நேரடி ஒளிபரப்பில் திருத்தந்தையின் மூவேளை செப உரை
வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், ஞாயிறு மூவேளை செப உரைகளை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், COVID-19 தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நெருக்கடி நிலையால், பாப்பிறை இல்லத்தின் நூலகத்திலிருந்து தன் மூவேளை செப உரையை, ஒரு நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கினார்.
மார்ச் 8, இஞ்ஞாயிறன்று அவர் வழங்கிய மூவேளை செப உரையின் நேரடி ஒளிபரப்பில், தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறுக்குரிய நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
தோற்றமாற்றம் அடையும் நிகழ்வில், இயேசு, தன் சீடர்களை உயர்ந்ததொரு மலைக்கு அழைத்துச்சென்றார் என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை, உயர்ந்த மலை, இறைவனுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு ஓர் அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இயேசு, தன் பாடுகளில் துன்புற்ற வேளையில், அவரை மறுதலித்த பேதுருவையும், இயேசுவின் அரசில், அவரது வலப்புறமும், இடப்புறமும் அமர விரும்பிய யாக்கோபு, யோவான் ஆகிய இரு சகோதரர்களையும், இந்நிகழ்வில் பங்கேற்க இயேசு அழைத்துச் சென்றார் என்பதை சிறப்பாகக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மூவருக்கும், இறையரசின் உண்மைகளையும், தன் வாழ்வின் நோக்கத்தையும், இந்நிகழ்வின் வழியே புரியவைக்க, இயேசு முயன்றார் என்று கூறினார்.
திருமுழுக்கு, உறுதிபூசுதல் ஆகிய இரு அருளடையாளங்கள் வழியே, கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும், கிறிஸ்துவுக்கு உண்மையான சாட்சிகளாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று, தன் மூவேளை செப உரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை, தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்கு, தன்னையே கையளித்த அன்னை மரியாவுடன், நாமும் இணைந்து செபிப்போம் என்று, தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.
நேரடி ஒளிபரப்பாக திருத்தந்தை வழங்கிய இவ்வுரையைக் கேட்க, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்தோரை ஆச்சரியப்படுத்தும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுரையை முடித்தபின், தான் வழக்கமாகத் தோன்றும், பாப்பிறை இல்லத்தின் மேல்தள சன்னலில் தோன்றி, அவர்களை உற்சாகப்படுத்தினார்.
Comments are closed.