இறைவார்த்தைக்கு பிரமாணிக்கத்துடன் சான்று பகர அழைப்பு
ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறாகிய, இம்மாதம் 26ம் தேதி சிறப்பிக்கப்படும், “முதல் இறைவார்த்தை ஞாயிறு” பற்றி, புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவைத் தலைவர் பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்கள், சனவரி 17, இவ்வெள்ளியன்று, செய்தியாளர் கூட்டத்தில் விவரித்தார்,
“இறைவார்த்தை ஞாயிறு” உருவாக்கப்பட்டது மற்றும், அந்த ஞாயிறு சிறப்பிக்கப்படும் முறை குறித்து விளக்கிய பேராயர் பிசிக்கெல்லா அவர்கள், உலகெங்கும் வாழ்கின்ற கத்தோலிக்கர் அனைவரும், கடவுள் மீதும், அவரது வார்த்தை மீதும் ஆழ்ந்த அன்பும், மதிப்பும் கொண்டு, அதற்கு பிரமாணிக்கத்துடன் சான்று பகருமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறினார்.
இதன் காரணமாகவே, திருத்தந்தை, ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறை, இறைவார்த்தை ஞாயிறாக உருவாக்கினார் என்றும், இறைவார்த்தையைக் கொண்டாடவும், படிக்கவும், உள்வாங்கவும் ஒரு சிறப்பு நாளாக, அந்நாளைக் கடைப்பிடிக்குமாறு திருத்தந்தை விரும்புகிறார் என்றும், இவ்வாண்டு அந்நாள் சனவரி 26ம் தேதி இடம்பெறுகின்றது என்றும், பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் கூறினார்.
சனவரி 26, ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தை ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றுவார் என்று பேராயர் அறிவித்தார்.
Knock அன்னை மரியா
அச்சமயத்தில், திருப்பலி பீடத்தில், அயர்லாந்து நாட்டு Tuam பேராயர் Michael Neary, திருத்தல அதிபர் அருள்பணி Richard Gibbons, திருத்தல பாடகர் குழு உட்பட, திருப்பயணிகள் குழு கொண்டுவரும் அந்நாட்டுப் பாதுகாவலராகிய Knock அன்னை மரியா திருவுருவம் வைக்கப்படும் என்றும், பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் கூறினார்.
1879 ஆண்டு அயர்லாந்தின் Knock எனும் நகரில் அன்னை மரியா காட்சியளித்தபோது, அவருடன் புனித யோசேப்பும், நற்செய்தியாளரான திருத்தூதர் யோவானும் இருந்தனர் என்றும், இந்தக் காட்சியில் இம்மூவரும் மௌனமாக இருந்தனர் எனினும், புனித யோவானின் கரங்கள், பலிபீடத்திலிருந்த செம்மறியின் பேருண்மையைச் சுட்டிக்காட்டன என்றும், இக்காட்சி நற்செய்தி அறிவிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது என்றும் எடுத்துரைத்தார், பேராயர் பிசிக்கெல்லா.
இத்திருப்பலியில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க அமர்வுகள் அனைத்திலும் பயன்படுத்தப்பட்ட திருப்பலி வாசக நூல் (Lectionary), மிகவும் ஆடம்பரமாக அரங்கேற்றம் செய்யப்படும் என்றும், திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றாட வாழ்வின் பல்வேறு நிலைகளைக் குறிக்கும் முறையில், நாற்பது பேருக்கு விவிலியத்தை வழங்குவார் என்றும், பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் கூறினார்.
Comments are closed.