ஜனவரி 19 : நற்செய்தி வாசகம்
இதோ கடவுளின் செம்மறி! இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34
இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப் பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார். தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
இயேசு என்னும் கடவுளின் ஆட்டுக்குட்டி
நிகழ்வு
ஒரு சமயம் மிகச்சிறந்த பிரசங்கியாரான – மறையுரையாளரான சார்லஸ் ஸ்பெர்ஜன் (C.H.Spurgeon), இலண்டனில் உள்ள கிறிஸ்டல் அரண்மனையில் மறையுரை ஆற்றுவதற்கு சிறப்பு அழைப்புப் பெற்றிருந்தார். மறையுரை ஆற்றுவதற்கு முந்தைய நாள் இவர் தன்னுடைய நெருங்கிய நண்பரைக் கூட்டிக்கொண்டு, மறையுரையாற்றும் அரங்கத்திற்குச் சென்றார். அரங்கத்தில் இவர் மறையுரை ஆற்றும் இடத்தில் நின்றுகொண்டு, தான் பேசுவது அரங்கத்தில் எங்கிருந்து கேட்டாலும் கேட்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத் தன்னுடைய நண்பரை அரங்கத்தில் ஆங்காங்கே நிற்கச் சொல்லி, “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகத்தின் பாவத்தைப் போக்குபவர்” என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டுமாக உரக்கச் சொன்னார். சார்லஸ் ஸ்பெர்ஜனின் நண்பரும், “நீர் பேசுவது அரங்கத்தின் எந்தப் பகுதியிலிருந்து கேட்டாலும் நன்றாகக் கேட்கின்றது” என்று அவரிடம் சொன்னார்.
(இன்றைக்கு இருப்பதுபோன்று தெளிவான ஒலி அமைப்பு (Sound System) அன்றைக்குக் கிடையாது. இதனாலேயே சார்லஸ் ஸ்பெர்ஜன் தன்னுடைய நண்பரின் உதவியுடன் கிறிஸ்டல் அரண்மனையில் இருந்த அரங்கில், தான் பேசுவது எல்லா இடத்திலும் கேட்கின்றதா என்று சோதித்துப் பார்த்தார்.
சார்லஸ் ஸ்பெர்ஜனும் அவருடைய நண்பரும் அரங்கில் ஒலியமைப்பைக் குறித்துச் சோதித்துப் பார்த்த பின்னர், அங்கிருந்து நகர்ந்து சென்றனர். இதற்கிடையில், அந்த அரங்கின் கூரையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பணியாளர் ஒருவர் சார்லஸ் ஸ்பெர்ஜன் மீண்டுமாக மீண்டுமாகச் சொன்ன வார்த்தைகளால் தொடப்பட்டார். ‘இயேசு உலகின் பாவத்தைப் போக்குகின்றார் என்றால், அவர் என்னுடைய பாவத்தையும் போக்குவார்தானே! அப்படியானால், நான் என்னுடைய பாவ வாழ்க்கையிலிருந்து விலகி, இயேசுவிடம் சரணடைந்து, புதியதொரு வாழ்க்கை வாழவேண்டும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, புதிய மனிதனாக வாழத் தொடங்கினார்.
இயேசு நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்குப் புதுவாழ்வு தருகின்றார். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய இறைவார்த்தையும் குறிப்பாக நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. ஆதலால் நாம், இயேசு எப்படி நம்முடைய பாவங்களைப் போக்கி, நமக்குப் புதுவாழ்வு தருகின்றார் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உலகின் பாவங்களைப் போக்கும் இயேசு
நற்செய்தியில், இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட திருமுழுக்கு யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என்கின்றார். திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்துத் தன் சீடர்களிடம் இவ்வாறு சொன்னது, அவர்களுக்குப் பாஸ்கா ஆட்டினையும் (விப 12) குற்றம்நீக்கப் பலிக்காக ஒப்புக்கொடுக்கப்படும் ஆட்டினையும் (லேவி 14: 12, 21,24; எண் 6:12) நினைவுபடுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
எருசலேம் திருக்கோயிலில் காலை, மாலை என இரண்டு வேளையிலும் குற்றம்நீக்கப் பலியாக ஆடுகள் பலிகொடுக்கப்பட்டன (விப 29: 38-42). திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவைப் பற்றி மேலே சொன்ன வார்த்தைகள், இயேசுவை உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற ஆட்டுக்குட்டியாக நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறுகின்ற “(அவர்) அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும்…” (எசா 53:7) என்ற வார்த்தைகள் இந்த உண்மையை இன்னும் தெளிவாக்குகின்றன.
இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி, திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவை, “கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று சொல்லிவிட்டு, “இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என்று சொல்கிறார் அல்லவா. இதில் “பாவத்தைப் போக்குபவர்” என்று என்பதை இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம் என்பதுதான். ஒன்று, இயேசு உலகிலிருந்து பாவத்தை எடுத்துவிட்டதாகவும் (Take away) இரண்டு, இயேசு உலகின் பாவத்தை, துன்பத்தை எப்படிச் தன்மேல் சுமந்துகொண்டாரோ (எசா 53:4) அதுபோன்று சுமந்துகொண்டார் (Take Up) என்றும் புரிந்துகொள்ளலாம்.
ஆம், இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருடைய பாவத்தை பாவத்தையும் தன்மேல் சுமந்துகொண்டு, நமக்கு மீட்பளித்தார்.
உலகிற்கு வாழ்வுதரும் இயேசு
இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவை உலகின் பாவங்களைப் போக்குபவர் என்று சுட்டிக்காட்டுகின்ற அதே வேளையில், அவரை உலகிற்கு வாழ்வுதருபவராகச் சுட்டிக்காட்டுகின்றது. அது எப்படி என்று சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சான்று பகரும்பொழுது, நானோ தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கின்றேன்… இயேசுவோ தூய ஆவியாரால் திருமுழுக்குக் கொடுப்பார் என்று கூறுகின்றார். தூய ஆவியால் திருமுழுக்கு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாகத் தன் சீடர்களிடம், “இன்னும் சில நாள்களில் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்” (திப 1:5) என்பார். இயேசு சொன்னது போன்றே அவர்கள் பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெற்றார்கள். இங்கு தூய ஆவியால் திருமுழுக்கு என்பதை பழைய பாவவாழ்விற்கு இறந்து, கிறிஸ்துவின் உடலில் ஓர் உறுப்பாக மாறுவது என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம் (1கொரி 12:13). கிறிஸ்துவின் உடலில் ஒரு உறுப்பாக மாறிவிட்டோம் என்றால், நாம் புதுவாழ்வு அடைந்துவிட்டோம் என்பதுதான் உண்மையான அர்த்தமாக இருக்கின்றது.
ஆகையால், இயேசு தரும் தூய ஆவியினால் திருமுழுக்கின் மூலம் நாம் அனைவரும், அதிலும் குறிப்பாக அவர்மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் புதுவாழ்வினைப் பெறுவார்கள் என்பது உறுதி.
திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவைச் சுட்டிக்காட்ட அழைப்பு
இயேசுவை உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியாக, தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுத்து நமக்கு வாழ்வளிப்பவராகச் சுட்டிக்காட்டும் இன்றைய நற்செய்தி வாசகம், நமக்கோர் அழைப்பினை விடுக்கின்றது. அது என்ன அழைப்பெனில் எனில், இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்குச் சுட்டிக்காட்டுவதாகும்.
திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவை, “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று தன்னுடைய சீடர்களுக்குச் சுட்டிக்காட்டினார். மட்டுமல்லாமல், இப்படிப்பட்ட பணியினை அவர் மிகுந்த தாழ்ச்சியோடு செய்தார். அவர் நினைத்திருந்தால், “நான்தான் மெசியா” என்று சொல்லியிருக்கலாம். மக்களும் அதனை ஏற்றுகொள்ளத் தயாராக இருந்தார்கள் (யோவா 1:19); ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், மெசியாவைச் சுட்டிக்காட்டுபவராக செயல்படுகின்றார். அதுவும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு செயல்படுகின்றார்.
Comments are closed.