பிப்ரவரி 21 : நற்செய்தி வாசகம்

என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழப்பவர், அதைக் காத்துக்கொள்வர்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 34- 9: 1
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பார் எனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப் படுவார்” என்றார். மேலும் அவர் அவர்களிடம், “இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
மாற்கு 8: 34-9:1
“தம் வாழ்வையே இழப்பாரெனில்…”
நிகழ்வு
கல்லறைத் தோட்டத்தில் வேலைபார்த்து வந்த ஒருவர், தன்னுடைய வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தார். அப்பொழுது நான்கு சக்கர வண்டியில் வந்த ஒருவர், வண்டியிலிருந்து கீழே இறங்கி, “ ஐயா! என்னுடைய வண்டி பஞ்சராகிவிட்டது. பக்கத்தில் ஏதாவது மெக்கானிக் ஷாப் இருக்கின்றதா…?” என்றார். “இன்னும் இரண்டு மைல் தூரம் நடந்துசென்றால் ஒரு மெக்கானிக் ஷாப் இருக்கின்றது” என்றார் பெரியவர்.
“என்ன! இன்னும் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லவேண்டுமா…? என்னுடைய வாழ்வில் நூறு அடிகூட .எடுத்து வைத்ததில்லை… எல்லாவற்றிற்கும் கார்தான். என்னுடைய வீட்டில் ஆறு கார்கள் இருக்கின்றன” என்றார் வண்டியில் வந்தவர். “வீட்டில் ஆறு கார்கள் இருக்கின்றனவா…? நீங்கள் என்ன அவ்வளவு பெரிய பணக்காரரா…?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் பெரியவர். “பின்ன! என்னுடைய வீட்டைச் சுற்றிப் பார்க்கவே ஒரு மணிநேரம் ஆகும். இது மாதிரி ஆறு வீடுகள் இருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் என்னிடத்தில் வேலை பார்க்கின்றார்கள். மூன்று பெட்ரோல் நிலையங்கள், பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடுகின்றன. இப்பொழுது புரிகின்றதா நான் எவ்வளவு ஆள் என்று” என்று சொல்லி முடித்தார் வண்டியில் வந்தவர்.
பெரியவர் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். பிறகு அவர் அந்த செல்வந்தரிடம், “ஐயா! உங்களிடம் நான் ஒன்றைக் கேட்டால், நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்தானே…?” என்றார். “என்ன என்று கேளும். தவறாக எடுக்கமாட்டேன்” என்று செல்வந்தவர் சொன்னதும், பெரியவர் அவரிடம், “ஐயா! ஒருவேளை நீங்கள் மட்டும் எனக்கு முன்பாக இறந்தீர்கள் எனில், உங்களுடைய கல்லறையைத் தோண்டுவதற்கான பாக்கியத்தை எனக்குத் தருவீர்களா…?” என்றார். “கல்லறைக்குழியைத் தோண்டுவதில் என்ன பாக்கியம் இருக்கின்றது” என்று செல்வந்தர் சொன்னதும், பெரியவர், “அது வேறொன்றுமில்லை ஐயா. உங்களுடைய அருமை பெருமை அறிந்தவன் நான். அதனால் உங்களுடைய அந்தஸ்திற்கு ஏற்றாற்போல் குழி தோண்டுவேன்” என்றார். செல்வந்தர் ஒரு வினாடி யோசிக்கத் தொடங்கினார். பின்னர் அவர் பெரியவரிடம், “சவக்குழியில் என்ன அந்தஸ்து வேண்டிக்கிடக்கின்றது!” என்றார்.
“ஐயா! இப்பொழுது சொன்னீர்களே! இதுதான் உண்மை. ஒருவர் வசதி வாய்ந்தவர் என்பதற்காக அவருக்குப் பெரிய குழியோ, ஒருவர் வசதி குறைந்தவர் என்பதற்காக அவருக்குச் சிறிய குழியோ தோண்டுவதில்லை. எல்லாருக்கும் ஒரே மாதிரிக் குழிதான். ஆறடி நீளம், இரண்டடி அகலம்தான்” என்றார் பெரியவர். இதைக் கேட்ட செல்வந்தவர் எதுவும் பேச முடியாதவராய் நின்றார்.
ஆமாம், ஒரு மனிதர் பணம், பொருள், புகழ் என அத்தனையும் சம்பாதித்துவிட்டு தன்னுடைய வாழ்வை இழப்பாரெனில், அதனால் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? ஒரு பயனும் இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. இன்றைய வாசகம் உலக வாழ்க்கையின் நிலையாமையையும் இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒருவர் என்ன செய்யவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. இந்த இரண்டையும் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உலக வாழ்க்கையின் நிலையாமை
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னைப் பின்பற்றி வருகின்றவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது முன்னால், இந்த உலக வாழ்க்கையின் அல்லது உலக இன்பத்தின் நிலையாமைக் குறித்துத் தெரிந்துகொள்வோம். இன்றைக்கு எத்தனையோ மனிதர்கள் பணத்தையும் பொருளையும் சேர்ப்பதற்கும், பெயரையும் புகழையும் அடைவதற்கும் எவ்வளவோ போராடி உழைக்கின்றார்கள். இவர்கள் எல்லாவற்றையும் சேர்த்தபின்பு அல்லது அடைந்தபின்பு வாழ்நாளே முடிந்துபோய்விடுகின்றது. இப்படி எல்லாவற்றையும் சேர்த்தபின்பு வாழ்வைத் தொலைவிட்டால், அதனால் பயன் கிடைக்கும் என்ற கேள்வியைத்தான் இயேசு கேட்கின்றார். இது மிகவும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு கேள்வியாக இருக்கின்றது.
இயேசுவின் சீடராக இருக்க ஒருவர் என்ன செய்யவேண்டும்?
உலக வாழ்க்கை அல்லது உலக இன்பத்தின் நிலையாமை அறிந்துகொண்ட பின்னணியில், இயேசுவின் சீடராக இருக்க ஒருவர் என்ன செய்யவேண்டும் எனத் தெரிந்துகொள்வது நல்லது. இயேசு கூறுகின்றார், “என்னைப் பின்பற்ற எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.” ஆம், இயேசுவின் சீடராக இருக்கின்ற ஒருவர் தன்னலத்தைத் துறத்தல், தம் சிலுவையைத் தூக்கிச் செல்தல், இயேசுவைப் பின்தொடர்தல் என்ற மூன்று செயல்களைச் செய்யவேண்டும். இவற்றை ஒருவர் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்தால் அவர் இயேசுவின் சீடராக இருப்பார் என்பது உறுதி. நாம் இயேசுவின் உண்மையான சீடர்களாக இருக்கின்றோமா? அல்லது உலகப் போக்கின் படி வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்ப்டும்’ (மத் 6: 33) என்பார் இயேசு. ஆகையால், நாம் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்வதை விடுத்து, இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழ முற்படுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.