இறைவனிடம் நம் தேவைகளுக்காக மன்றாடுவதோடு மட்டும் நம் செபங்கள் வரையறுக்கப்படக் கூடாது, மாறாக, ஓர் இறைவேண்டல், உலகளாவிய கூறைக் கொண்டிருந்தால் மட்டுமே, அது உண்மையாகவே கிறிஸ்தவ செபமாக அமையும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.
ஓர் உண்மையான கிறிஸ்தவ இறைவேண்டல் என்பதன் பொருளை, பிப்ரவரி 15, இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில், இவ்வாறு பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“சிறாரே, நம்பிக்கை”
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறாரை ஊக்கப்படுத்தி எழுதிய குறுஞ்செய்திகள் கொண்ட தொகுப்பு, “சிறாரே, நம்பிக்கை (I Bambini sono speranza)” என்ற தலைப்பில், ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14, இவ்வெள்ளியன்று, உரோம் நகரில், வத்திக்கானின் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனையில், இந்நூலை வெளியிட்டு பேசிய, நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் புதிய தலைவரான, கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள், சிறார் இல்லாத இடங்களில், வருங்காலமே கிடையாது என்று கூறினார்.
மகிழ்வு, ஆற்றல், மற்றும் வாழ்வு பற்றிய உருவங்களை முழுவதும் கொண்டிருக்கும் இந்நூல், தூய்மையான காற்றின் சுவாசம் என்று கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பீன்சில் தனது இமுஸ் கிராமத்தில் தன் குழந்தைப்பருவத்தை நினைவுபடுத்துகின்றது என்று கூறினார்.
தொலைக்காட்சி பெட்டிகள் இல்லாத அக்காலத்தில், மாலைவேளைகளில், தன் தாய், சிறார்க்கு எளிய நூல்களை வாசித்து காட்டுவார் என்றும், இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறாரிடம் நேரிடையாகப் பேசுகின்றார் என்றும் கூறினார், கர்தினால் தாக்லே.
சிறார் தாராளமனதுடன் இருக்கவும், அழுவதற்கு அஞ்ச வேண்டாமெனவும், வாழ்வில் நல்லது ஆற்றவேண்டுமெனவும், மகிழ்வாக ஆடிப்பாட வேண்டுமென்றும், திருத்தந்தை, இந்நூலில் எளிய வார்த்தைகளால் சிறாரிடம் நேரிடையாகப் பேசுகிறார் என்றும், கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.
இயேசு சபையினர் நடத்தும், “La Civiltà Cattolica” இதழின் இயக்குனர் இயேசு சபை அருள்பணி Antonio Spadaro அவர்கள், இந்நூலுக்குரிய செய்திகளைத் தேர்ந்தெடுத்தார். Sheree Boyd என்பவர், இந்நூலுக்கு விளக்கம் அளித்துள்ளார். இவர், 2016ம் ஆண்டில், “அன்புக்குரிய திருத்தந்தை பிரான்சிஸ்” என்ற தலைப்பில், சிறார்க்கென ஒரு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டவர்.
Comments are closed.