத்தேயு 23: 1-12
“உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்கவேண்டும்”
நிகழ்வு
ஆங்கிலேய அரசின் படைத்தளபதியாக இருந்தவர் சர் பிலிப் சிட்னி என்பவர். நல்ல மனம் படைத்தவரான இவர், ஒருமுறை எதிரிநாட்டோடு போர்தொடுக்கச் சென்றபொழுது, இவருடைய படையில் இருந்த பலரும் எதிரி நாட்டுப் படையின் தாக்குதலால் இறந்துபோனார்கள்; இவருக்கும் உடலெங்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடலில் பலமில்லாத நிலையில் இவர், ‘தண்ணீர் தண்ணீர்’ என்று கத்தினார். இவருடைய சத்தத்தைக் கேட்டு, பக்கத்தில் இருந்த படைவீரர் ஒருவர் ஓடிவந்து தன்னிடத்தில் இருந்த தண்ணீரை இவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.
உடனே இவர் தண்ணீரைக் குடிப்பதற்காக, தண்ணீர் புட்டியை எடுத்து, வாயருகே கொண்டுசென்றபொழுது, சற்றுத் தொலைவிலிருந்த படைவீரர் ஒருவர் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று தீனக்குரலில் கத்துவது இவருக்குக் கேட்க, இவர் தன்னிடத்தில் தண்ணீர் கொண்டுவந்த படைவீரரை நோக்கி, “எனது தேவையை விட அவருடைய தேவை பெரிது. அதனால் அவருக்கு முதலில் தண்ணீர் கொடுங்கள்” என்றார். இவர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, தண்ணீர் வைத்திருந்த படைவீரர், தண்ணீருக்காகத் தவித்துக் கொண்டிருந்த படைவீரரிடம் அதைக் கொண்டுபோய்க் கொடுக்க, அவர் தண்ணீர் குடித்ததும் உயிர் பிழைத்துக் கொண்டார். இன்னொரு பக்கமோ, தண்ணீர் கிடைக்காமையால் பிலிப் சிட்னி இறந்து போனார்.
தான் படைத்தளபதியாக இருந்தபொழுதும் தன்னுடைய தேவவையைப் பெரிதாகக் கருதாமல், தனக்குக் கீழிலிருந்த படைவீரனின் தேவையைப் பெரிதாகக் கருதி, அதற்காகத் தன்னுடைய உயிரையும் தந்தை பிலிப் சிட்னியின் இந்தத் தியாகச் செயலைப் பாராட்டி, ஆங்கிலேய அரசாங்கம் இவருக்கு ‘சர்’ என்ற உயரிய பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
ஆம், சர் பிலிப் சிட்னி படைத்தளபதியாக இருந்தபொழுதும், ஒரு தளபதி அல்லது ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையை எல்லாருக்கும் கற்றுத் தருபவராக இருக்கின்றார். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஒரு தலைவர் அல்லது பெரியவர் எப்படி இருக்கவேண்டும் என்ற செய்தியை நமக்குக் கற்றுத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சொன்னதைப் போல் செய்யாத தலைவர்கள்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், ஆண்டவர் இயேசு பரிசேயர்களின் வெளிவேடத்தைச் சாடுவதாகவும் இரண்டாவது பகுதியில், ஒரு தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்துக் கூறுவதாகவும் வாசிக்கின்றோம்.
இயேசு வாழ்ந்த காலத்தில், ஆன்மிகத் தலைவர்களாக இருந்தவர்கள் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும். இவர்கள் தங்களிடம் அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக, மக்கள் அதைக் கடைப்பிடிக்கவேண்டும்… இதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று தேவையற்ற சட்டங்களை அவர்கள்மீது விதித்தார்கள். அந்தச் சட்டங்களை எல்லாம் இவர்கள் கடைப்பிடித்தார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. மட்டுமல்லாமல், மக்கள் பார்க்கவேண்டும், பாராட்டவேண்டும் என்றே இவர்கள் எல்லாவற்றையும் செய்துவந்தார்கள். அதனால்தான் இயேசு இவர்களைச் சாடுகின்றார்.
தலைவர் என்பவர் பிறரை முன்னிலைப் படுத்தவேண்டும்.
பரிசேயர்கள் சொல்வதைப் போன்று செய்யுங்கள்; அவர்கள் செய்வதைப் போன்று செய்யாதீர்கள் என்று சொன்ன இயேசு, ஒரு தலைவர் அல்லது பெரியவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை அடுத்ததாகக் கற்றுத்தருகின்றார். ஆம், ஒரு குழுவில், சமுதாயத்தில் பெரியவராக இருப்பவர், எல்லாரும் தனக்குத் தொண்டு செய்யவேண்டும்… பணிவிடை செய்யவேண்டும் என்று இருக்கக்கூடாது. மாறாக, அவர் எல்லாருக்கும் தொண்டு செய்யவேண்டும். இதுதான் இயேசு கூறும் செய்தியாக இருக்கின்றது.
தலைவர் அல்லது பெரியவர் தொண்டராக இருக்கவேண்டும் என்றால், எல்லாரைவிடயும் தன்னைக் கீழாக நினைத்துக்கொள்தல் கிடையாது. மாறாக, தன்னை விட மற்றவர் மதிப்புக்குரியவர் என்ற எண்ணத்தோடு வாழ்வதாகும். இத்தகைய எண்ணத்தோடு வாழ்கின்ற யாரும் மற்றவரை அடக்கவோ, ஒடுக்கவோமாட்டார். மாறாக, அவர் அவர்களுக்குப் தொண்டு செய்வார்.
ஆகையால், நாம் இயேசு விரும்புகின்ற நல்ல தலைவர்களாக, பெரியவர்களாக வாழ்வோம். அதன்வழியாக மற்றவர்களுடைய தேவைகளுக்கும் அவர்களுடைய உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, இயேசுவின் அன்புக்கு உரியவர்களாவோம்.
சிந்தனை
‘பிறர் உங்களைவிட மதிப்புக்குரியரென எண்ணுங்கள்’ (உரோ 12: 10) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் புனித பவுல் சொல்வதுபோன்று, பிறர் நம்மை விட மதிப்புக்குரியவர்கள் என எண்ணி, அவர்களுக்குத் தொண்டு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Comments are closed.