பிப்ரவரி 5 : நற்செய்தி வாசகம்
சொந்த ஊரிலும் சுற்றத்திலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு.
*மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6.*
அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.
*ஆண்டவரின் அருள்வாக்கு.*
——————————————
மாற்கு 6: 1-6
*புறக்கணிப்புகளைக் கடந்து முன்னுக்கு வருவோம்*
*நிகழ்வு*
மேலை நாட்டில் ஒரு நாடக ஆசிரியர் இருந்தார். அவர் பல நல்ல நாடகங்களை எழுதினார்; ஆனாலும் ஏனோ அவர் எழுதிய நாடகங்களைப் பதிப்பிக்க எந்தவொரு பதிப்பகத்தாரும் முன் வரவில்லை. இதனால் சாப்பிட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்ட அந்த நாடக ஆசிரியர் மனமுடைந்து போய், தான் எழுதிய நாடகங்களை எல்லாம் ஒரு மூட்டையில் வைத்துக் கட்டி, அதை ஒரு மளிகைக் கடைக்காரரிடம் எடைக்கு எடை விற்றுவிட்டார். மளிகைக் கடைகாரரும் அவர் விற்ற ஏட்டிலிருந்து ஒவ்வொரு பக்கமாகக் கிழித்து பொட்டலம் போடத் தொடங்கினார்.
இதற்கிடையில் ஒருநாள் மளிகைக் கடைகாரர் அந்த ஏட்டிலிருந்து ஒரு பக்கத்தைக் கிழித்துப் பொட்டலம் போடும்பொழுது, அதில் எழுதப்பட்டிருந்ததைத் தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. அப்பொழுதுதான் அவருக்குத் தெரிந்தது, இத்தனை நாள்களும் தான் பொட்டலம் போடுவதற்குப் பயன்படுத்தியது, சாதாரண ஏடு கிடையாது; அற்புதமான நாடகங்கள் அடங்கியிருக்கின்ற ஏடு என்று. உடனே அவர் மிஞ்சிய ஏடுகளைச் சேகரித்துக் கொண்டு, ஒரு நல்ல பதிப்பகத்தாரிடம் கொண்டுசென்று, அவற்றைப் பதிப்பிக்குமாறு சிபாரிசு செய்தார். பதிப்பத்தாரும் அந்த ஏடுகளைப் படித்துப் பார்த்துவிட்டு, ‘இவற்றைக் கட்டாயம் பதிப்பிக்கவேண்டும்” என்று ஏடுகளில் இருந்த நாடகங்களை எல்லாம் பதிபித்தார்.
இதனால் அந்த நாடக ஆசிரியருக்குப் பெயரும் புகழும் செல்வமும் கிடைத்தன. இப்படி மக்களால் தொடக்கத்தில் புறக்கணிக்கப்பட்டு, பின்னாளில் மிகப்பெரிய நாடக ஆசிரியராக விளங்கியவர் வேறு யாருமல்ல, இப்சன் என்பவரே ஆவார்.
நாடக ஆசிரியர் இப்சனைப் போன்றுதான் இன்றைக்கு எத்தனையோ கலைஞர்கள், திறமைசாலிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் எல்லாம் கைகூடி வருகின்றபொழுது, பேரும் புகழும் பெறுவார்கள் என்பது உறுதி இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சொந்த ஊர் மக்களால் புறக்கணிக்கப்படுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு தம் சொந்த ஊரில் புறக்கணிக்கப்படுவது நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் வெளியடையாளங்களைப் வைத்து மதிப்பிட்ட அவருடைய சொந்த ஊர்மக்கள்
இயேசு கப்பர்நாகுமிலிருந்து தன் சொந்த ஊராகிய நாசரேத்துக்கு வருகின்றார். அங்கு அவர் வழக்கம்போல் தொழுகைக் கூடத்திற்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார். இயேசுவின் போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்த மக்கள் சிறிதுநேரத்திலேயே, “இவர் தச்சர் அல்லவா! இவருடைய தாய் மரியா தானே!” என்று அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றார்கள்.
இயேசுவை அவருடைய சொந்த ஊர் மக்கள் புறக்கணித்ததற்கு மிக முக்கியமான காரணம், அவருடைய வெளித்தோற்றம் மற்றும் அவருடைய அருகாமையே என்று சொல்லலாம்.. மக்கள் இயேசுவை ஒரு சாதாரண மனிதராக, மரியின் மைந்தராக, தங்களோடு பழகியவராகவே பார்த்தார்கள். அதனால் அவர்கள் புலன்களுக்கு அப்பால் இருந்த உண்மைகளைக் காணத் தவறியவர்களாகவும் அவரை இறைமகன் என ஏற்றுக்கொள்ளத் தவறியவர்களாகவும் ஆனார்கள். இதனால் இயேசுவுக்கு எந்தவோர் இழப்பும் ஏற்பட்டதா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. அது எப்படிப்பட்ட இழப்பு என்பதைத் தொடந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
*நம்பிக்கையின்மையால் நலம்பெறாமை*
இயேசுவின் சொந்த மக்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததைக் கண்டு இயேசு வியப்புறுகின்றார். இதற்கு முந்தைய பகுதியில் (மாற் 5: 21-43) தொழுகைக்கூடத் தலைவரான யாயிரும் பன்னிரு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணியும் இயேசுவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு இயேசுவிடமிருந்து ஆசியைப் பெறுவார்கள். ஆனால், இங்கு இயேசுவின் சொந்த ஊர்மக்கள் அவரிடம் நம்பிக்கை கொள்ளாமல் இருக்கின்றார்கள். இதனால் இயேசு அங்கு உடல்நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்து நலமாக்குவதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் செய்ய இயலவில்லை என்று வாசிக்கின்றோம். ஆம், மக்களுடைய நம்பிக்கையில்லாத தன்மை, அவரை வல்ல செயலைச் செய்யவிடாமல் செய்துவிடுகின்றது.
அப்படியானால் நாம் இயேசுவிடமிருந்து நன்மைகளைப் பெற அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. நாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா? அல்லது அவருடைய சொந்த ஊர் மக்களைப் போன்று அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றோமா? சிந்திப்போம்.
*சிந்தனை*
‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று’ (திபா 118: 22) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் இயேசுவைப் போன்று மக்களால் புறக்கணிக்கப்பட்டாலும், மனம்தளர்ந்துவிடாமல், தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.