நீர் விரும்பினால், உம்மால் முடியும்” – எளிய இறைவேண்டல்
நீர் விரும்பினால், உம்மால் முடியும்” என்று, தொழுநோயாளர் ஒருவர், இயேசுவிடம் கூறியது, ஆழ்ந்த நம்பிக்கையில் உருவான ஓர் எளிய இறைவேண்டல் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 16, இவ்வியாழனன்று, தன் மறையுரையில் கூறினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், காலை திருப்பலியாற்றிய திருத்தந்தை, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள, இயேசு, தொழுநோயாளரைக் குணமாக்கும் நிகழ்வை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார்.
உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த இறைவேண்டுதல்
தொழுநோயாளர் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுப்பிய அந்த இறைவேண்டுதல், இயேசுவை எவ்விதம் தொட்டது என்பதையும், அவர் அதற்கு எவ்விதம் பதிலிறுத்தார் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.
பரிவு என்பது, மற்றவர்களின் வேதனையில் தன்னையே இணைத்துக்கொள்வதிலிருந்து ஆரம்பமாகிறது என்று, தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் பல இடங்களில், இயேசு, இத்தகையப் பிரிவுடன் செயலாற்றியதைக் காணமுடிகிறது என்று எடுத்துரைத்தார்.
இயேசுவை நம்மருகே வாழவைக்கும் பரிவு
“இயேசு, தொழுநோயாளர் மீது பரிவு கொண்டார்” என்ற நற்செய்தியின் கூற்றை நாம் அடிக்கடி நமக்குள் கூறுவது பயனளிக்கும் என்று கூறியத் திருத்தந்தை, அத்தகைய பரிவு, இயேசுவை நம்மருகே எப்போதும் வாழவைக்கிறது என்று கூறினார்.
நன்னெறிகளையும் சட்ட திட்டங்களையும் மக்களுக்கு உரைகளாக வழங்குவதற்காக, இயேசு, இவ்வுலகிற்கு வரவில்லை, மாறாக, நம்முடன், எப்போதும் தங்கி, தன் பரிவை நமக்கு வெளிப்படுத்தவே அவர் வந்தார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.
“நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்பது போன்ற மிக எளிய இறைவேண்டுதல்களை நாம் அடிக்கடி கூறிவந்தால், நமது உள்ளத்தின் நோய்கள், நாம் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவை நீங்கும் என்று, திருத்தந்தை, தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார்.
Comments are closed.