ஜனவரி 23 : நற்செய்தி வாசகம்

இறைமகன் நீரே” என்று தீய ஆவிகள் கத்தின. இயேசு தம்மை வெளிப்படுத்த வேண்டாமெனச் சொன்னார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-12

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத்திலிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர். மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார். ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந் தனர். தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, “இறைமகன் நீரே” என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
பேரழிவைக் கொண்டுவந்து சேர்க்கும் பொறாமை

நிகழ்வு

மிகப்பெரிய மறைப்போதகரான டி. எல்.மூடி சொல்லக்கூடிய ஒரு கதை. ஒரு காட்டில் கழுகு ஒன்று இருந்தது. அது அதே காட்டில் இருந்த இன்னொரு கழுகின்மீது பொறாமையோடு இருந்தது. அதற்கு முக்கியமான காரணம், அந்தக் கழுகு இந்தக் கழுகைவிட மிக உயரமாகப் பறந்தது என்பதால்தான்.

இப்படி இருக்கையில் ஒருநாள் அந்தக் காட்டிற்கு வேடன் ஒருவன் வந்தான். அவனிடம் சென்ற இந்தக் கழுகு, தன்னை விட உயரமாகப் பறக்கும் கழுகை எப்படியாவது வீழ்த்தவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டது. அதற்கு வேடன் கழுகிடம், “நான் உயரமாகப் பறக்கும் அந்தக் கழுகை அம்பினால் குறி வைத்து அடித்து வீழ்த்தவேண்டும் என்றால், உன்னுடைய இறகுகளில் ஒன்றை என்னுடைய அம்பினில் வைத்துக் கட்டியாக வேண்டும். அப்பொழுதுதான் அம்பானது உயரமாகச் சென்று, மேலே பறந்து கொண்டிருக்கும் அந்தக் கழுகினை வீழ்த்தும்” என்றான். கழுகும் அதற்குச் சரியென்று சொல்லிக்கொண்டு, தன்னிடத்தில் இருந்த இறகு ஒன்றை வேடனுக்குக் கொடுத்தது.

வேடன், கழுகு கொடுத்த இறகினை தன்னுடைய அம்பினில் பொருத்திவிட்டு உயரே பறந்துகொண்டிருந்த கழுகைக் குறிபார்த்து எய்தான். அவன் எய்த அம்பு குறி தவறவே, மேலே பறந்துகொண்டிருந்த கழுகு தப்பித்தது. உடனே வேடன் தன்னருகில் இருந்த கழுகிடம், “இந்த முறை குறி தவறிவிட்டது… அடுத்த முறை நிச்சயம் அந்தக் கழுகைக் குறிபார்த்து அடித்துவிடலாம்… அதனால் இன்னோர் இறகைத் தா, அந்தக் கழுகைக் குறிபார்த்து அடித்துவிடலாம்” என்றான். கழுகும் அவன் கேட்டுக்கொண்டதற்கேற்ப இன்னோர் இறகைத் தந்தது. அந்த இறகை தான் வைத்திருந்த அம்பில் பொருத்தி, மேலே பறந்துகொண்டிருந்த கழுகை நோக்கிக் குரிபார்த்தது செய்தான் வேடன். ஆனால், இந்த முறையும் அவன் எய்த அம்பு குறிதவறி இன்னொரு பக்கம் செல்ல, கழுகு தப்பித்தது.

