நற்செய்தி வாசக மறையுரை (பிப்ரவரி 29)
திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும் சனிக்கிழமை
எசாயா 58: 9-14
“நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம் வரச் செய்வேன்”
நிகழ்வு
அமெரிக்காவில் தோன்றிய மிகப்பெரிய தொழிலதிபர் ஜான்.டி.ராக்பெல்லர். ஒருசில காரணங்களால் மன அமைதியை இழந்த இவர் நோய்வாய்ப்பட்டார். இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த சுவாமி விவேகானந்தர் இவரைச் சந்தித்தார்.
“உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த நோய் உங்களை விட்டு நீங்க வேண்டுமென்றால், நீங்கள் உங்களிடம் இருக்கின்ற செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்” என்றார் சுவாமி விவேகானந்தர். “என்ன! எனது உடைமைகளை எல்லாம் ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தால் என்னுடைய நோய் நீங்கி விடுமா…? இது என்ன சுத்தப் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே!” என்றார் ராக்பெல்லர்.
“நான் சொல்வதுபோல் செய்யுங்கள். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்று பாருங்கள்” என்று சொல்லிவிட்டு, விவேகானந்தர் அங்கிருந்து சென்றார். இதற்குப் பின்பு ராக்பெல்லர் தன்னுடைய உடைமைகளை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார்; நிதியில்லாமல் நின்றிருந்த ஒரு கல்லூரிக்கு நிதியுதவி செய்தார். இன்னும் இதுபோன்ற பல்வேறு உதவிகளைத் தேவையில் உள்ள மக்களுக்குச் செய்தார். இதனால் இவருடைய உடல்நலம் படிப்படியாக முன்னேறி, முழுமையாக நலம்பெற்றார்.
இதற்குப் பின்பு இவர் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்து, “உடைமைகளை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுங்கள் என்று நீங்கள் சொன்னபோது முதலில் நான் நம்பவில்லை; இப்பொழுது நம்புகிறேன்” என்றார். இந்த நிகழ்விற்குப் பிறகு ராக்பெல்லர் ஏழைகளுக்கும் தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் வருகின்ற ராக்பெல்லர் ஏழைகளுக்கும் தேவையில் இருந்தோருக்கும் வாரி வாரி வழங்கினார். இதனால் இவருடைய புகழ் உலகெங்கும் பரவியது. இன்றைய முதல் வாசகம் நோன்பின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து, அதன்படி நடப்போருடைய வாழ்வு மேலும் மேலும் உயர்வடையும் என்ற செய்தியை எடுத்துக் கூறுகிறது. நாம் அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
செய்யக்கூடாதவை
இன்றைய முதல் வாசகம் நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியாகவே இருக்கின்றது. நேற்றைய வாசகம் உண்மையான நோன்பு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதைக் கூறியது. இன்றைய முதல் வாசகமோ நோன்பிருக்கின்றபொழுது எவற்றையெல்லாம் செய்யவேண்டும்… எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பட்டியலிடுகின்றது. முதலில் நாம் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது எனத் தெரிந்துகொள்வோம்.
நோன்பிருக்கும் நாளில் செய்யக்கூடாதவை என, குற்றம் சாற்றுதல், பொல்லாதவை பேசுதல், சொந்த வழிகளில் செல்லுதல், சொந்த ஆதாயத்தை நாடுதல், வெற்றுப் பேச்சுப் பேசுதல் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார் ஆண்டவர். நோன்பிருக்கும் நாளில் இவற்றையெல்லாம் செய்தால், அது நோன்பிறகு அழகில்லாமல் போய்விடும் என்பதால், இவற்றையெல்லாம் செய்யக்கூடாது எனத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார் ஆண்டவர்.
செய்யவேண்டியவை
நோன்பிருக்கும்பொழுது என்னென்ன செய்யக்கூடாது என்று குறிப்பிட்ட ஆண்டவர், என்னென்ன செய்யவேண்டும் என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். அவைதான் பசித்திருப்போருக்கு நம்மையே கையளித்தல் மற்றும் வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகும்.
இங்கு வறியோர் யாரெனத் தெரிந்துகொள்வது நல்லது. வறியோர் என்றால் ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள், கைவிடப்பட்டோர்… இவர்களுடைய தேவைகளை நாம் பூர்த்தி செய்யவேண்டும். இவற்றைச் செய்யாமல், நோன்பிருப்பதில் எந்தவோர் அர்த்தமுமில்லை.
உண்மையான நோன்பு இருப்பதால் கிடைக்கின்ற ஆசிகள்
நோன்பிருக்கும்பொழுது எவற்றையெல்லாம் செய்யக்கூடாது… எவற்றையெல்லாம் செய்யவேண்டும் என்பதைக் குறித்துத் தெரிந்துகொண்ட நாம், இப்பொழுது உண்மையான நோன்பிருக்கும்பொழுது கிடைக்கின்ற ஆசிகளை நாம் தெரிந்துகொள்வோம்.
உண்மையான நோன்பிருக்கும்பொழுது, அதாவது பசித்திருப்போருக்கு நம்மையே கையளித்து, வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றபொழுது இருள் நடுவே நம் ஒளி உதிக்கும் என்றும் இருண்ட நம் நிலை நண்பகல் போல் ஆகும் என்றும் ஆண்டவர் நம்மை வழிநடத்துவார் என்றும் மண்ணுலகின் உயர்விடங்களில் நம்மை வரச் செய்வார் என்றும் அறிந்துகொள்கின்றோம். ஆம், இறைவன் நம்மிடம் சொன்னது போன்று நாம் நோன்பிருக்கும்பொழுது, அதனால் பெறுகின்ற ஆசிகளை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது. அந்தளவுக்கு இறைவன் நம்மைத் தன்னுடைய ஆசியால் நிரப்புவார். ஆதலால், நாம் நம்முடைய சொந்த ஆதாயத்தை நாடாமல் உண்மையான முறையில் நோன்பிருப்போம். அதன்மூலம் அவர் தருகின்ற ஆசியை நிறைவாகப் பெறுவோம்.
சிந்தனை
‘உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்’ (ஓசே 6:6) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் நோன்பின் மையமாக இருக்கும் இரக்கத்தையும் அன்பையும் நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.