இறைவனின் அருளை பாதுகாப்பதே புனிதத்துவம்
சட்டத்தை நிறைவேற்ற மட்டுமல்ல, மாறாக, இறையருளை நமக்கு வழங்கவும் இயேசு இவ்வுலகிற்கு வந்தார், என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு, இஞ்ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து, நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சட்டத்தைக் கடைபிடிப்பது என்பது வழக்கமாக மேற்கொள்ளப்படும் சடங்காக இல்லாமல், திடமான உடன்பாட்டுடன் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இறையருளின் உதவியுடன் நாம் எதையும் ஆற்றமுடியும் என்பதையும் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதத்துவம் என்பது இறைவனின் அருளை பாதுகாப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என மேலும் எடுத்தியம்பினார்.
சட்டத்தை நிறைவேற்ற மட்டுமல்ல, மாறாக, நாம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றவும், நம் சகோதரர், சகோதரிகளை அன்புகூரவும் தேவையான இறை அருளையும் நமக்கு வழங்க இயேசு வந்தார் என, தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உங்களுக்கு இவ்வாறு சொல்லப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், என இயேசு கூறுவது, பழையனவற்றை ஒழிப்பதாக அல்லாமல், அதன் உள் அர்த்தங்களை ஆழமாக புரிந்துகொள்ள உதவுவதாக உள்ளது என எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சட்டங்களை இதயத்தில் தாங்கி செயல்படவேண்டும், ஏனெனில், நல்லவையும் தீயவையும் நம் இதயத்திலிருந்தே பிறக்கின்றன, என மேலும் கூறினார்.
நாம், நம் சகோதரர், சகோதரிகளை அன்புகூர மறுக்கும்போது, உடன்பிறந்த உணர்வுடன்கூடிய பிறரன்பை கொல்கிறோம் என்றுரைத்தத் திருத்தந்தை, இறைவனின் அருளைப் பெற்றுள்ள இதயங்கள் அனைத்தும், பிறருடன் கூடிய உறவில் நேர்மையுடன் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
கட்டளைகளைக் கடைப்பிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல என்பது, இறைவனுக்கும் தெரியும் என்பதால்தான், அவர் அன்பின் உதவியை நமக்கு அருள்கிறார், அதாவது, நமக்கு இறையருளை வழங்க இவ்வுலகிற்கு இறங்கி வந்தார், எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், இந்த இறையருளின் உதவியுடன் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதுடன், நம் சகோதர சகோதரிகளை அன்புகூரவும் முடியும் என மேலும் எடுத்துரைத்தார்
Comments are closed.