செயற்கை நுண்ணறிவு குறித்து பாப்பிறை வாழ்வு கழகம்
இன்றைய வளர்ச்சிகள், குறிப்பாக, அணு வெடிப்பு, சுற்றுச்சூழல் அழிவின் வழியான வளர்ச்சி, தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சி போன்றவை, மனித குலத்தையும். வருங்காலத்தையும் மாற்றவல்லதாக இருப்பதுடன், மனிதர் தன்னையே அழிக்கும் சக்தியை தருவதாகவும் உள்ளன என கவலையை வெளியிட்டுள்ளார், திருப்பீட உயர் அதிகாரி பேராயர் வின்சென்ஸோ பாலியா.
‘கணனியில் காணப்படும் தீர்வு முறையா? செயற்கை நுண்ணறிவு (இயந்திரங்களின் நுண்ணறிவு) : ஒழுக்க நெறி, சட்டம், கல்வி’ என்ற தலைப்பில், பிப்ரவரி 26, இப்புதனும், பிப்ரவரி 27, இவ்வியாழனும் திருப்பீடத்தில் இடம்பெற உள்ள கருத்தரங்கு குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த, பாப்பிறை வாழ்வு கழகத்தின் தலைவர் பேராயர் பாலியா அவர்கள், இன்று வளர்ச்சிகள் என்ற போர்வையில் இடம்பெறுபவை, ‘வாழ்வு’ குறித்த அர்த்தத்தை திரும்பவும் நாம் சிந்திக்க அழைப்பு விடுக்கின்றன என்று கூறினார்.
இன்றைய மருத்துவ, பொருளாதார, மற்றும் சமுதாயத் துறைகளில் எடுக்கப்படும் முடிவுகள், தனிப்பட்ட மனிதர்களின் விருப்பத்திற்கு இயைந்த வகையிலும், சுயநல படிமுறை சிந்தனைகளின் வழியாகவும் எடுக்கப்பட்டு வருவதைக் குறித்து எடுத்துரைத்த பேராயர், தொழில் நுட்பங்கள் மனிதாபிமானமுடையதாக மாற்றப்பட வேண்டுமேயொழிய, மனிதாபிமானத்தை இயந்திரத்தனமானதாக மாற்ற முயலக்கூடாது என்றார்.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியில் நாம், ஒழுக்க நெறி, சட்டம், கல்வி ஆகிய துறைகளில் கொள்ள வேண்டிய பொறுப்புணர்கள் குறித்து இந்த திருப்பீட பயிற்சிக்கூடம் விவாதிக்கும் என்பதையும் பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கினார், பேராயர் பாலியா.
மனித குலத்திற்கு நன்மை தருபவை அனைத்தையும் திருஅவை ஆதரிக்கின்றது என்ற அதே கண்ணோட்டத்தில்தான், இந்த தொழில்நுட்ப நுண்ணறிவு வளர்ச்சி குறித்ததையும் திருஅவை அணுகுகிறது என்ற பேராயர், இதனால் மருத்துவ மற்றும் நலத்துறைகளில், குறிப்பாக, மனித உயிர்களை பாதுகாப்பதில் ஏற்பட உள்ள எதிர்மறை விளைவுகள் குறித்து சிந்திக்க முயல்கிறது என்றார்.
தொடர்ந்து இடம்பெற்றுவரும் மாற்றங்கள் அல்லது, வளர்ச்சிகள், மனிதகுல அடிப்படை மதிப்பீடுகளையும், ஒழுக்க நெறிகளையும் இழந்து பெறப்பட்டதாக இருக்கக் கூடாது என்ற விண்ணப்பத்தையும், பத்திரிகையாளர் கூட்டத்தில் முன்வைத்தார் பேராயர் பாலியா
Comments are closed.