சனவரி 5 : நற்செய்தி வாசகம்

அரசரை வணங்க வந்திருக்கிறோம்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ‘யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இறவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்தும் கடவுள்
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா

I எசாயா 60: 1-6
II எபேசியர் 3: 2-3a, 5-6
III மத்தேயு 2: 1-12

எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்தும் கடவுள்

நிகழ்வு

இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள். அப்பொழுது ஒருவர் மற்றவரிடம், “கடவுள் இருக்கிறாரா?” என்றார். “ஆம். இதில் என்ன சந்தேகம்?” என்றார் மற்றவர். உடனே முதலாமவர், “கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறீர்… அப்படியானால் ஏன் அவர் ஒருவருடைய கண்களுக்குத் தென்படுவதில்லை” என்றார். இரண்டாமவரோ, “எல்லாருக்கும் தென்படவேண்டும் என்பதற்காகவே அவர் ஒருவருக்குத் தென்படாமல் இருக்கிறார்” என்றார்.

“நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை; சற்று விளக்கமாக சொல்லும்” என்று முதலாமவர் கேட்டபொழுது, இரண்டாமவர் அவரைத் தன் அறைக்கு அழைத்துச்சென்று மின்விசிறியைக் காட்டி, “இந்த மின்விசிறியில் எத்தனை இறக்கைகள் உள்ளன?” என்றார். அதற்கு முதலாமவர் “மூன்று” என்று பதிலளித்தார். பின்னர் இரண்டாமவர் மின்விசிறியை சுழலவிட்டார். அது வேகமாகச் சுழன்றது. அதைப் பார்த்துவிட்டு இரண்டாமவர் முதலாமவரைப் பார்த்து, “இப்போது மின்விசிறியில் இருக்கும் இறக்கைகள் உன்னுடைய கண்களுக்குத் தெரிகின்றனவா?”என்றார். “தெரியவில்லை. ஆனால் உணரமுடிகிறது” என்றார் முதலாமவர்.

“மிகச் சரியாய் சொன்னீர்” என்ற இரண்டாமவர், தொடர்ந்து அவரிடம் பேச தொடங்கினார்: “மின்விசிறி சுழலாமல் இருந்தபோது, அதில் உள்ள இறக்கைகள் தெளிவாகத் தெரிந்தன என்றீர். அது சுழன்றபோது இறக்கைகள் இருப்பது உனக்குத் தெரியவில்லை என்கிறீர். இதற்குக் காரணம், மின்விசிறி சுழன்றுகொண்டே இருப்பதால்தான். இதுபோன்றுதான் கடவுள். கடவுள் எங்கும் சுழன்றுகொண்டே இருக்கிறார் அல்லது அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். இப்படி அவர் எங்கும் வியாபித்திருப்பதால், உனக்கும் எனக்கும் மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கிறார். அதனாலேயே அவர் கண்களுக்குத் தென்படுவதில்லை; அவரை உணர மட்டுமே முடிகிறது.”

ஆம். கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார்; எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கின்றார். அதனாலேயே அவர் ஒருவருடைய கண்களுக்குத் தென்படுவதில்லை; அவரை உணர மட்டுமே முடிகிறது. இன்று நாம் எல்லாருக்கும் பொதுவான கடவுளாகிய இயேசு தன்னை உலகிற்கு வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கிறோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற செய்தி என்ன? இவ்விழாவிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? ஆகியவற்றைக் குறித்து இப்போது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்திய இயேசு

மத்தேயு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகளுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்துவதை குறித்துக் வாசிக்கின்றோம். இந்தக் கீழ்த்திசை ஞானிகள் அரசர்களாக இருக்கலாம் என்பதை இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், வருகின்ற, “மன்னர் உன் உதய கதிர்நோக்கி நடைபோடுவர்” (எசா 60:3) என்ற இறைவார்த்தை எடுத்தியம்புதாக இருக்கிறது. ஆம் மன்னாதி மன்னரான இயேசுவைப் பார்க்க மன்னர்கள் வந்தார்கள். அவர்களுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்தினார்.

