உலகம் முழுவதும் அமைதிக்காக செப நாள்களை உருவாக்குங்கள்
உலகில் அமைதி நிலவ ஒன்றிணைந்து உழைப்போம் மற்றும், அதற்காக இறைவனிடம் மன்றாடுவோம் என்று, இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு செபத்தில் ஒன்றிணைகிறோம், அனைத்து விதமான வன்முறை மற்றும், சமுதாயப் பிரிவினைகளைப் புறக்கணிக்கின்றோம் என்று கூறியுள்ள இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை, ஒருவரையொருவர் மதித்தல், நல்லிணக்கம், நன்றாகப் புரிந்துகொள்தல், பெரும் பதட்டநிலைகளைத் தவிர்ப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்தல் ஆகியவற்றுக்காக, உலகின் வல்லமை மிகுந்த நாடுகளை, குறிப்பாக, அந்நாடுகளின் ஆட்சியாளர்களை விண்ணப்பிக்கிறோம் என்று கூறியுள்ளது.
உலகில் அமைதி நிலவ ஒன்றிணைந்து செயல்படுவோம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ள, இலத்தீன் அமெரிக்க மற்றும், கரீபியன் ஆயர் பேரவை, தற்போது இருநாடுகளுக்கு இடையே கடுமையான பதட்டநிலை உருவாகியுள்ளதைக் குறிப்பிட்டு, உலகில் அமைதி நிலவ ஒன்றிணைந்து மன்றாடுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
போர், மரணத்தையும், அழிவையும் மட்டுமே கொணரும் என்று குறிப்பிட்டுள்ள இலத்தீன் அமெரிக்க மற்றும், கரீபியன் ஆயர்கள், உரையாடல் பாதைக்கும், பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கும், உலகளாவிய சட்டத்தை எந்த நிபந்தனையுமின்றி மதிப்பதற்கும், அனைத்து தரப்பினரும் முன்னுரிமை கொடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் அமைதிக்காக செப நாள்களை ஊக்குவிக்குமாறும், அமைதியின் அரசியாம் அன்னை மரியா, அமைதி எனும் கொடையை வழங்குமாறும் செபிப்போம் என இலத்தீன் அமெரிக்க மற்றும், கரீபியன் ஆயர்கள், தங்களின் அறிக்கையை நிறைவு செய்துள்ளனர்
Comments are closed.