உலகப் பொருளாதார மாநாட்டில், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு
நாம் வாழும் காலத்தில் நிகழ்ந்துவரும் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு நாம் எவ்விதம் பதிலிருக்கிறோம் என்பதன் அடிப்படையில் நாம் தீர்ப்பிடப்படுவோம் என்று கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், சனவரி 22, இப்புதனன்று, உலகப் பொருளாதார மாநாட்டில் கூறினார்.
தாவோஸ் நகரில் நடைபெற்றுவரும், உலகப் பொருளாதார அமைப்பின் 50வது மாநாட்டில், சமயத் தலைவர்கள் சார்பில் பேசிய முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், சுற்றுச்சூழல் சீரழிவை மீண்டும் சமநிலைக்குக் கொணர, பணிவு, மதிப்பு, ஒருங்கிணைதல் ஆகியப் பண்புகளைக் கொண்ட ஆன்மீகக் கண்ணோட்டம் தேவைப்படுகிறது என்று கூறினார்.
நாம் இன்று சந்திக்கும் சுற்றுச்சூழல் நெருக்கடி, இயற்கையாக உருவானது என்று சொல்வதைக் காட்டிலும், மனிதர்களாகிய நாம் இவ்வுலகைக் காணும் கண்ணோட்டத்தாலும், அதன் விளைவாக நாம் இவ்வுலகை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தும் அமைந்துள்ளது என்று, முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவை குறித்து என்ன செய்யவேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தும், அந்த முயற்சிகளை மேற்கொள்ள நமக்கு உறுதியான மனநிலை இல்லாததே, பெரும் குறையாக உள்ளது என்பதை, முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.
சுற்றுச்சூழல் நெருக்கடியைப் பொருத்தமட்டில், நாம் அனைவரும், காலம் என்ற கடலில், ஒரே படகில் பயணம் செய்கிறோம் என்ற உருவகத்தைப் பயன்படுத்திப் பேசிய முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், நாம் விட்டுச் செல்லும் உலகில், நமக்கு அடுத்த தலைமுறையினர் வாழப்போகின்றனர் என்பது, நமக்கு முன் உள்ள கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்று கூறினார்
Comments are closed.