பாலியல் முறைகேடுகளை ஒழிக்க திருத்தந்தையின் தீவிரம்
பாலியல் முறைகேடுகளை ஒழிப்பதில், ஒளிவுமறைவற்ற வழிமுறைகள், கத்தோலிக்கத் திருஅவையில், மிக உயர்ந்த நிலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் இணைச்செயலர், பேராயர் சார்ல்ஸ் ஷிக்லூனா அவர்கள் கூறினார்.
சிறார், பாலியல் முறையில் துன்புறுத்தப்படும் நிகழ்வுகளைக் குறித்து திரட்டப்பட்ட விவரங்களை வெளியிடுவதில், திருஅவை, இனி இரகசியங்களைக் காப்பாற்றாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 17, இச்செவ்வாயன்று, ஆணையொன்றை வெளியிட்டார்.
இந்த ஆணையைக் குறித்து, பேராயர் ஷிக்லூனா அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், பாலியல் குற்றங்களை முற்றிலும் ஒழிக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளின் தீவிரம், இந்த ஆணை வழியே தெளிவாகிறது என்று கூறினார்.
பாலியல் முறைகேடுகளால் சிறார் துன்புறும் வேளையில், அக்குற்றங்களை விசாரிக்க உலக அரசுகள் பின்பற்றும் வழிமுறைகளுடன், திருஅவையின் வழிமுறைகளும் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று திருத்தந்தை வழங்கியுள்ள உறுதி, இக்குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு, பெரும் ஆறுதலாகவும், சக்தியாகவும் அமையும் என்று தான் நம்புவதாக, பேராயர் ஷிக்லூனா அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
Comments are closed.