சிலுவை வரை செல்லும் சீடர்களின் பயணம்
அவமானங்கள் நிறைந்த பாதையில் இயேசு பயணம் செய்ததைப்போல, அவரது சீடர்களாகிய கிறிஸ்தவர்களும் பயணம் செய்யவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 20, இவ்வியாழனன்று, தன் மறையுரையில் கூறினார்.
தன் உறைவிடமான சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று, இயேசு, தன் சீடரை நோக்கி கேள்வி எழுப்பிய நிகழ்வை மையப்படுத்தி, திருத்தந்தை தன் மறையுரையைப் பகிர்ந்துகொண்டார்.
‘மேலே ஏறிச்செல்ல’ விழைவது தவறு
இயேசுவை அறிதல், அறிக்கையிடுதல், அவரது பாதையைப் பின்பற்றுதல் ஆகிய மூன்றும் ஒவ்வொரு சீடருக்கும் வழங்கப்பட்டுள்ள அழைப்பு என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவமானம் மிகுந்த இப்பாதையை விடுத்து, வாழ்வில் ‘மேலே ஏறிச்செல்ல’ விழையும் பொதுநிலையினர், அருள்பணியாளர்கள், ஆயர்கள், திருத்தந்தை அனைவரும் தவறிழைக்கின்றனர் என்று எடுத்துரைத்தார்.
புனித பேதுருவைப்போல, இயேசுவை, ‘மெசியா’ என்று அறிக்கையிடுவதற்கு, தந்தையாம் இறைவனின் அருள் நமக்குத் தேவை என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உண்மையை அறிக்கையிட, நாம் தூய ஆவியாரின் துணியை எப்போதும் நாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிலுவை வரை செல்வது அவசியம்
இயேசுவை ‘மெசியா’ என்று அறிக்கையிடுவதோடு கிறிஸ்தவர்களின் பணி நிறைவு பெறுவதில்லை, மாறாக, இயேசுவைத் தொடர்ந்து, சிலுவைவரைச் செல்வதே, கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பு என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
Comments are closed.