லூக்கா நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டி நடைபெறக்கூடிய நிகழ்வுகளில், இடையர்களுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்துவதாக வாசிக்கிறோம். மத்தேயு நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, அரசர்களுக்கு அல்லது ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்துவதாக வாசிக்கின்றோம். இவையெல்லாம் நமக்கு ஓர் உண்மையை உரக்கச் சொல்வதாக இருக்கிறது. அது என்னவெனில் கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்பதாகும். ஆம். கடவுள் யூதருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கிறார். அதனாலேயே அவர் கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகளுக்கும் சமூகத்தில் மிகவும் வறியநிலையில் இருந்த இடையர்களுக்கும் தன்னை வெளிப்படுத்திகின்றார்.

இதில் வேடிக்கை என்னவெனில், எங்கோ இருந்து வந்த புறவினத்து மக்களான கீழ்த்திசை ஞானிகள் ஆண்டவருடைய திருக்காட்சியைக் கண்டார்கள்; ஆனால் எருசலேமில் இருந்த தலைமைக் குருக்களும் ஏரோது அரசனும் இயேசுவைக் கண்டு கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கியமான காரணம், கீழ்த்திசை ஞானிகள் இயேசுவை நல்ல உள்ளத்தோடு தேடினார்கள். அதனால்தான் அவர்கள் ஆண்டவர் இயேசுவின் திருக்காட்சியைக் கண்டார்கள். கொடுங்கோலன் ஏரோதைச் சார்ந்தவர்களும் இயேசுவைக் கொல்லவேண்டும் என்று தேடினார்கள். அதனால் அவர்களால் இயேசுவை கண்டுகொள்ள முடியவில்லை. நாம் எத்தகைய மனநிலையோடு இயேசுவைத் தேடுகிறோம் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பலநேரங்களில் நாம் இயேசு நல்ல மனதோடு தேடுவதில்லை; தன்னால நாட்டங்களுக்கத் தேடுகின்றோம். அதனாலேயே இயேசுவைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம். எப்பொழுது நாம் இயேசுவை நல்ல மனத்தோடு அல்லது நேர்மையான உள்ளத்தோடு தேடுகின்றோமோ (எபி 10:22) அப்பொழுது அவரைக் காண்போம் என்பது உறுதி.

பிற இனத்தவரும் இயேசுவின் உடன் பங்காளிகளாக முடியும்

ஆண்டவர் இயேசுவின் திருக்காட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்தக்கூடிய இரண்டாவது முக்கியமான செய்தி, பிற இனத்தவரும் இயேசுவின் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளுமாக மாறமுடியும் என்பதாகும்.

பிறப்பினால் இயேசு யூதர்களுக்குச் சகோதரராக இருக்கமுடியும். இத்தகைய பேறு மற்ற இனத்தவருக்குக் கிடைக்காமல் போகலாம்; ஆனால் நற்செய்தியினால் இயேசுவினுடைய உடன் உரிமையாளரும் உடன் பங்காளிகளாகவும் முடியும். அதைப் புனித பவுல் மிக அழகாகச் சுட்டிக்காட்டுகிறார். மத்தேயு நற்செய்தி பன்னிரண்டாவது அதிகாரத்தில் கூட, இயேசு இதே செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறார். அங்கு அவர், “விண்ணுலகில் இருக்கின்ற என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என்னுடைய தாயும் சகோதரரும் சகோதரியும் ஆவார்” (மத் 12:50) என்பார். அப்படியானால் நாம் நற்செய்தியின் மூலம், அதாவது இயேசு கிறிஸ்துவின் மூலம், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் மூலம் அவருடைய சகோதரர் சகோதரிகளாக மாற முடியும் என்பது உறுதி.

ஆண்டவரைத் தேடுவோருக்குக் கிடைக்கும் ஆசி

ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற மூன்றாவது மிக முக்கியமான செய்தி, ஆண்டவரைத் தேடுவோர்க்கு அவர் தரும் மகிழ்ச்சியாகும்.

கீழ்த்திசை ஞானிகள் ஆண்டவரைத் தேடி வந்தபோது அவரைக் கண்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆம் யாரெல்லாம் ஆண்டவரைத் தேடுகிறார்களோ அதுவும் நல்ல, நேர்மையான உள்ளத்தோடு தேடுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டவர் மகிழ்ச்சியும் இன்னபிற ஆசியையும் தந்து, அவர்களைத் தன்னுடைய அருளால் திரும்புகிறார். இது உறுதி. திருப்பாடல் ஆசிரியர்கூட, “சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரைத் நாடுவோருக்கு நன்மையும் எதுவும் குறைவுபடாது” (திபா 34: 10) என்று கூறுவார்.

Comments are closed.