திருநீற்றுப் புதனன்று கறுப்பு நிற உடைகளை அணியுங்கள்
நைஜீரியாவில், கடத்தலிலும், வன்முறைக் குற்றங்களிலும் பலியானவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் அடையாளமாக, திருநீற்றுப் புதனன்று கத்தோலிக்கர் கறுப்பு நிற உடைகளை அணியுமாறு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Augustine Akubeze அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நிலவும் பாதுகாப்பற்றதன்மைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில், தவக்காலத்தின் ஆரம்பமாக நடைபெறும், செப பேரணி நாளில், கத்தோலிக்கர் கறுப்பு நிற உடைகளை அணியுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
திருஅவையின் அறநெறி கடமையின் ஓர் அங்கமாக நடைபெறும் இச்செப பேரணியில், கறுப்பு ஆடைகளை அணிய இயலாதவர்கள், கைகளில் கறுப்புத் துணிகளைக் கட்டிக்கொண்டு வருமாறு ஆயர் கூறியுள்ளார்.
ஆயர்களின் இந்த அறிக்கை, பிப்ரவரி 26, திருநீற்றுப் புதன் திருவழிபாட்டில் நைஜீரியாவின் அனைத்து ஆலயங்களிலும் வாசிக்கப்படும் எனவும், இப்பேரணி அதே நாளில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இயங்கும் போக்கோ ஹராம் இஸ்லாமிய தீவிரவாத குழுவினர், கிறிஸ்தவர்களை, அடிக்கடி கொடூரமாய் கொலை செய்கின்றனர் மற்றும், பிணையல் தொகைக்காக, இடைவிடாது கிறிஸ்தவர்களைக் கடத்திச் செல்கின்றனர்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடப்படுகின்றனர் என்று கூறும் ஆயர்களின் அறிக்கை, நாட்டில் பாதுகாப்பையும், நிலையான தன்மையையும் பாதுகாப்பதற்கு நைஜீரிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, உலகளாவிய சமுதாயம் உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
Comments are closed.