திருத்தந்தையரின் தலைமைப்பணிக்கு கடவுளுக்கு நன்றி
திருத்தூதர் பேதுருவிடமும், அவரின் வழிவருபவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள தூதுரைப்பணிக்காக கடவுளுக்கு நன்றிகூர்வோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.
திருத்தூதர் புனித பேதுருவின் தலைமைப்பீடம் விழாவான, பிப்ரவரி 22, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தையரின் தலைமைப்பணி பற்றி, #ChairOfSaintPeter என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“புனித பேதுரு மற்றும், அவரின் வழிவருபவர்கள், நாடுகள் மத்தியில், இறைமக்களை ஒன்றுசேர்ப்பதற்காகவும், பிறரன்பு மற்றும், உண்மையில், மீட்பின் பாதையில் நடத்திச் செல்வதற்காகவும், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மறைப்பணிக்கு, புனித பேதுருவின் தலைமைப்பீடம் விழாவன்று கடவுளுக்கு நன்றிகூர்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.
பாரி நகரில் திருத்தந்தை
மேலும், “மத்தியதரைக்கடல் பகுதி, அமைதியின் எல்லை” என்ற தலைப்பில் இத்தாலிய ஆயர்கள் பேரவை, பாரி நகரில் நடத்துகின்ற நிகழ்வையொட்டி, பிப்ரவரி 23, இஞ்ஞாயிறு காலையில் அந்நகர் சென்று, ஆயர்களுக்கு உரை நிகழ்த்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு காலை 8.30 மணிக்கு ஆயர்களுக்கு உரையாற்றும் திருத்தந்தை, காலை பத்து மணியளவில் ஆயர்களோடு இணைந்து திருப்பலி நிறைவேற்றி, மத்தியதரைக்கடல் பகுதியில் அமைதி நிலவ இறைவேண்டல் செய்வார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.