COVID-19 நெருக்கடியால், லூர்து நகர் திருத்தலத்தில்
கொரோனா தொற்றுக்கிருமி, COVID-19 உருவாக்கியுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து, இத்தாலிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் திருப்பலிகள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று, இத்தாலிய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
இத்தாலிய ஆயர் பேரவையின் பாதுகாப்பு
லொம்பார்தியா, வெனெத்தோ, எமிலியா ரொமாஞ்ஞா, சவோனா, பெசாரோ மற்றும் உர்பீனோ ஆகிய பகுதிகளில், இத்தடை, நடைமுறையில் உள்ளதென கூறும் ஆயர் பேரவையின் அறிக்கை, தொற்றுக்கிருமியின் ஆபத்து குறைவாக உள்ள இடங்களிலும், மக்கள் கூடிவருவதை கவனமாகக் கையாளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
முதியோர் இந்நோய்க்கிருமியின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக் கூடும் என்பதால், அவர்களுக்கு உதவும் வகையில், குடும்ப செபங்களை மக்கள் மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, மார்ச் 5ம் தேதி முதல், 15ம் தேதி முடிய, இத்தாலியின் அனைத்து பள்ளிகளையும், கல்லூரிகளையும் மூடும்படி, இத்தாலிய அரசு விடுத்துள்ள ஆணையை அடுத்து, அப்ருஸ்ஸோ மற்றும் மொலீஸே மறைமாவட்டத்தில், இத்தவக்காலத்தில், குழந்தைகளுக்கும், இளையோருக்கும் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக இம்மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
லூர்து அன்னை மரியா திருத்தலத்தில்…
கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியினால், ஒரே இடத்தில் 5000க்கும் அதிகமானோர் கூடிவருவதற்கு, பிரெஞ்சு அரசு தடை விதித்துள்ளதையடுத்து, லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தில், ஒரே நேரத்தில் கூட்டமாக வந்து சேரும் பக்தர்களின் திருப்பயணங்கள், காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்திற்கு வருவோரில் பெரும்பாலானோர் நோயுற்றோர் என்பதால், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று, இத்திருத்தல பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இத்திருத்தலத்திற்கு வருவோர், COVID-19 தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் தயாராக உள்ளன என்றும், பொதுவாக, அனைத்துத் திருப்பயணிகளும் பயன்படுத்துமாறு, முகக்கவசங்கள் தயாராக உள்ளன என்றும், பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்
Comments are closed.