நற்செய்தி வாசக மறையுரை (மார்ச் 06)

தவக்காலம் முதல் வாரம் வெள்ளிக்கிழமை
மத்தேயு 5: 20-26
காலிப் படகு
நிகழ்வு
லின் சீ என்றொரு துறவி இருந்தார். அவர் யாரிடத்திலும் சினம் கொள்வதே கிடையாது. இதற்கான காரணத்தை அவருடைய சீடர்கள் அவரிடம் கேட்டபொழுது, அவர் அவர்களிடம், “ஒருநாள் நான் பக்கத்திலிருக்கின்ற ஆற்றில் படகில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்படிச் சென்றுகொண்டிருக்கும்பொழுது கண்களை மூடித் தியானம் செய்துகொண்டே சென்றேன். அப்பொழுது ஏதோ ஒன்று நான் பயணம் செய்த படகின்மீது இடிப்பதுபோன்று இருந்தது. எனக்குக் கடுமையான கோபம் வந்தது. நான் கண்களைத் திறந்து பார்த்தபொழுது, எனக்கு முன்பாக ஒரு காலிப் படகு இருந்தது. ‘போயும் போயும் இந்தக் காலிப் படகின் மீதா எனக்கு கோபம் வந்தது என்று மிகவும் வருத்தப்பட்டேன்” என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டுத் தொடந்து அவர் அவர்களிடம் சொன்னார்: “சினம் கொள்கின்ற ஒவ்வொருவரும் காலிப் படகுதான். அதனால்தான் யாராவது என்மீது சினம்கொண்டாலோ அல்லது எரிந்துவிழுந்தாலோ ‘இவர் காலிப் படகுபோல’ என்று நினைத்துக்கொள்வேன். காலிப்படகான அந்த மனிதர்மீது சினம்கொண்டு, நானும் காலிப்படகாகக்கூடாது என்று அமைதியாக இருந்துவிடுவேன்.”
சினம் கொள்கின்ற ஒவ்வொருவரும் காலிப்படகுத்தான் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, சினத்தால் விளையும் கேடுகளையும் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தையும் குறித்துப் பேசுகின்றார். அவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கொலை செய்வது மட்டுமல்ல; சினம்கொள்வதுகூட குற்றம்
மலைப்பொழிவின் ஒரு பகுதியாக வரும் இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, ‘கொலை செய்யாதே’ என்ற பழைய ஏற்பாட்டுக் கட்டளைக்கு மாற்றாக புதிய கட்டளையைத் தருகின்றார். அதுதான் ‘சினம் கொள்ளாதே’ என்ற கட்டளையாகும். ‘கொலை செய்யாதே’ என்பது பத்துக்கட்டளைகளில் வருகின்ற ஒரு கட்டளையாகும் (விப 20: 13). மேலும் கொலை செய்கிறவர் எவரும் கொல்லப்பட வேண்டும் என்பது மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த கட்டளையாகும் (விப 21: 12; லேவி 24: 17). இப்படியிருக்கையில் ஆண்டவர் இயேசு “தம் சகோதரர் சகோதரிகளிடம் சினம் கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ முட்டாளே என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார். அறிவிலியே என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்” என்று கூறுகின்றார். காரணம், சினமே கொலைக்குக் காரணமாக இருக்கின்றது. அதனால்தான் இயேசு சினத்தில் பேசப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் அல்லது சினத்தில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் தண்டனை உண்டு என்று கூறுகின்றார்.
இங்கு ஆண்டவர் இயேசு கூறுகின்ற ‘எரிநரகம்’ என்பதற்கு திருவிவிலியத்தில் பாதாளம் (யோபு 24: 19; திபா 16: 10; மத் 16: 18), பள்ளத்தாக்கு (2 அர 23: 10) போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவையெல்லாம் தாங்கமுடியாத வேதனையை அளிக்கக்கூடிய இடங்கள். சினம் கொள்கிறவருக்கு மிகக் கடுமையான தண்டனை உண்டு என்பதைக் குறித்துக் காட்டவே ஆண்டவர் இயேசு ‘எரிநரகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்
ஆண்டவர் இயேசு, சினம்கொள்ளாதே என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அதற்கு மாற்றான ஒரு வழியை நமக்கு முன் வைக்கின்றார். அதுதான் நல்லுறவு ஆகும்.
யூதர்கள் ஆண்டவருக்குக் காணிக்கை செலுத்த வருவதுண்டு. அப்படி வருகின்றபொழுது, யாருக்காவது தங்கள்மீது மனத்தாங்கல் உண்டென அவர்கள் நினைவுற்றால், காணிக்கையை பலிபீடத்தின்முன் வைத்துவிட்டு, மனத்தாங்கலோடு இருப்பவரோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு காணிக்கை செலுத்துவது நல்லது என்று கூறுகின்றார் இயேசு. அதுபோன்று பழங்காலத்தில் ஒருவர் தான் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாவிட்டால், கடன்கொடுத்தவர் கடன்வாங்கியவரை சிறையில் அடைத்துவிடுவார். கடன் வாங்கியவர் கடனை திரும்பிச் செலுத்தியபின்தான், சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார். இல்லையென்றால், சிறையிலியே செய்துமடிய வேண்டியதுதான். இதற்காகவே அவர்கள் வழியில் உடன்பாடு செய்துகொள்வார்கள்.
ஆண்டவர் இயேசு இந்த உண்மையை அபப்டியே எடுத்துக்கொண்டு, ஒருவர் தன் சகோதரர் அல்லது சகோதரிடம் சினத்தில் ஏதாவது பேசியிருந்தாலோ அல்லது செய்திருந்தாலோ அவரோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்வது நல்லது. இல்லையென்றால் அவர் கடவுளின் அரியணையின் முன்பு கணக்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்கின்றார்.
ஆகையால், அழிவுக்கு காரணமாக இருக்கும் சினத்தை நம்மிடமிருந்து அகற்றிவிட்டு, வாழ்வுக்குக் காரணமாக இருக்கும் நல்லுறவை அனைவரோடும் நாம் ஏற்படுத்தி வாழ முற்படுவோம்.
சிந்தனை
‘எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்; அவர் பல தீங்குகளுக்குக் காரணமாவார்’ (நீமொ 29: 22) என்கிறது நீதிமொழிகள் நூல். ஆகையால், எல்லாவிதமான அழிவுக்குக் காரணமாக இருக்கும் சினத்தை நாம் நம்முடைய வாழ்விலிருந்து அகற்றிவிட்டு, மற்றவரோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.