இப்படி ஒவ்வொருமுறையும் அவன் எய்த அம்பு குறிதவற, அவன் தன்னருகில் இருந்த கழுகிடம் ஒவ்வோர் இறகாகக் கேட்டுவாங்கி, தன்னிடம் இருந்த அம்பில் பொருத்தி, மேலே பறந்துகொண்டிருந்த கழுகை நோக்கி எய்துகொண்டே இருந்தான். இதனால் கீழே இருந்த கழுகின் இறகுகள் ஒவ்வொன்றாகக் காலியானதே ஒழிய, மேலே பறந்துகொண்டிருந்த கழுகு வீழ்த்தப்படவில்லை. ஒரு கட்டத்தில் கீழே இருந்த கழுகின் உடலில் இருந்த இறகுகள் எல்லாம் காலியானதும், அது பறக்கமுடியாமல் நின்றது. இதுதான் சமயம் என்று வேடன் தன்னிடமிருந்து ஓர் அம்பை எடுத்து, அதைக் குறிபார்த்து அடித்துக் கொன்றுபோட்டான். இவ்வாறு இந்தக் கழுகு இன்னொரு கழுகைக் கொல்ல நினைத்து, அதுவே செத்து மடிந்தது.

ஒருவரிடமிருந்து இருக்கும் பொறாமை, அவருக்கு எந்தளவுக்கு ஆபத்தாக அமைக்கின்றது என்பதை இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் தாவீதின் மீது பொறாமையோடு அலையும் சவுலைக் குறித்து வாசிக்கின்றோம். அவரிடம் இருந்த பொறாமை அவருக்கு எந்தளவுக்கு ஆபத்தாய் அமைகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாராயிரம் பேரைக் கொன்றார்

தாவீது, இஸ்ரயேலரின் படைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த பெலிஸ்தியனாகிய கோலியாத்தைக் கொன்றுவிட்டு வீடு திரும்புகின்றபொழுது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலும் இருந்த பெண்கள் ஆடிப் பாடி அவரையும் சவுலையும் வரவேற்றார்கள். அப்படி வரவேற்கும்பொழுது, ‘சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாராயிரம் பேரைக் கொன்றார்’ என்று சொல்லி வரவேற்றார்கள். இது சவுலின் உள்ளத்தில் பொறாமையை ஏற்படுத்துகின்றது.

சவுல், திருமுழுக்கு யோவானைப் போன்று (யோவா 3: 30) தனக்குப் பின் வரும் தாவீது வளரட்டும் என்று நினைத்திருக்கலாம்; ஆனால், அவர் அப்படி நினைக்காமல், தன்னுடைய ஆட்சியை தாவீது பறித்துவிடுவாரோ என்று அஞ்சுகின்றார். அதனால் பொறாமை கொள்கின்றார். பொறாமையினால் அவரைக் கொலைசெய்யவும் துணிகின்றார். நீதிமொழிகள் நூல் இவ்வாறு சொல்கின்றது; “சின வெறியோ எழும்புறுக்கியாகும்.” (நீமொ 14: 30). சவுல் தாவீதின் மீதுகொண்ட பொறமை, சினமாக மாறி, அவரைக் கொல்வதற்கும் ஏற்பாடுகளைச் செய்ய வைக்கின்றது.

ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக இருப்பவர் சவுலின் மகனாகிய யோனத்தான். சவுலுக்குப் பின் அரசுரிமை யோனத்தானுக்குதான் வந்திருக்க வேண்டும் (அரசனுடைய மகன் அரசன் என்ற முறைப்படிப் பார்த்தால்). யோனத்தானோ ஆண்டவருடைய அருள்பொழிவு தாவீதுக்குக் கிடைத்திருக்கின்றது… அதனால் அவர்தான் அரசராக வேண்டும் என்று தாவீதின் பொறாமைப்படாமல், அவருக்கு நல்ல நண்பாக இருக்கின்றார். நாம் சவுலைப் போன்று பொறாமையோடு இல்லாமல், யோனத்தானைப் போன்று அன்போடும் நட்போடும் இருப்பது சிறப்பு.

சிந்தனை

‘பொறாமையும் சீற்றமும் உன் வாழ்நாளைக் குறைக்கும்’ (சீஞா 30: 24) என்கிறது சீராக்கின் ஞான நூல். ஆகையில் நம்மிடம் இருக்கும் பொறாமையை வேரறுத்து, அன்போடும் நட்போடும் வாழப்பழகுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.